|
காற்றைத் தூதனுப்பிய
ராதை
- தி.ப.
வானமாமலை

காற்றினிலே வரும் கீதம் என்ற மீரா
புகழ் எம்.எஸ்ஸின் குரலை உலகம் மறக்க முடியாது. கண்ணன் குழலமுதம் காற்றோடு
காற்றாகக் கலந்து எங்கும் பரிமளித்தது. பஞ்ச பூதங்களில் காற்றுக்கு
மட்டுமே நாற்றம், ஒலி இரண்டையும் சுமந்து செல்லும் தகுதியுண்டு. மன
உணர்ச்சிகளைச் செய்தியாகத் திரட்டி காற்றின் மூலமாக அனுப்ப இயலுமா என்ற
கேள்விக்கும் ஐயப்பாட்டுக்கும் நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சி
விடையளித்துள்ளது. காற்றின் இந்தத் தகுதியை உணர்ந்ததாலேயே, அன்றே மஹாகவி
காளிதாஸன் ""மேகஸந்தேஸம்' காவியத்தைப் படைத்தான்.
குபேரனால் தண்டிக்கப்பட்ட யட்சன் ஓராண்டுக் காலம் மனைவியைப் பிரிந்து
ராமகிரி மலைச்சாரலில் தங்கியிருக்கையில், ஆடித் தொடக்கத்தில் நீருண்ட
மேகங்கள் வடக்கு நோக்கி நகர்வதைக் கண்ணுற்று, தன் தனிமைத் துன்பத்தை
மனையாளுக்குத் தெரியப்படுத்த மேகங்களைத் தேர்ந்தெடுத்தான். மேகங்கள்
வானில் உலாவ காற்றின் உதவி தேவை.
வடமொழி, தென்தமிழ் இரண்டிலும் காணப்படும் பண்டைய இலக்கியங்களில் தலைவி தன்
விரகதாபத்தை வெளிப்படுத்த நாரை, காகம், கிளி, குயில், அறுகால் வண்டு ஆகிய
உயிரினங்களைத் தூதாக அனுப்புவது மரபு. ஆனால் காற்றோ ஜடப்பொருள். அதற்கும்
தூது செல்லும் தகுதியுண்டு என்பதைத் தன் கற்பனையின் மூலம் காட்டியுள்ளார்
ஹரி ஔத் என்ற ஹிந்திக் கவிஞர்.
இவரது முழுப்பெயர் அயோத்யா ஸின்ஹ உபாத்யாய் ஹரிஔத் என்பது. காலம் 1865&
1941. பிறந்த இடம் உத்திரப்பிரதேச மாநிலம், நிஜாம்பாத். தந்தை வெகுவாகப்
படித்தவரல்லர். சிறிய தந்தை சிறந்த அறிவாளி. அவரது மேற்பார்வையில் கல்வி
கேள்விகளில் தேர்ச்சி பெற்று பார்ஸி, ஆங்கிலம், ஸமஸ்கிருதம், உருது ஆகிய
நான்கு மொழிகளிலும் கவிதை இயற்றும் வல்லமை படைத்தவர். சிறந்த பேச்சாளர்.
ஆசிரியப் பணியிலும் நன்மதிப்பைப் பெற்றவர். உரைநடை (இயல்) எழுதுவதிலும்
திறமை உள்ளவர்.
ஆரம்பத்தில் உர்தூ நடையை லாகவமாகக் கையாண்ட இவர், கால மாறுதலால்,
பாரதேந்து ஹரிசந்திரர், பண்டித் மஹாவீர் ப்ரஸாத் துவேதி ஆகியோர் காட்டிய
பாதையைப் பின்பற்றி மனத்தை ஈர்க்கும் வடமொழிச் சொற்கள் கலந்த ஹிந்தி
மொழியில், மொழிப்பொலிவைக் காட்டும் இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
இவர் இயற்றிய "ப்ரிய ப்ரவாஸ்', "வைதேஹி வன்வாஸ்' இரண்டுமே கற்பனைவளம்
கொண்டவை. இவர், பாரதப் பரம்பரைப் பண்பாட்டை விட்டு விலகாமல், இதிஹாஸ,
புராண கதை, கதாபாத்திரங்கள் மூலமாக இலக்கிய உலகத்திற்கு புதுப்பொலிவையும்,
புது சக்திகளையும் அறிமுகப்படுத்தினார்.
