|
|
சோதி தரும் சேதி -
இதுதான்!
கட்டுரையாளர்: மதிஒளி சரஸ்வதி (சென்னை மயிலாப்பூரில் நந்தலாலா சேவா
டிரஸ்ட் மூலம் சேவைப்பணிகள் செய்துவருபவர். நந்தலாலா கோயில் அமைத்து
பக்தர் குழாம் பெருக்கி கண்ணன் பக்தி பரப்பி வரும் ஸ்வாமினி இவர்)
ஆட்படுத்துபவனையே ஆண்டு கொண்ட கோதை, பெரியாழ்வாரையும் நம்மையும் ஆண்டு
கொண்டதால் ஆண்டா ளானாள். இதுவும் கண்ணன் விதித்ததுதான். அவனுக் கென்றே
பிறப்பெடுத்திருந்தாள் கோதை. அதைத் தானே அவனுக்கு அறிவுறுத்தித் தன்னை
அடிமை கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் காட்டி அவனை ஏற்க வைத்தாள். ஆண்டாள்
அருளிச் செய்த திருப் பாவையைத் தொல்பாவை என்று உய்யக் கொண்டார் அருளிச்
செய்கிறார். உச்சரிக் கப்படும் மந்திர சப்தங்கள் என்றும் உயிருள்ளவை. அவை
உண்டாக்கப் படுவதில்லை. அவை மறைந்தது போல் தோன்றினாலும் மீண்டும் தாமே
தோன்றக் கூடியவை. வேதம் நிகர்த்தவை.
அது மறைந்தபோது ஆண்டவன் உள்ளத்திலேயே இருந்தது. மீண்டும் அதனை ஆண்டாளின்
திருவாக்கின் மூலம் இறைவன் வெளிப்படுத்தினான். பாவை நோன்பும், திருப்பாவை
பிரபந் தமும் ஆக்கப்படவில்லை. ஆண்டவ னாலேயே அளிக்கப்பட்டது. ஆண்டாள்
கண்ணனிடம் கொண்டிருந்த காதல் வெறும் மானுடக் காதல் அல்ல. வேதாந் தங்களில்
போற்றப்படும் மேன்மையான பக்தியின் பூரணத் தெளிவு.
ஆண்டவனை அடைய எவ்வளவு துடித்தும் ஆலிலைத் துயின்றோன் அசைய வில்லை.
நினைத்துப் பார்க்கிறாள் கோதை. நிழலாகச் சென்ற அவதாரத்தின்
நினைவுகளெல்லாம் அவள் எண்ணத் தில் படர்கிறது. பிருந்தாவனமும், யமுனையும்
கோவர்த்தன மலையும் அவள் எளிதில் சென்றடையக் கூடிய தொலைவில் இல்லை.
ராசக்கிரீடையின் போது கண்ணன் மறைந்து போகிறான். உடனே அங்கிருந்த ஆயர்குலப்
பெண்கள் தங்களையே கண்ணனாகப் பாவித்து அவன் செயல் களையே தாங்களும் செய்ய
முயல் கிறார்கள்.
ஆண்டாள் கோபிகைகளைப் போன்றே நோன்பு நோற்க ஆசைப்பட்டு பாவை நோன்பு நோற்றாள்.
அவர்களைப் போன்று, செயலாக இந்த நோன்பை வடிக் காமல் மனதில் மட்டுமே
பாவனையாகக் கோதை நோன்பை நோற்றாள்.
நீலமேக வண்ணனின் நினைவில் நெகிழ்ந்தாள். அந்த நிறைவில் கோதை மகிழ்ந்தாள்.
அவன் பெருமையைப் பலவாறு புகழ்ந்தாள். அவனிடம் ஊறிய பக்தியில் தனது பாசத்தை
அகழ்ந்தாள். பாதகங்கள் தீர்த்துப் பரமனடி காட்டி வேதமனைத்துக்கும்
வித்தாகும் கோதைத் தமிழ் ஐயைந்துமைந்தாகத் திருப்பாவை யாக அவள் திருவாய்
மலர்ந்தருளினாள்.
இப்போது, எம்பெருமானார் ""திருப் பாவை ஜீயர்'' என்றே சிறப்புப் பெயர்
பெற்ற இராமாநுஜர் மிகவும் உகந்து போற்றிய திருப்பாவைப் பாசுரத்தின் பதி
னெட்டாம் பாடலைச் சற்று சிந்திப்போம்.
