|
அஷ்டபதி தந்த ஜயதேவர்
மு.ஸ்ரீனிவாஸன்
மேகைர் மேதுரம் அம்பரம் வந புவச்யாமாஸ் தமால த்ருமைர் நக்தம்
& என்று அழகிய வர்ணனையோடு தொடங்குகிறது கீதகோவிந்த காவியம். "கருமேகங்களால்
வானம் மூடப்பட்டுள்ளது. தமால மரங்களின் அடர்த்தி... பச்சிலைகளால் காடுகள்
மேலும் கருநிறம் பூண்டன. இரவு வந்தது' இந்தக் கவிதை வரிகளிலே உலகமே
மயங்குகிறது.
இதன் ஒப்பற்ற கவிதை நயம், சிறு சிறு
சொற்களில் அமைந்த அற்புதச் சித்திரம். தெளிவாகத் தெரியாத இருண்ட காடு.
அதன் அச்சமூட்டும் தன்மை என்று படிக்கப் படிக்க இந்த மாயாஜாலச் சொற்கள்
செய்யும் விந்தையில் நம் உள்ளம் திளைக்கிறது. கீதகோவிந்தம் முழுவதுமே
இப்படித் தித்திக்கும் தேனமுதம்.
கீத கோவிந்தம் என்ற ஜனரஞ்சகமான காவியத்தை எழுதியவர் ஜயதேவர். அவரது
வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ள செய்திகள் மிகக் குறைவே.
கீதகோவிந்த நூலிலேயே சில செய்திகள் உள்ளன. அவரது தாய் தந்தையர் போஜதேவர்,
ரமாதேவி. அவரது மனைவி பத்மாவதி. அவர் பிறந்த ஊர் மேற்கு வங்கத்தின்
பீர்பும் (வீரபூமி) மாவட்டத்தில் முன்னாளில் கிந்து பில்வம்
என்றழைக்கப்பட்ட இன்றைய கேண்டுலி என்ற சிற்றூர். அவர் வாழ்ந்தது கி.பி.
12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. வங்காளத்தின் கடைசி இந்து மன்னன்
லக்ஷ்மணஸேனனின் அவைக் களப் புலவராக விளங்கியவர் ஜயதேவர்.
ஜயதேவரே கீத கோவிந்தத்தின் மூன்றாவது சர்க்கம் 8 வது பாடலில் தன்
பிறப்பிடம் கிந்து பில்வம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் அந்தக்
கேண்டுலி வங்கத்திலேயே உள்ள மற்றொரு கேண்டுலி என்றும், ஒரிஸ்ஸாவில் பூரி
மாவட்டத்திலுள்ள கேண்டுலி என்றும், மிதிலையிலுள்ள கேண்டோ லி என்றும்
வேறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால் மேற்கு வங்கத்தில் அஜய்
நதிக்கரையிலுள்ள கேண்டுலியில் கடந்த 800 ஆண்டுகளாக ஜயதேவருக்கும், கீத
கோவிந்த காப்பியத்திற்கும் விழா எடுத்து வருவதிலிருந்து, அதுவே அவரது
பிறந்த ஊராக ஏற்கப்பட்டுள்ளது.
கீத கோவிந்த காவியத்திற்கு வேண்டிய கருப்பொருளை பிரும்ம வைவர்த்த
புராணத்தின் கிருஷ்ண ஜன்ம காண்டத்திலிருந்தும், ராதாகிருஷ்ண லீலைகளை
வர்ணிக்கும் தேவி பாகவதத்தின் 9 வது காண்டத்திலிருந்து சிறிதும் எடுத்துக்
கொண்டிருக்கிறார் ஜெயதேவர்.
கீத கோவிந்தத்தில் கதையம்சம் என்று பெரிதாக ஒன்றுமில்லை.
