ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப...articles@prabandham.com sriram@prabandham.com

கைத்தலம் பற்றும் கல்யாணமேடை  வாரணமாயிரம்

வைணவம் சமயம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

மேலாண்மைப் பாடம்

இடுக்கண் - வாய்ப்பு


எதிர்மறையான இரண்டு விஷயங்கள் ஒன்றையொன்று நிரப்புவனவாக மாறும் விதிக்கு ""இடுக்கண் & வாய்ப்பு'' இரட்டை ஒரு அருமையான உதாரணம். சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், இடுக்கண்களே வராத மனிதன் ஒருவன் இருக்க முடியாது. அது போன்று வாழ்க்கையில் எவ்வளவு கீழான நிலையில் இருந்தாலும் முன்னேற வாய்ப்புக்களே கிடைக்காத ஒரு மனிதனைக் காண்பதும் அரிது.


இந்த "இடுக்கண் & வாய்ப்பு' அதிசயம் ஒருவன் வாழ்க்கையில், பரவலாக ஏற்பட்ட பொழுதிலும், வரும் இடுக்கண்களை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவு அல்லது வாய்ப்புக்கள் வரும்பொழுது எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற அறிவு இவை பலருக்கு இருப்பதாக நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. வாழ்க்கையில் இடுக்கண்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை அறிய சிறு முயற்சிகூடச் செய்வதில்லை.

 

இடுக்கண்கள் எப்படி ஏற்படுகின்றன என்ற ஞானம் ஒருவனுக்கு இருந்தால், அவனுடைய வருங்காலம், பிரச்னைகள் இல்லாததாக அமைவது உறுதி. இந்த அறிவு படைத்தவர்கள் இடுக்கண் வருங்கால் அதற்குத் தீர்வு காண்கிறார்கள். மற்றவர்கள் பிரச்னை கடுமையாக இருந்தால் அதன் சுமையைத் தாங்க முடியாமல் மூழ்கி மாய்கிறார்கள்.


வாய்ப்புக்களைப் பொறுத்தமட்டில், மக்கள் தெரிந்து வைத்திருப்பது இதைவிடவும் குறைவு. பெரும்பாலான வாய்ப்புக்கள் திடீரென வருகின்றன. ஒருவருக்கு வாய்ப்பு வரும்பொழுது அவர் அதன் முக்கியத்துவத்தைக் கூட உணராமல் இருந்து விடுவதாலோ அல்லது அதை உபயோகப்படுத்திப் பயன் பெறத் தேவையானவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவதாலோ அந்த வாய்ப்பு கவனிக்கப்படாமலேயே நழுவிப் போகிறது. இப்படிப்பல வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. வாய்ப்புக்கள் அளிக்கும் சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர் வெற்றிபெற்று, முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள்.


இப்படிப்பட்ட எதிர்மறை இரட்டைகள் வாழ்க்கையில் ஏன் தோன்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும். அடிப்படையில் வாழ்க்கை, மிகை & குறை (கணிண்டிtடிதிஞு Nஞுஞ்ச்tடிதிஞு) என்ற இரண்டும் கலந்ததாக இருப்பதினால்தான் இப்படிப்பட்ட எதிர்மறை இரட்டைகள் வாழ்க்கையில் அமைகின்றன. ஞானம் & அஞ்ஞானம், சுகம் & துக்கம், சுதந்திரம் & கட்டுப்பாடு, ஒற்றுமை & வேற்றுமை, இலாபம் & நஷ்டம் என்ற எதிர்மறை இரட்டைகள் இருப்பது போன்று, இடுக்கண் & வாய்ப்பு என்ற எதிர்மறை இரட்டையும் அமைவது இயற்கைதானே!


இடுக்கண்கள் மட்டுமே இருந்து வாய்ப்புக்கள் இல்லாத வாழ்க்கை தாங்க முடியாத வாழ்க்கையாக அமைந்து அதன் விளைவாக ஏற்படும் துன்பச்சுமை சகிக்க முடியாத அளவிற்குக் கனமாக இருக்கும். மாறாக இடுக்கண் ஏதுமில்லாமல், வாய்ப்புக்கள் மட்டுமே இருக்கும் வாழ்க்கை எதிர்ப்புக்களை வெற்றிகொள்ளும் மகிழ்ச்சியும், இடுக்கண்களைக் களைந்து எறியும் இன்பமும் இல்லாத உப்புச் சப்பற்ற மிகச் சாதாரண வாழ்க்கையாக அமையும். மனிதனுக்கு உடல் பற்றிய சிந்தனையே இருக்கிறது.

 

அநேகமாக அவன் விழிப்புணர்வு அற்றவனாகவே இருக்கிறான். மேலும் அவனுடைய தேகத்திமிர் அடங்குவதற்கு கடுமையான உடல் உழைப்பு தேவை. மனிதன் விழிப்புணர்வு அற்றவனாக இருப்பதால், அவனைச் செயல்பட வைக்க, அவனுக்குப் பல வகையான நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இயற்கைக்கு ஏற்படுகிறது.