ஒரு செயலில் வெற்றி பெற வேண்டு மானால் நம் பிரார்த்தனை பெருமாளை மட்டுமே
சார்ந்ததாக இருக்கக் கூடாது. பிராட்டியையும் சேர்த்தே மனம் துதிக்க
வேண்டும். மனமெல்லாம் கண்ணனே யானாலும் அவன் வாழ்ந்து கொண்டி ருப்பது
நந்தகோபன் இல்லத்தில். அவன் மகிழ்ச்சியுடன் உறங்கிக் கொண்டிருப்பது
நப்பின்னையின் அணைப்பில்.
நப்பின்னையை அழைத்த பின்பல் லவோ கண்ணனை எழுப்பியிருக்க வேண்டும்! கண்ணனது
புஜபல பராக்கிர மத்தைக் கூறினால் அந்த ஆனந்தத்தில் நப்பின்னை கண்
விழிப்பாளோ என்ற ஆசையில், மதயானைகளையும் உந்தித் தள்ளுகின்ற தோள்வலி
பெற்றவன் கண் ணன் என்கிறாள். அவனுடைய தோள் வலிமை எந்த எதிர்ப்பையும் கண்டு
ஓடாது என்று கூறுகிறாள்.
கண்ணனது பிறப்பே கம்சனது எதிர்ப்பை எதிர்நோக்கியே நிகழ்ந்த தாகையால்
ஆழ்வார்களுக்கு எப்போதுமே அப்படியொரு அச்சம் மனதுக்குள். ஆகையால் அவர்களது
குடி ""அஞ்சுகுடி'' என்றே அழைக்கப்படுகிறது.
அந்தக்குடியில் பிறந்த ஆண்டாள், தந்தையார் நந்தகோபரணைப்பிலே கண்ணன்
இருப்பதால் அவனுக்கு எந்தத் தீங்கும் நிகழ்ந்துவிடாது என்று தங்களுக்
குள்ளேயே சமாதானம் செய்து கொள்வ தற்காகவும் கண்ணனது தோள் வலிமை யைப்
புகழ்கிறாள். யசோதையின் சகோதரர் கும்பர் மகள் நீளாதேவி எனப்படும்
நப்பின்னை. பெண்ணுக்குப் பிறந்த இடத்துப் பெருமையெல்லாம் புகுந்த இடத்தில்
பெயர் சொல்ல வேண்டும். அதற்கு அவளே எடுத்துக் கொண்ட எளிய வழி & தன்னை
இன்னார் மகள் என்று குறிப்பிடுவதைவிட, இன்னார் மருமகள் என்று
குறிப்பிடுவதிலேயே பெருமை கொள்வது. சீதையும் தன்னை ""ஜனகன் மகள்'' என்று
அறிமுகப்படுத்திக் கொள்வதை விட, ""தசரதன் மருமகள்'' என்று தெரிவித்துக்
கொள்வதிலேயே மனம் பூரித்தாள்.
ஆகையால் கோதை நப்பின்னையை அழைக்கும்போது ""நந்த கோபாலன் மருமகளே''
என்றழைக்கிறாள்.
ஆயர்பாடியில் கண்ணனுக்குப் பின் பிறந்த எத்தனையோ பெண்கள் மானசீக மாகக்
கண்ணனையே கணவனாக எண்ணியதால் எந்த மருமகளைக் கோதை அழைக்கிறாளோ என்று
நப்பின்னை அலட்சியமாக இருந்துவிடப் போகிறாள் என்ற பயத்தில் ""நப்பின்னாய்''
என்று குறிப்பிட்டே அழைக்கிறாள்.
பின்னர் நப்பின்னையின் கருங் கூந்தலை கந்தம் கமழும் குழலாக வருணிக்கிறாள்.
ஆம் அவளது கூந்தலில் நிறைந்திருப்பது செயற்கை மணமன்று, பரமனையே
பரிந்தணைந்து மாமாய னுக்கும் மணம் ஊட்டிய, நறுமணத்தின் ஊற்றாகவே அந்தக்
குழலைப் புகழ் கிறாள்.