ஓர் இரவில் ராதையும் கண்ணனும்
காமத்தாலும் பிரிவுத் துன்பத்தாலும் தவித்ததும், அவர்களது உள்ளத்தில்
எழுந்த உணர்ச்சிகளும், கொந்தளிப்புகளும், பிறகு இருவரும் கூடிக் களித்து
மகிழ்ந்த அனுபவமும்தான் கீதகோவிந்த காவியம். நாயகி நாயக நிலையின் உச்ச
கட்டமாக எழுந்த காவியம். ஒரு பெரும் வைணவ பக்த கவி பாடிய பாடல்கள். ஜீவ &
பிரும்ம ஐக்யம் அல்லது ஜீவாத்மா & பரமாத்மா ஒன்றாக இணையும் ஒரு காவியம்.
பெரும்பாலான இந்த நாயகி நாயக இலக்கியத்தில் ஜீவாத்மா படுகின்ற துன்பமும்
ஏக்கமும்தான் முக்கியமாகக் காட்டப்படும். ஆனால் கீதகோவிந்தத்தில் ராதையின்
உயிரையே வாட்டும் ஏக்கத்தோடு, இறைவனே தன் பக்தையோடு கூடுவதற்குத்
தவிக்கின்ற தவிப்பையும் பார்க்கிறோம். அவனது அருளைப் பெறத் துடிக்கும்
ஆத்மாவின் அருளை அவன் வேண்டுகிறான். பக்தியில் நனைந்து மூழ்கிய ஓர் ஆன்மா,
கண்ணனாகிய இறைவனை நெஞ்சாரத் தழுவிக் களிப்பதும், அங்ஙனமே இறைவனும் ஆன்மாவை
ஏற்றுக் களிப்பதும்தான் இக்காவியம் தரும் சேதி.

கீத கோவிந்தத்தில் ஆண் பெண் உடல் உறவு பற்றிய சிருங்கார வர்ணனைகள் சற்று
மிகையாகவே காணப்படுகின்றன. ஆனால் சிறிதும் உலக வாசனையற்ற, காமச் சுவையற்ற
தெய்வீகக் காதலாகவே வைணவ உலகம் இதைக் காண்கிறது. இப்படித்தான் இந்திய
மக்களும், பன்னாட்டு அறிஞர்களும் இக்காவியத்தை ஏற்றுப் போற்றுகிறார்கள்.
பெரும் வைணவ ஆசாரியரான சைதன்ய மகாப்ரபு,
கீத கோவிந்தத்தைத் தன் உயிராகக் கருதினார். அதன் பாராயணத்தை அவர்
முழுவதுமாகக் கேட்காத நானே கிடையாதாம்.
இஸ்லாமிய படையெடுப்பில் நாடு நிலை குலைந்த போது, அதை எதிர்த்து நாட்டைக்
காத்த பெரும் சக்தி, பக்தி இயக்கமே. அது ஓங்கித் தழைத்த காலத்தில் கீத
கோவிந்தம் பிறந்தது. உடனேயே அது நாடெங்கும் பரவியது.
அந்நூல் சிறந்த பக்தி இலக்கியமென்றும், ஜயதேவர் இறையருளைப் பெற்ற பெரும்
பக்தரென்றும் போற்றப்பட்டார்.
வெறும் சிருங்கார ரசம் மட்டுமின்றி, வீரம், ரௌத்ரம், அற்புதம், சாந்தம்
முதலிய ரசங்களையும் கையாண்டு, சிவன், விஷ்ணு, அரசனது வீரப் போர்கள்,
வெற்றி இவற்றைப் பற்றி அவர் எழுதிய பாடல்கள், ஜயதேவரது சம காலத்தவரான
ஸ்ரீதர தாசர் தொகுத்து வெளியிட்ட "ஸதுக்தி கர்ணாம்ருதம்' என்ற வடமொழிப்
பாடல் திரட்டில் உள்ளன.
கீத கோவிந்தத்தில் இருப்பது சிருங்காரச் சுவையொன்றே.