1857&இல் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் நடந்தது. அப்போது ஹிந்தி
இலக்கியம் புதுக் கருத்துகளை ஏற்றுக் கொண்ட காலம். 1857 & க்கு முற்பட்ட
காலத்தில் முகலாய ஆட்சியின் வீழ்ச்சி, ஆங்கிலேயரின் மேலாண்மை காரணமாக
சமூக நிலைமை தடுமாறிய நேரம்... இலக்கியத்தில் புதுயுகம் (நவீன காலம்)
தோன்றிய நேரம். அதற்கு சற்றே 150 ஆண்டுகள் முந்திய காலத்தை "ரீதி காலம்'
என அழைத்தார்கள். ரீதி காலத்தில் இலக்கியத்தை தனிமனித வழிபாட்டிற்கும்,
சிற்றின்ப, சிருங்கார சுவையை வெளிப்படுத்தும் கருவியாகவும்
பயன்படுத்தினார்கள்.
ராமகிருஷ்ண அவதாரங்களில் கண்ணனின் பால லீலைகள் ஸூர்தாஸ் போன்ற கவிகளைக்
கவர்ந்தன. ஆனால் காலத்தின் மாறுபாட்டால் ரீதிகாலக் கவிகள் ராதாகிருஷ்ண
சேர்த்தியையே தற்காலப் படைப்பிற்கு ஆதாரமாக அமைத்து சிருங்கார
இலக்கியத்திற்கு ராதாகிருஷ்ண ஜோடியை மையமாகக் கொண்டார்கள். மகளிரின் அங்க
சௌந்தர்ய வர்ணனை அதிகமாகக் காணப்பட்டது. பெண்களை இன்பச் சுவைப் பொருளாக்கி
("நாயிகா பேதம்') தலைவியின் பலநிலைகளை அப்பட்டமாக எழுதினார்கள். ஸ்வீகியா,
பரகியா, அபிஸாரிகா என்று தலைவியர் பாகுபாட்டை வர்ணிக்கத் தொடங்கினார்கள்.
ராதாகிருஷ்ணன் சேர்த்தி மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.
இழிந்த நிலையிலிருந்த ராதாகிருஷ்ணன் சேர்த்தியை மீட்டு, மிக உன்னத,
பவித்ரமான, போற்றி வணங்குதற்குரிய நிலைக்கு உயர்த்திய பெருமை ஹரி ஔதையே
சாரும்.
""ப்ரிய ப்ரவாஸ்' காவியத்தின் கதையமைப்பு பாகவதத்தை மையமாகக் கொண்டது.
அழகான எளிய இசையோடு இழையும் மொழி. மாடுகன்று மேய்த்து மாலை கோகுலம்
திரும்பும் கண்ணனைப் பார்ப்பதற்கு கோகுலவாசிகள் தங்கள் தங்கள் வீட்டிற்கு
வெளியே துடிப்புடன் காத்திருக்கிறார்கள். மாலைப்பொழுதின் வர்ணனை மனதை
மயக்கவல்லது.
திவஸ் கா அவஸான் ளமீப தா
ககன் தா குச் லோஹித் ஹோசலா
அப் பீ விராதி தீ குஞ்ச தக்பா
கமலினி குல் வல்லப கி ப்ரபா
(நாட்போது முடியும் தறுவாய். சிவப்பு வண்ணமான வானம். தாமரையை மலரச்
செய்யும் கதிரவனின் ஒளிக்கற்றைகள். தடாகங்களின் நீர்ப்பரப்பின்
மேற்படிந்து கொண்டிருக்கின்றன.)
காவியத்தின் முக்கியப் பகுதிக்கு
வருவோம். கம்ஸனின் ஆணையின் பேரில் கிருஷ்ணன், பலராமர் இருவரையும்
மதுராவுக்கு அழைத்துச் செல்ல அக்ரூரர் கோகுலத்திற்கு விரைகிறார். கோகுல
வாசிகள் கண்ணன் பிரிவைத் தாங்க மாட்டார்கள். கோபிகைகளின் துயரத்திற்கோ
எல்லையேயில்லை.
கொடூரமான செயலைச் செய்யும் இவருக்கு அக்ரூரர் என்று யார் பெயரிட்டார்கள்?
எனினும் கண்ணன் புறப்பட்டு விட்டான். அவன் ப்ரேமையில் மூழ்கிய கோபிகைகள்
யமுனைக்கரையிலேயே அவன் திரும்புவான் என்ற எதிர்பார்ப்புடன்
காத்திருக்கிறார்கள்.
