ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப...articles@prabandham.com sriram@prabandham.com

கைத்தலம் பற்றும் கல்யாணமேடை  வாரணமாயிரம்

வைணவம் சமயம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

ரசிகமணி என்ற தமிழ்முனி
 

கட்டுரையை வரைந்திருப்பவர் திரு.தீப.நடராஜன்,
இவர் ரசிகமணியின் பெயரர்.
 

முகவரி:

எண்: 2,'பஞ்சவடி', ஹனுமந்தராயன் தெரு,

பரதன் தியேட்டர் அருகில், தென்காசி,

நெல்லை மாவட்டம் - 627 811 Ph: 04633 223194

ph: 04633 223194

 

2006 ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பொருந்திய ஆண்டு. ரசிகமணி டி.கே.சி அவர்களின் 125 ஆவது ஆண்டு.
 

ரசிகமணி அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர்கள் பிறந்த இல்லத்தில் கல்வெட்டுப் பதித்து டி.கே.சி அன்பர்களால் விழா எடுத்த ஆண்டு.

குற்றால முனிவர் என்று பேராசிரியர் கல்கி அவர்களால் போற்றப்பட்ட ரசிகமணி டி.கே.சி கடைசி பன்னிரெண்டு வருஷங்களில் தமிழ் வளர்த்த குற்றாலத்தில் ரசிகமணி டி.கே.சி நினைவு ஆலயம் நிர்மாணிக்கப்பட்ட ஆண்டு.

டி.கே.சி பார்வை என்பது ஒரு விசேஷமான பார்வை. தனித்துவமான பார்வை. அவரது அணுகுமுறையும், நோக்கும் இலக்கியத்தில் மட்டுமின்றி, இசையிலும், பிற கலைகளிலும், கல்வி, பண்பாடு, சமயம் என்று பல நிலைகளிலும் பரவி நிற்பதைக் காண முடிகிறது. ""உண்மையைக் கூசாமல் சொல்லத் தீர்த்து விடுகிற பேர்வழி நான்'' என்று ரசிகமணியே தம்மைப் பற்றி வாக்குமூலம் தந்திருக்கிறார். இப்படி உண்மையைக் கண்டு, டி.கே.சி சொல்லிக் கொண்டிருந்த காரணத்தாலேயே அவர் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் ஆளாக நேர்ந்தது.

எப்படி உண்மையைக் கண்டார் என்று கேட்டால் அவரது உள்ளுணர்வு அவருக்கு உணர்த்திற்று என்பதுதான் விளக்கமாகக் கிடைக்கிறது. இறைவன் அருள் ரசிகமணி வாயிலாக தமிழுக்கு வரமாய் வந்து சேர்ந்தது என்று சொல்லலாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் தோன்றிய தமிழறிஞர்கள் யாரும் செய்யாத, செய்யத் துணியாத, அரும் பெருங்காரியங்கள் பலவற்றைத் தமிழுக்குச் செய்துவிட்டுப் போயிருக்கும் மகான் டி.கே.சி.

அவைகளில் முதன்மையானதும், முக்கியமானதும் கவி என்பது எது என்று கண்டுணர்ந்து எடுத்துச் சொன்ன அரிய செயல் என்பதைக் கூறலாம்.

தமிழ் இலக்கிய உலகில் டி.கே.சி தோன்றுவதற்கு முன்பு செய்யுள் உருவத்தில் எழுதப்பட்ட அனைத்துமே கவிதை என்றுதான் சொல்லப்பட்டு வந்துள்ளது. கவி வேறு, செய்யுள் வேறு என்னும் வித்தியாசத்தைப் பார்க்கக் கற்றுத் தந்தவர் ரசிகமணி ஒருவர்தான்.

கம்பராமாயணம் முழுவதையும் பல ஆண்டுகள் கற்ற பின் டி.கே.சி.யின் உள்ளுணர்வு உண்மையான கம்பன் கவிகளுக்கிடையில் வெறும் செய்யுள்கள் விரவிக் கிடப்பதைக் கண்டுணரச் செய்து விட்டது.

கம்பன் கவிதை முத்திரை இல்லாத இடைச் செருகல்களை எல்லாம் நல்ல பயிருக்கு ஊறு விளைவிக்கும் களைகளைக் களைந்தெறிவதைப் போல் தூக்கி எறியும் துணிச்சல் அவருக்கு இருந்தது.

கவிதா தேவியின் & கலைமகளின் தரிசனத்தைப் பெற்று விட்டார்கள் டி.கே.சி. கம்பனோடு தொடங்கிய ரசிகமணியின் இலக்கியப் பார்வையும் ரசனையும் தமிழ்க் கவிகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்றது. அதன் பயனாக தமிழ்க் கவிகளை எத்தனையோ கவிஞர்களுடைய கவிகளை ரசிகமணி சுண்டிப் பார்த்து, பாடிப்பார்த்து, ரசித்த பின் உலகிற்கு வழங்கினார்.