இப்படி சிருங்காரச் சுவையை மட்டுமே
வைத்து ஒரு காவியம் எழுதலாமா, எழுத முடியுமா என்று கேட்டால், இதோ
இருக்கிறதே அப்படிப்பட்ட ஒரு நூல் கீதகோவிந்தம் என்பது மட்டுமல்ல, அதன்
வெற்றியும் சாதாரணமானதல்ல, மகத்தானது என்பதே பதில். காவியத்தின்
உயர்வுக்கும் அதன் ரசானுபாவத்திற்கும் அர்த்தம், சப்தம், ரசம் அதாவது
பொருள், சந்தம், சுவை மூன்றும் ஒன்று சேர வேண்டும் என்பார்கள்
விமர்சகர்கள். அப்படி அமைந்துள்ளது இக்காவியம். ஜயதேவரது கவிதை
இனிமைக்கும், சிறப்புக்கும் காவிய நாயகனான கண்ணனனே சான்றிதழ் தந்ததாகச்
சில சுவையான கதைகள் உண்டு.
கற்கண்டிலே எந்த பாகம் அதிகம் இனிக்கும் என்ற அசட்டுக் கேள்வியைப் போலத்
தோன்றினாலும் கீத கோவிந்தத்திலே எது மிக அழகான பாடல் என்று கேட்டு நானே
ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்தேன். "ரதிஸுகஸாரே கதமபிஸாரே மதன மனோஹர வேஷம்'
என்று தொடங்கும் பாடல். "தீரஸமீரே யமுனா தீரே வஸதி வனே வனமாலி' என்ற
வரியில் யமுனைக் கரையில் பிருந்தாவனத்தில் கொடி வீட்டில் நிற்கும் கண்ணனை
அப்படியே நம் கண்முன்னே கொண்டு வருகிறார் ஜயதேவர்.
இந்தப் பாடலை ஒரு தோட்டக்காரச் சிறுமி
பாடிக் கொண்டு சென்றாளாம். அவள் பின்னே அப்பாட்டில் மயங்கிய கண்ணனும்
சென்றானாம். பாட்டு முடிந்து அவன் திரும்பியபோது, அவனது பீதாம்பரமெங்கும்
சேறும் சகதியும் ஆகி, புதரிலுள்ள முட்களால் கிழிக்கப்பட்டுமிருந்ததாம்.
அன்றிரவு அரசனின் கனவில் வந்து, இனி நிரந்தரமாக இரவு கால பூஜையில்
இப்பாடல் பாடப்பட வேண்டுமென்று ஜகந்நாதர் கூற, இன்றும் அது வழக்கத்தில்
இருக்கிறது என்று தெரிகிறது.
கி.பி.1499 ஆம் ஆண்டு பூரி ஆலயத்தில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில்
பிரதாபருத்ரன், தேவதாசிகளும் கோயில் நர்த்தகர்களும் பாடகர்களும் கீத
கோவிந்தத்தைத் தவிர வேறெந்த நூலிலிருந்தும் கீதங்களையும் சுலோகங்களையும்
பாடக் கூடாது என ஆணை பிறப்பித்ததாகத் தெரிகிறது. இக்கதையும் கல்வெட்டும்
சம்பந்தமுடையதாகத் தெரிகிறது.
ராதையும் கிருஷ்ணனும் இறுதியில் சந்திக்கும் கட்டத்தில் ஒரு பாடல் வரி: "ஸ்மரகரளகண்டனம்
மம சிரஸி மண்டனம் தேஹி பதபல்லவமுதாரம்'. "காதலின் தாப ஜ்வரம் என்
தலைக்கேறி விட்டது. அதைத் தணிக்க தளிரைப் போன்ற குளிர்ந்த மென்மையான உனது
பாதத்தை என் தலைமீது வைப்பாய்' என்று கிருஷ்ணன் ராதையிடம் கெஞ்சுகிறான்.
இந்த வரியை எழுத நினைத்த ஜயதேவர் இது தெய்வ அபசாரமல்லவா என்று தயங்கியவாறு
குளிக்கச் சென்றாராம். அப்போது அவரது உருவிலேயே வந்து இறைவனே அந்த வரியை
எழுதிச் சென்றதை குளித்து விட்டுத் திரும்பிய ஜயதேவர் கண்டாராம்.