மனிதநேயம், சமூகசேவை, தியாக மனப்பான்மை ஆகிய நற்பண்புகளை கவிதை மூலம்
பரப்ப முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறார் கவி. ஜனரஞ்சகமாய்த்
திகழந்த ராதாகிருஷ்ணர்களையே ஜனநாயகத் தலைவர்களாகச் சித்திரித்துக்
காட்டிய பெருமை கவியின் சிறப்பு அம்சமாகும்.
"ப்ரவாஸ்' என்றால் வெளியேறுதல். ப்ரிய கிருஷ்ணனின் பிரிவு கோபிகைகளை
வாட்டுகிறது. கண்ணனின் தனிப்பட்ட அன்பிற்குப் பாத்திரமான ராதை தன்
துயரத்தை அடக்கிக் கொண்டு எதைச் செய்தால் கோபிகைகள் மனம் சற்றே அமைதி
பெறும் என்று சிந்தித்து, மொத்த துயரத்தையும் கண்ணனிடம் எடுத்துக் கூற
காற்றை உதவிக்கு அழைக்கிறாள். யமுனைக் கரை காற்றுக்கு, தூது செல்லும்
தகுதியுண்டு என்பது ராதையின் கணிப்பு.
""காற்றே! யமுனையின் நீர்மையும், குளிர்ச்சியும் உனக்குச் சொந்தமானவை.
கிருஷ்ணன் ஸ்பர்சத்தை நீ நன்கு உணர்ந்துள்ளாய். பிரிவு என்னும் சூட்டைத்
தணிப்பதற்கு நீதான் சரியான கருவி. நீ யமுனைக் கரையோரமாகச் செல். குளிச்சி
உன்னை விட்டகலாது. கோகுலத்தைக் கடந்ததும் மரம் செடிகொடிகள் நிறைந்த இடம்
தென்படும்.
அங்கே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள். மேலே தொடர்ந்து சென்றால்
வயல்வெளிகள் தென்படும். கதிரவனின் வெப்பம் மிகுதியாக இருக்கும்.
வயல்களில் குடியானவர்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருப்பார்கள். சமூக
நலனுக்காகப் பாடுபடும் அவர்கள் துயர் போக்குவதும் உன் கடமையாகும்.
அவர்களின் துன்பம் தீரும் பொருட்டு பெரிய கார் மேகங்கள் எங்கிருந்தாலும்
அவைகளை ஒன்றாகத் திரட்டி, வியர்வை சிந்த உழைக்கும் அவர்களுக்கு நிழல்,
குளிர்ச்சி இரண்டையும் அளி. அவர்கள் துயரம் எங்கள் துயரமேயாகும்.
அவர்களின் மகிழ்ச்சி எங்களது மகிழ்ச்சியேயாகும்.
சிறுவர், சிறுமியர் வெய்யிலில் நடப்பதை
நீ காணலாம். அவர்களுக்கும் உன் உதவி தேவைப்படும். சாமான்ய மக்களின் துயரம்
தணித்து நீ மேலே செல். மதுரா நகரம் உன் கண்ணுக்குப் புலப்படும். உயர்ந்த
மாளிகைகள், கோபுரங்கள், அரண்மனைகள், அகன்ற வீதிகள், தோரண வாயில்கள்
முதலியவை அந்த நகரத்தின் சிறப்பம்சங்களாகும். அங்குள்ள மக்கள் நாகரீகம்
அறிந்தவர்கள். நாங்களே இடக்கை வலக்கை வாசியறியாதவர்கள்.
எங்கள் தூதனாகிய நீ, நகரத்து அழகிலும் அவர்களின் பேச்சிலும் மயங்கி
விடாமல் கிருஷ்ணன் எந்த மாளிகையில் தங்கியுள்ளான் என்று கண்டறிய முயற்சி
செய். கண்ணன் தங்கியிருக்கும் அரண்மனை மற்ற இல்லங்களைக் காட்டிலும்
பொலிவுடன் விளங்கும். கண்ணன் வருகையினால் அதிக அழகு பெற்றுள்ள அந்த
மாளிகையை நீ விரைவாக அடைவாய்.
அங்கு நிலா முற்றங்கள், வாவிகள் (குளங்கள்) இருக்கும். கிருஷ்ணன்
மாளிகைக்கு வெளியே இருந்தால், தூது போன காரியம் சற்றே எளிதாக அமையும்.
அவன் நிற்கும் பக்கம் சென்று, மெதுவாக வீசி, அவன் பீதாம்பரங்களையும்,
மேலாடைகளையும் அசைந்தாடச்செய். அவன் கவனத்தை ஈர்க்க மாளிகையையொட்டி
வளர்க்கப் பட்டிருக்கும் அலங்கார வளைவுகள், கொடிகள், பூங்கொத்துகள்
தொங்கும் கிளைகள் ஆகியவற்றை அசைந்தாடும்படி வீசு.