""கொள்ளை மணத்தில் கூடுகட்டிக் கொண்டு நீங்கள் இருவர் மட்டும் குதூ
கலித்துக் கொண்டிருக்கும் இன்பத்தை, நீ இந்தக் கதவைத் திறந்தால் நாங்களும்
அனுபவிக்கலாமே'' என்று கோதை வேண்டுகிறாள்.
ஆத்மா அவனுடனேயே ஐக்கிய மாவதில் பெருநாட்டம் கொண்டுள்ள போது அவனையொட்டிய
எந்த நிகழ்ச்சி யும் கோதைக்கு மகிழ்ச்சியையே அளிக் கிறது. வேறு
மனத்தாங்கலின் வேதனை அங்குப் படமாகவில்லை.
விடிந்தும் விடியாத அந்தப் பொழுதைப் பார்த்துவிட்டு ""விடியட்டும்'' என்று
மீண்டும் துயில் கொள்ளப் போகிறாள் நப்பின்னை. ""கோழி கூவிற்று'' என்று
சொன்னால் ஒரு கோழியின் கூவல் மட்டும் அடையாளமன்று என்று சொல்லி விடப்
போகிறாளே என்று, ""வந்தெங்கும் கோழி அழைத்தன'' என்று சொல்கிறாள்.
அப்போதும் கோதைக்கு ஒரு சந் தேகம். கோழி விழிக்கும். ஜாமந்தோறும் கூவும்.
மீண்டும் உறங்கிவிடும். ஆகை யால், அதெப்படி பொழுது விடிந்ததன் அடையாளம்
என்று நப்பின்னை கேட்டு விட்டால்?! குயிலின் அழைப்பை நினைவு கூர்கிறாள்.
அதுவும் ஒரு குயில் அல்ல. பல குயில்கள். அவை ஒரு முறையல்ல. பலமுறைகள்
கூவியதாகக் கோதை கூறுகிறாள். இன்னமும் நப்பின்னை எழுந்து வரவில்லை.
ஆண்டாளின் மனக்கண்முன் மற் றொரு காட்சி தோன்றுகிறது. கண்ணனும்,
நப்பின்னையும் பந்தாடிக் கொண்டி ருக்கிறார்கள். கண்ணன் தோற்றுப் போகிறான்.
தான் வெற்றி பெறக் காரண மாகிய பந்தை ஒரு கையிலும், தான் வெற்றி கொண்ட
கண்ணனை மற்றொரு கையிலுமாக அணைத்துக் கொண்டு கிடக்கிறாள் நப்பின்னை.
எல்லோருக்கும் பேரானந்தம் அளிக்கும் பெருநிலையே இறைவனின் இதயக் கருணை.
இந்த உலகமே அவன் விளையாட்டிற்குகந்த இடம். நப்பின்னை கண்ணனின் பேரானந்தத்
தத்துவம், பந்து இவ்வுலக மக்களாகிய நாம் இரண்டையும் சேர்த்து வைத்த
பேருண்மைத் தத்து வத்தை இங்கே ஆண்டாள் காண்கிறாள். இதையும் கோதை எடுத்துச்
சொன்ன பின்பே, அவர்கள் அங்கு வந்ததன் காரணம் என்னவென்று, இப்பொழுது தான்
நப்பின்னை கேட்கிறாள்.
பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒருவரையொருவர் கேலி செய்வது
பிடிப்பதாயிருந்தாலும், பெண்கள் ஆண் களை அநாகரீகமாகக் கேலி செய்ய
மாட்டார்கள். அதுவும் தம் மனம் விரும் பிய ஆணை ஒரு பெண் விளையாட்டாக
மைத்துனன் முறை வைத்துக் கொண்டு கேலி செய்யும் போது அவளது நெருங் கிய
தோழிகளும் கேலி செய்வதைக் கேட்டு மகிழ்வார்கள்.
தோற்றுப் போன கண்ணனைப் பற்றி வேண்டாத குறைகளைக் கூறுகிறாள் நப்பின்னை. ""அவன்
வெண்ணெய் திருடியது, பெண்களிடம் விஷமம் செய்தது எல்லாவற்றையும் நாங்கள்
உனக்கு எடுத்துச் சொல்வோம்'' என்று எண்ணிக் கொள்கிறாள் கோதை. இது போதுமே
மனம் பூரிக்க.