இப்படிக் கண்ணனே பாராட்டிய காவியம் கீத கோவிந்தம் என்று பக்தர் உலகம்
பரவசப்படுகிறது.
மகா பக்தரான ஜயதேவர் தசாவதாரப் பிரார்த்தனையோடு தன் காவியத்தைத்
தொடங்குகிறார். அதில் ஒரு சிறப்பு, அவர் புத்தரையும் ஒரு அவதாரமாகச்
சேர்த்துக் கொள்கிறார். ஜயதேவரின் பாடல்களை எளிதில் மொழிபெயர்க்க முடியாது.
வெறும் கருத்தை அறியும் வகையில் இரண்டு பாடல்கள் இதோ:
மீனாய் வந்து மீட்டாய் மறைகளை
மந்தர மலையை முதுகில் தாங்கியே
ஆமை உருவில் அமரர்க்கு அருளினாய்.
வராக முடிவில் வந்தே முன்னாள்
நீரில் மூழ்கிய நிலத்தைக் காத்தாய்.
இரண்யனை வதைத்தாய் ஏய்த்தாய் பலியை.
ஆணவம் கொண்ட அரசரை யெல்லாம்
கோடரி கொண்டு கொன்று குவித்தாய்.
அரக்கன் ராவணனை அழித்தது உன்வில்.
கண்ணனின் கண்ணனாய்
கலப்பை தாங்கினாய்.
கருணையே மதமெனக்
காட்டினாய் புத்தனாய்.
மீண்டும் வருவாய்
மிலேச்சரை அழிப்பாய்
கலியின் முடிவில் கல்கியின் வடிவில்.
கண்ணா உந்தன் காட்சியை எண்ணி
பதமலர் போற்றிப்
பணிந்து நிற்கின்றேன்.
விரகத்தால் தவிக்கும் ராதைக்கு, கண்ணனும் அவ்வாறே தவிக்கும் மனநிலையை
எடுத்துக் கூறி, ராதையை அவனிடம் போகுமாறு ஆலோசனை கூறுகிறாள் தோழி:
நீல யமுனையின் நீர்க் கரையில்
நின்னை விரும்பி நிற்கின்றான்;
நீல வண்ணக் கண்ணனவன்
நின்றன் அதரச் சுவைவேண்டி
நிலை கொள்ளாமல் நிற்கின்றான்
நின்னைத் தழுவத் துடிக்கின்றான்.
கோலக் கண்ணன் அவன்நிலையை
கருத்தில் கொண்டங்கு ஏகிடுவாய்.
கீத கோவிந்தம் இசைக்கேற்ற ஒரு கீத காவியம். இதற்கு அஷ்டபதி என்ற பெயரும்
உண்டு. ஒவ்வொரு பாடலும் ஒரு பல்லவி போன்ற துருவ பதம் என்ற பகுதியும்,
அதைத் தொடர்ந்து எட்டு சரணங்களும் கொண்டவை. இந்நூலில் பல ராகங்களில்
அமைந்த 24 அஷ்டபதிகள் உள்ளன. இவை நடனத்திற்கும் ஏற்றவை. உண்மையில் ஜயதேவர்
பாட, அவரது மனைவி பத்மாவதி பாடல்களுக்கேற்ற நடனம் செய்வாராம். கீத
கோவிந்தப் பாடல் ஒன்றில் அவரே இதைக் குறிப்பிடுகிறார்: "பத்மாவதீ சரண
சாரண சக்ரவர்த்தீ' & பத்மாவதியின் பாதங்களை நடனத்தில் ஈடுபடச் செய்யும்
சக்ரவர்த்தி என்று, தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார்.
இந்தப் பாடல்களுக்கு ஜயதேவரே ராக தாளங்கள் குறித்துள்ளார். ஆனாலும் அவை
இப்போது வழக்கில் இல்லை. ஜயதேவரே தன் பாடல்களுக்குக் கொடுத்துள்ள மூல
ராகங்கள், மாளவ கௌட, குர்ஜரி, வஸந்த, கொண்ட கிரி, நாமகரி, கர்நாட, தேசாகம்,
குணகரி, தேசவராடி, பைரவி, வராடகம், விபாஸ முதலியன. தாளங்கள் & ரூபகம்,
நிஸ்ஸாரம், யதி, ஏக தாளி, அஷ்ட தாளி ஆகியவை.