இவைகளின் ஊடே ஊடுருவி, இனிய நாதத்தை எழுப்ப முயற்சியை மேற்கோள். அவன்
இடுப்பைவிட்டு அவன் குழல் என்றும் பிரியாது. சற்றே முயற்சி செய்து குழலின்
துவாரங்களின் மூலமாக வெளிவந்து மதுரமான பிருந்தாவனத்தில் அவன் அடிக்கடி
இசைக்கும் ஒலியை ஒலிக்கச் செய். இது சற்றே கடினம்தான். வேகமாக வீசி, வாடி
வதங்கிக் கீழே கிடக்கும் கொடிகளை அவன் கால்களுக்கருகில் கொண்டு
சேர்த்தாயானால், கண்ணனுக்கு கோகுலத்து கோபிகைகளின் வாடி வதங்கும் முகங்கள்
ஞாபகத்திற்கு வரும்.
கிருஷ்ணன் மாளிகையின் உட்புறத்தில்
அமர்ந்திருந்தால் நான் சொல்லும் வழியைப் பின்பற்று. ஜன்னல் கதவுகளையும்,
திரைச்சீலைகளையும் அசைந்து ஆடும்படி வீசு. பக்கத்தில் சென்று அவன்
காதோரமாக சுருண்டு வளைந்திருக்கும் மயிற்கற்றையை இங்குமங்குமாக அசையச்
செய். மாளிகையின் உட்புறச்சுவர்களில் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தால்
அவற்றை நன்கு நோக்கு. துன்பத்தால் வாடும் விலங்கினுடையதோ, அல்லது
பெண்களின் சித்திரமோ இருந்தால் அதைமட்டும் கண்ணன் பார்க்கும்படி அசை.
சாளரத்தின் பக்கங்களில் வாடின இலைகள் சிதறிக் கிடந்தால் அவற்றை அவன்
கவனத்திற்குக் கொண்டு வா.
அவற்றை நோக்கியதும் அவனுக்கு பசலையால்
துன்புறும் எங்கள் நினைவு வரும். செயற்கைக் குளங்கள், நீரூற்றுகள் அங்கு
உண்டு. சற்றே பெரிய வாடிய தாமரை இதழை நீரில் நன்றாக நனைத்து, கண்ணன்
கண்முன்னாடி காட்டினால், இலையில் படிந்துள்ள நீர் ஒன்றாகச் சேர்ந்து
முத்து முத்தாக நுனி வழியாக சொட்டத் தொடங்கும். கிருஷ்ணா! இம்மாதிரி இதழ்
வடிவம் போல கண்கள் படைத்த ராதையும் கோபிமார்களும் உன் பிரிவைத் தாங்காமல்
அல்லும் பகலும் அழுத வண்ணமாக இருக்கிறார்கள்.
எங்கள் கிருஷ்ணன் நல்லிதயம் கொண்டவன். துயர் துடைக்கும் உன் ஸ்பர்சத்தை
உடனே உணர்வான். கருணையும் தயையும் உருவமாகக் கொண்டவன். எனக்காக நான் இதைச்
சொல்லவில்லை. கோபிமார்கள், மாடு கன்று, யசோதை, நந்தகோபன் சார்பாக
முறையிடுகின்றேன்.
உன்னால் ஒன்றும் முடியாவிட்டாலும், கிருஷ்ணனின் உடல் சம்பந்தம் பெற்ற நீ,
போன வழியே திரும்பி கோகுலத்திற்கு வந்துவிடு. உன் ஸ்பர்சம் பெற்று கண்ணனை
நேரில் கண்ட மனமகிழ்ச்சி பெற்று ஆறுதல் அடைவோம்'' என ராதை முடிக்கிறாள்.
இது சாத்தியமா என்ற ஐயம் வேண்டாம். நாயகி விடும் தூதுக்குப் பலன் உண்டு.
தலைவி ராதை துயரப்படும் மக்களுக்காகத் தலைமைப் பொறுப்பை ஏற்று பாகவதத்
தொண்டு புரிகிறாள். இதை ராதையின் சமூகப்பணி என்றும் கூறலாம்.
கட்டுரையாளர் முன்னாள் ஹிந்திப்
பேராசிரியர், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
படம்: அமரர் எஸ்.டி.பி.சாரதி
|