உள்ளே வரும்படி அழைக்கிறாள் நப்பின்னை. ஆனால் நப்பின்னையை கண்ணனின்
கனிவுகந்த காதலியாகக் கோதை கருதியதால் அவள் கையாலேயே கதவைத் திறக்க
வேண்டுமென வேண்டுகிறாள். நப்பின்னை தானே வந்து கதவைத் திறக்கிறாள். ஆனால்
அவளது கை வளையொலி கேட்கவில்லை.
""நாங்கள்தான் கண்ணனை எண்ணி எண்ணியே இளைத்துக் கிடக்கிறோம். ஆனால் உனது
செந்தாமரைக் கை அந்தச் சீராளனின் தெய்வத் திருமேனியில் பதிந்து வளைகள்
நன்கு இறுக்கமாக உள்ளன. ஆகையால் அந்த வளையல்கள் ஒலியெழுப்ப நீ
வாயிற்கதவைத் திறந்து வர வேண்டும். அந்த ஒலியின்பம் எங்களைக் கண்ணனிடமே
அழைத்துச் செல்லும்'' என்கிறாள் கோதை.
உந்து மதகளிற்ற னோடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலீ! உன்மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
எம்பெருமானார் இராமானுஜர் இந்தப் பாசுரத்தை மிகவும் விரும்பிப் போற்றிய
தற்கு ஒரு காரணம் உண்டு. அந்தச் சுவையான நிகழ்ச்சி இதோ:
அப்பொழுது எம்பெருமானார் திருக் கோட்டியூரில் தங்கியிருந்தார். திருப்
பாவை ஜீயர்'' என்றே சிறப்புப் பெற்ற அவர் அன்று பிக்ஷைக்குப் போகிறார்.
திருக் கோட்டியூர் நம்பியின் மாளிகையின் கதவை நெருங்கி வந்துவிட்டார்.
கதவு தாளிடப்பட்டிருந்தது. எம்பெருமானாரின் வாய் இந்தப் பாசுரத்தின் கடைசி
அடியைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ""செந்தாமரைக் கையால் சீரார்
வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.''
உள்ளிருந்து பாசுர ஒலிகேட்ட திருக் கோட்டியூர் நம்பியின் மகள் தேவகி தன்
கைவளை ஓசையுடன் கதவைத் திறந் தாள். எம்பெருமானார் மனஅளவில் ஆண்டாளாகவே
மாறியிருந்தார். ஆகை யால் தன்னை எதிர்கொள்ள வந்தது நப் பின்னை நங்கை என்றே
நம்பி விட்டார்.
அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அந்தப் பெண்ணின் திருவடியில் விழுந்து
வணங்கினார். ஒரு துறவி தன்னை வணங்கியதை எண்ணித் துடித்துப் போனாள் தேவகி.
தந்தையிடம் ஓடிச் சென்று நடந்ததை நடுங்கும் குரலில் முறையிட்டாள்.
நம்பிக்கு மனக்கண் ணில் நடந்தவை விளங்கிவிட்டது. மக ளுக்குத் தைரியம் கூறி
அனுப்பிவிட்டார்.
பின்னர் எம்பெருமானார் உள்ளே வந்து அவரைச் சேவித்த போது, ""உங்கள்
வணக்கத்தை ஏற்றது உந்து மதகளிற் றனோ?'' என்று கேட்டார். ""ஆம்!'' என்று
பணிவுடன் பதிலளித்தார் அந்த பக்தர்.
வடபத்ரசாயி கண்ணனாக மாறி னான். ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடி யாக
மாறியது. கண்ணன் குடி கொண்ட கோயில் நந்தகோபரின் அரண்மனை யாகியது.
எண்ணப்படி எதனையும் மாற்ற முடியும். கற்பனையாயிருந்தாலும் அதில்
கனிந்துருகி வாழ முடியும் என்பதைக் கோதை பாவை நோன்பில் கொண்டாடி
மகிழ்ந்தாள்.
நிற்பதும், நடப்பதும், கற்பதும், கேட்பதும், சொற்பதம் ஊறச் சுவைப்பதும்
அந்தப் பொற்பதத்தான் புனிதத் திரு மலரடியே என்பதைப் புரிந்து கொள்பவர்
களுக்கு, புரிந்து கொண்டவர்களுக்கு, போனதுமில்லை, வருவதுமில்லை
நானெதுமில்லை, நாட்டமுமில்லை. போதுமென்ற மனமே அந்தச் சோதி தரும் சேதி!
|