நல்ல வைரமணிக் கற்கள் அவை. நாமாகக் கண்டு தெளிய முடியாத அரும்பெரும் பொக்கிஷங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யப் பிரபந்தம், ஔவையார், பட்டினத்தார், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், இரட்டைப் புலவர்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, நந்திக் கலம்பகம், கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், குற்றாலக் குறவஞ்சி, காவடிச்சிந்து இன்னும் இன்னும் என்று பலப்பல கவிஞர்களின் சிறப்பான கவிகளை டி.கே.சி. தமிழர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

அவரது விளக்கத்தோடும், பார்வையோடும், தமிழ்க் கவிகளை அணுகுவோர்க்கு ஏற்படும் அனுபவம், தனியான, மேலான, சுவையான அனுபவம் ஆகும்.

முன்னோரது படைப்பு எனும் ஒரே காரணத்திற்காக எந்தவொரு இலக்கியத்தையும், கவிதையையும், கதையையும், கருத்தையும் ரசிகமணி ஏற்றுக் கொண்டது என்பது கிடையாது. தமிழ்ச் சமுதாயமும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றே அறிவுறுத்தியும் வந்தவர் டி.கே.சி.

தேவாரப் பாடல்கள் அனைத்தையும் மொத்தமாக டி.கே.சி ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பர் சுவாமிகளது பல கவிகளை அனுபவித்து, ரசித்துப் போற்றிய ரசிகமணி ""கூற்றாயினவாறு'' என்ற முதல் பாடலை ஒதுக்கி விட்டிருப்பதைக் காண்கிறோம். தாங்கள் பெற்ற அருமைப் பிள்ளை சீராளனை பெற்றோர் இருவரும் வாளால் அரிந்தனர் என்ற கூற்றினை டி.கே.சி.யின் இதயம் ஒப்புக் கொள்ளவில்லை.

அதே போன்று பக்திப்பரவசம் மிக்க அருமையான கவிகளை அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையார் வழங்கியுள்ளாரே, அவைகளைப் படித்து அனுபவிப்பதை விட்டு விட்டு மாம்பழக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்களே புலவர்கள் என்று ஆதங்கப்பட்டவர் டி.கே.சி.

ரசிகமணியின் பேராண்மைக்குச் சான்றாக இரண்டு நிகழ்ச்சிகள்...
எண்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேநீர் விருந்துக்கு அக்கல்லூரியின் பழைய மாணவரான டி.கே.சியையும் அழைத்திருந்தனர். அப்போது சென்னை சட்டசபையின் எம்.எல்.சியாக அவர் இருந்து வந்தார். ஸ்காட்லாந்து தேசத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு வரவேற்பு நிகழ்ச்சியாக தேநீர் விருந்து கொடுக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் இந்தியத் திருநாட்டை அடிமை நாடாகக் கருதி அரசாண்டு கொண்டிருந்த காலம். இந்திய மக்கள் நாகரீக மற்றவர்கள், கல்வி அறிவில் தாழ்ந்தவர்கள் என்றெல்லாம் ஆங்கிலேயர்களுக்கு எண்ணமுண்டு.

பாதிரியாரிடம் டி.கே.சி.யை அறிமுகப்படுத்தினார்கள். ரசிகமணியிடம் பாதிரியார் ஏளனம் தொனிக்குமாறு கேட்டார்...

""ஸ்காட்லாண்ட் தேசத்திலுள்ள எங்களுக்கு மரங்கள் என்றால் ரொம்பப் பிரியம். இந்தியர்களான உங்களுக்கு எப்படியோ?''என்று கேட்டார் பாதிரியார்.

இந்தக் கேள்விக்கு டி.கே.சி சொன்ன பதில்:
""மரங்களிடத்தில் எங்களுக்குப் பிரியம் கிடையாது. நாங்கள் மரங்களிடம் பக்தியே செலுத்துகிறோம்'' என்று எவ்வித தயக்கமுமில்லாமல் டி.கே.சி. சொன்னார்.
அப்படியே அந்த பாதிரியாருக்கு விளக்கமும் தந்தார் ரசிகமணி.

"தமிழ் நாட்டிலே, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சம் உண்டு. குற்றாலத்தில் பலாமரம்; திருநெல்வேலியில் மூங்கில் மரம்; திருப்பெருந்துறையிலே குருந்தமரம் & இப்படியாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மரம் உண்டு.