சைதன்யரது தோற்றத்திற்குப் பிறகு வங்க வைணவர்கள் கூடி, புதிய தோத்திர
இசையை உருவாக்கினர். இன்று ஜயதேவரது அஷ்டபதிகள் வங்கத்தில் வங்கவழி,
பூரியில் ஒரியா மரபு, மணிப்பூரில் புதிய வங்கமுறை, பூனாவில் சாஸ்திரிய
சங்கீதம், பிருந்தாவனத்தில் பழைய வழி, தென்னாட்டில் கர்நாடக இசைமுறை என்று
பல வழிகளில் பாடப்படுகின்றன.
""தென்னாட்டில் ஏறக்குறைய 250 வருஷங்களுக்கு முன்னர் வாழ்ந்த போதேந்திரர்
என்னும் துறவி, அக்காலத்தில் வாழ்ந்த ராமுடு பாகதவர் போன்ற சிறந்த இசை
விற்பன்னர்களைக் கொண்டு இவற்றிற்கு சௌராஷ்டிரம், வசந்தா, பைரவி, பந்து
வராளி, தோடி முதலிய கர்நாடக ராகங்களில் இசையமைக்கச் செய்தார். அம்முறை
தான் இப்பொழுது தென்னாடெங்கும் பஜனை சம்பிரதாயங்களில் வழங்கி வருகிறது''
என்று இசைப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ராமநாதன் கூறுகிறார்.
இவற்றிலிருந்து சம்ஸ்கிருத இலக்கியப் பணியைப் போலவே, ஜயதேவர் இந்திய இசை
உருவாக்குவதிலும் பெரும் பங்கு கொண்டார் என்பது தெளிவாகிறது.
கீத கோவிந்தத்தின் பாதிப்பு நடனத்திலும் ஓவியத்திலும் சிற்பத்திலும்
காணலாம். அவருக்குப் பின் வந்த 15 சம்ஸ்கிருதக் காவியங்கள் அதன் அமைப்பைப்
பின்பற்றியே எழுதப்பட்டன. அதற்கு 40 உரைகள் வந்துள்ளன.
பிற்கால வங்காளி, ஒரியா, குஜராத்தி, இந்தி மொழிகளில் கீத கோவிந்தத்தின்
அடிகளும் கருத்துக்களும் இடம் பெற்றன.
பல இந்திய மொழிகளில் அக்காவியம் மொழிபெயர்க்கப்பட்டது. சீக்கியர்களின் ஆதி
கிரந்தத்தில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
ஐரோப்பியர் வருகைக்குப் பின் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்
மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. "ஆசிய ஜோதி' என்று புத்த சரிதத்தை எழுதிய
ஸர்.எட்வின் ஆர்னால்டு இந்நூலை ஆங்கிலக் கவிதையில் வடித்துள்ளார். சங்கு
சுப்ரமணியன் மூலத்தை அடியொற்றி தமிழாக்கம் செய்த கையெழுத்துப்பிரதி
தன்னிடம் இருப்பதாக டாக்டர் எஸ்.ராமநாதன் குறிப்பிடுகிறார். 1984 இல்
மற்றொரு தமிழாக்கத்தைக் கவிதை வடிவிலேயே செய்துள்ளார், இந்து உயர்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர் டி.எஸ்.ராஜகோபாலன்.
இலக்கியம் மட்டுமின்றி, மென்கலைகளான நடனம், ஓவியம், இசை மற்றும் சிற்பம்
என்ற பல கலைகளும் புதிய புதிய கருத்துக்களோடு வளர வழி வகுத்த நிர்மானச்
சிற்பி ஜயதேவர்.
பாடல்களின் தமிழாக்கம்: கட்டுரையாசிரியர் |