தாவர வர்க்கத்துக்கு ஒவ்வொரு செடிக்கும், மரத்துக்கும் தனித்தன்மை உண்டு. அவைகளுக்குள் ஒரு ஞாபகசக்தியும் இருந்து தொழிற்படுத்துகிறது. ரோஜாச் செடியிலிருந்து ரோஜாப் பூ தான் பூக்கும்; அதற்குரிய தனியான மணமும், வர்ணமும் தான் அந்த மலரில் இருக்கும். தப்பித் தவறி எந்த ரோஜாச் செடியாவது பிச்சிப்பூவைப் பூத்து வைக்குமா? இந்த அற்புதங்களை எல்லாம் இறைத் தத்துவமல்லவா என்பதை எங்கள் முன்னோர்கள் உணர்ந்ததன் காரணமாகத்தான் ஸ்தல விருக்ஷம் என்று கோவில்கள் தோறும் வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்'' என்று டி.கே.சி. விளக்கம் கொடுத்தார். எல்லாவற்றையும் கேட்ட ஸ்காட்லாண்டுக்காரர் வாயடைத்துப் போனார்.

மற்றொரு சம்பவம்...
1947 ஆகஸ்ட் 15 அன்று மேற்கு வங்காள ஆளுநராக மூதறிஞர் ராஜாஜி பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் ரசிகமணி டி.கே.சி. அவர்களும் பேராசிரியர் கல்கி அவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது நவகாளி யாத்திரையை மேற்கொண்டிருந்தார் மகாத்மா காந்தி. தம் அருமை நண்பர் டி.கே.சி.யும் காந்திஜியும் சந்திக்க வேண்டும் என்னும் எண்ணம் ராஜாஜிக்கு எழுந்தது. இருவரையும் ராஜாஜிஅறிமுகப்படுத்தி வைத்தார். காந்தி மகானுக்கு தமிழ்ப் பாடல்கள், குறிப்பாக கம்பராமாயணப் பாடல்கள் பற்றி ஆங்கிலத்தில் விளக்கமளித்து தமிழ்க் கவிதைகளை தமக்கே உரிய அரிய முறையில் இசையோடு பாடிக்காட்டினார் டி.கே.சி.

ராம பக்தரான காந்திஜிக்கு கம்பர் கவிகள் மூலம் ராம தரிசனமே கிடைத்தது. டி.கே.சி.யின் விளக்கத்தையும் இசையுடன் அவர் பாடிய பாடல்களையும் மிகவும் ஆவலுடன் கேட்டு ரசித்து மகிழ்ந்தார் காந்தி மகாத்மா.

கடைசியில் தேசத் தந்தை காந்திஜி டி.கே.சி.யிடம் எப்படியெல்லாம் தமிழ்க் கவிதைகளை ரசித்தேன் என்பதை எடுத்துச் சொன்னார். முடிவில் ""நான் கம்பராமாயணத்தை மூலத்திலேயே படித்து மகிழ நினைக்கிறேன். அதற்கு என்ன வழி?'' என்று கேட்டார். டி.கே.சி சட்டென்று ""நீங்கள் தமிழனாகப் பிறந்து தான் வர வேணும் அதற்கு'' என்று பதில் சொன்னார்.

இவ்விரு நிகழ்ச்சிகளும் ""உண்மையைக் கூசாமல் சொல்லித் தீர்த்து விடுகிற பேர்வழி நான்'' என்று டி.கே.சி சொன்ன சொற்கள் எவ்வளவு உண்மை என்பதை நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன அல்லவா?

இலக்கியங்களிலும், புராணங்களிலும் கூறப்படும் செய்திகள் பல நம்மால் நம்பக் கூடாததாகவும், பகுத்தறிவுக்கு ஒப்புக் கொள்ள இயலாததாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

டி.கே.சி. அவர்களிடம் சென்றால் அவைகளுக்கு விளக்கம் பெறமுடியும் ""பெரிய பதவியில் உள்ளவர்களுக்கு, அந்தக் காலத்தில், பதவியின் தோரணையை எடுத்துக் காட்டுவதற்காக கிரீடத்தில் முகங்கள் மூன்றோ, பத்தோ அமையும்படி செய்வார்கள். அப்படியே தோள்ப்படலங்களையும் செய்து அணிந்து கொள்வார்கள். ஆகவே ராவணனுக்கு கோபாவேசம் உண்டாய் விட்டதால் இயல்பான முகத்தில் காணும் கோபக்குறிகளை எல்லாம் காண்பதாக, செதுக்கிய முகங்களிலும் காண்பதாக ஒரு தோற்றம் தோன்றும். இது இயல்பான மயக்கக் காட்சிதான். தோள்ப்படலங்கள் எல்லாம் குலுங்குவதாக, தோன்றியதும் பாவத்துக்கு ஒத்ததே!''

(கம்பர் தரும் ராமாயணம் & மூன்றாம் பாகம் & பக்கம் & 214)
டி.கே.சி.யின் தனித்துவமான பார்வை வாழ்வியலில் எப்படி உதவி செய்கிறது என்பதையும் பார்ப்போம்.

அறிவியல் சொற்களை தமிழில் கொண்டு வருவது குறித்த விவாதம் எவ்வளவோ ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

அறிவியலில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிர அறிவியல் சொற்களை புதிதாக உண்டாக்குவதில் காலத்தை வீணாக்கக் கூடாது என்பது டி.கே.சி. வலியுறுத்திய கோட்பாடு. அவரது கடிதத்திலிருந்து சில பகுதிகள் நமக்கு ரசிகமணியின் வாதத்தையும், ஆதங்கத்தையும் புலப்படுத்தி விடும் என்று நினைக்கிறேன்.

""கலைச் சொல் கமிட்டி'யில் சையன்ஸ் சம்பந்தம் இல்லாதவர்களே இதுவரை இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரே நோக்கம் வடமொழியை விருத்தி பண்ணிவிட வேண்டும், அல்லது தமிழை விருத்தி பண்ணிவிட வேண்டும், சையன்ஸ் எப்படியேனும் போகட்டும் & என்றுதான் எண்ணுகிறார்கள். விஷயந்தான் முக்கியம் என்று எண்ணிவிட்டால் வார்த்தைகளின் ஆதிக்கம் முன்னணிக்கு வராது.

மேல்நாட்டான் ஒரு பிள்ளையைப் பெற்றான். அதற்கு ஏதோ "விக்டர்' என்று பெயரிட்டான். நாமும் அவனை "விக்டர்' என்று சொல்லி விட்டால் தமிழ் கெட்டா போகும்? போகாது.

அதுபோல உடம்பைப் பிரித்துப் பார்த்தான். ஒரு உறுப்புக்கு "மால்பிகியன் காப்ஸியூல்' என்று ஏதோ பெயரிட்டான். நாமும் அந்தப் பெயரையே இட்டு அழைத்தால் கேடு ஒன்றும் விளைந்து விடாது. நாளடைவில் வேறு பெயர் இட்டு நம்மவர்கள் அழைக்க ஆரம்பித்தால் அதைச் சேர்த்துக் கொள்ளுகிறது.

மோட்டார் டிரைவர்களும், கிளீனர்களும் கலைச் சொற்கழகத்தின் உதவி இல்லாமலே மோட்டாரை ஒக்கிட்டு விடுகிறார்கள். ஓட்டி விடுகிறார்கள். நம்மை விட்டு வார்த்தை மோகம் என்று ஒழியுமோ தெரியவில்லை. அது ஒழிந்தால்தான், தானே சையன்ஸ் கைக்கு வரும்.

முன்னேறிய நாடெல்லாம் சையன்ஸை வாழ்க்கைக்கும், பொருள் விருத்திக்கும், சாலைத் தொழிலுக்கும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, நாம் சௌகரியமாக, சாவகாசமாகப் பிரதி பதங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாம்.
(12-7-46)

டி.கே.சி. அவர்களுக்கு நம் நாட்டின் முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறை இருந்திருக்கிறது. மக்களிடம் எவ்வளவு பரிவு என்பதெல்லாம் மேலே கண்டிருக்கும் அவரது ஆழ்ந்த சிந்தனை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இன்று அவரது கோட்பாடு நடைமுறைக்கு எந்தவித நிர்பந்தமும் இன்றி வந்திருப்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கம்ப்யூட்டர் குக்கிராமங்களிலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதையும், அதன் பயனாக அபாரமான தொழில் வளர்ச்சியை நாம் பெற்று வருவதையும் பார்த்து வருகிறோம்.
கம்ப்யூட்டர் சம்பந்தமான எல்லா வார்த்தைகளையும் அப்படி அப்படியே ஏற்றுக் கொண்டு தமிழிலும் இணைத்துக் கொண்டு விட்டதனால்தான் இத்தனை விரைவான முன்னேற்றம் நமக்கு வாய்த்திருக்கிறது என்பதில் என்ன சந்தேகம்?

ரசனைக்கு நாயகனான ரசிகமணி அவர்களின் ரசனை குறித்த ஒரு கருத்தினை அடுத்து பார்க்கலாம்.

நாமெல்லாம் இல்லத்தில் ஊதுபத்தியைக் கொலுத்தி வைத்து அனுபவிப்போம். ஆனால் எந்த இடத்தில் ஊதுபத்தியை வைக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது தானே?

காற்று எந்தப் பக்கத்தில் இருந்து நாம் அமர்ந்திருக்கும் அறைக்குள் வருகின்றது என்பதை அனுமானித்து ஊதுபத்தி ஸ்டாண்டை அங்கு வைத்தால் அறை முழுவதும் ஊதுபத்தியின் மணம் கமழும் என்பதை ரசிகமணி அறிவுறுத்தியிருக்கிறார். என்ன, மணம் வீசுகிறதா?
 

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.