மனிதன் உடல் பற்றைக் கடந்து ஜீவிதத்தின் உயர்மட்டத்திற்கு எழுச்சியுற்று தனது விழிப்புணர்ச்சியற்ற தன்மையிலிருந்து மீளும்பொழுது, இடுக்கண்கள் மூலம் அவனுக்கு நெருக்கடி கொடுத்து, வெற்றியை நோக்கி அவனை உந்தும் சக்தியை இயற்கை கொடுக்க அவசியமில்லாது போகிறது. எனவே இயற்கை கொடுக்கும் இடுக்கண்களுக்கு அப்பொழுது ஒரு முடிவு ஏற்படுகிறது. இந்த நிலைக்கு மனிதன் வரும் வரை, அவனை செயலாற்றவும், ஆக்கபூர்வமாக இருக்கவும் செய்வதில் இடுக்கண்களுக்குப் பெரும்பங்கு உள்ளது.
இணக்கம் இன்மையால் இடுக்கண்கள் வருகின்றன.

 

ஒரு சூழ்நிலையில் உள்ள காரணிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு, ஒத்துழைக்காமல் இருக்கும்பொழுது இணக்கமின்மை உருவாகிறது. ஒரு நிறுவனத்தில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஒருமித்த குறிக்கோளும், ஒருங்கிணைந்த செயல்திட்டமும் இருந்தால், கருத்து ஒருமித்தல் ஏற்பட்டு, நிறுவனம் செழித்து இலாபம் ஈட்டுகிறது. மாறாக, முதலாளிகளும் தொழிலாளர்களும் வித்தியாசமாக சிந்தித்தால் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இணக்கமின்மை நிலவி, நிறுவனத்தின் செயல்பாடுகள் கீழ்நோக்கிச் சென்று நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் நிதிநெருக்கடி ஏற்படுகிறது.


ஒருவன் வளமாக வாழவிரும்பினால் அதற்கேற்ப வருமானம் வரும் ஒரு வேலையிலோ அல்லது தொழிலிலோ ஈடுபட வேண்டும். அவனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப வருமானம் இருந்தால் இணக்கம் நிலவி திருப்தி ஏற்படுகிறது. எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருமானம் குறைவாக இருந்தால் முரண்பாடு ஏற்பட்டு, நிதித்தட்டுப்பாட்டிற்கு வழிகோலப்பட்டு, நிதிநெருக்கடி ஏற்படுகிறது.

 


அரசின் விதிமுறைகள் சுலபமானதாகவும் தேவையான கட்டமைப்பு வசதிகளும் இருந்தால் தொழில் முனைவோர்களுக்கு தொழில் செய்வது சிரமமின்றி அமையும். அதிகார வர்க்கத்தின் நடைமுறைகள் கெடுபிடியாகவும், குழப்பமாகவும் இருந்து, சாலைவசதி, மின்சக்தி, தண்ணீர், கச்சாப் பொருட்கள் இவற்றின் விநியோகம் சீராக இல்லாமலும் இருந்தால், தொழில்முனைவோர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், நிலவும் சமூக நிலைக்கும் பிணக்கு ஏற்பட்டு, அதன் விளைவாக ஒரு தொழிலை ஆரம்பிப்பது கடினமான விஷயமாக மாறுகிறது. எனவே அடிப்படையில் புதைந்திருக்கும் இணக்கமின்மையைக் களைந்தால்தான் இடுக்கண்களை ஒழிக்க முடியும்.


ஒருவருமே இடுக்கண்களை விரும்புவதில்லை. எல்லோருமே பிரச்னை இல்லாத வாழ்க்கையையே விரும்புகின்றனர். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் இடுக்கண்களை எதிர்கொள்வதினாலும், அவற்றிற்கு தீர்வு காணமுயற்சிப்பதாலும் ஒருவனின் செயல்பாட்டுத்தரம் மேம்பட்டு அவனுடைய திறமைகள் கூர்மை அடைகின்றன. ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாகக் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்டு கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

ஆப்பிரிக்கர்களும் ஆசியர்களும், வருடம் முழுவதும் அவர்கள் நாட்டில் உஷ்ணம் இருப்பதால், (ஒப்பிடும்பொழுது) ஐரோப்பியர்களைவிட சுலமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். குளிர்காலத்தின் கடுமைகளை சமாளிப்பதால் ஐரோப்பியர்களின் உற்பத்தித்திறன் உயர்ந்து அதனால் ஆசிய நாடுகளுக்கு மிக முன்பாகவே அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்துவிட்டனர்.

 


தரிசு மற்றும் வறண்ட பகுதிகளில் வசிக்கும், வசித்த பண்டைய யூதர்கள், தமிழ்நாட்டு ராமநாதபுரம் மாவட்ட நகரத்தார்கள், ராஜஸ்தான் மாநில மார்வாடிகள் போன்ற சமுதாயத்தினர், தாங்கள் வாழும் பகுதி விவசாயம் செய்ய லாயக்கற்றது என்று கண்டறிந்து, வேறு கடினமான பிழைக்கும் வகைகளைக் கடைப்பிடித்து, காவேரி, கங்கை போன்ற செழிப்பான நீர் வசதி உள்ள பகுதிகளில் வாழும் மக்களை விட அதிகச் செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள்.

 

நல்ல நீர் வசதியுள்ள டெல்டா பகுதியில் வாழும் மக்களின் சிரமமற்ற விவசாய வாழ்க்கை, சொகுசான வாழ்க்கையாக அமைவதால், அவர்கள் இயல்பாகவே சோம்பேறிகளாகவும் உடல் உழைப்பு குறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணமாக வறண்ட பூமியில் வசிக்கும் மக்களின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்பொழுது, இவர்களின் வளர்ச்சி மிகவும் பின்தங்கியுள்ளது.

 


கடினமான எல்லைப்புற வாழ்க்கை அமெரிக்கர்களிடையே, எப்பாடுபட்டாவது உயிர்வாழ வேண்டும் என்ற உறுதியான வெறியை வளர்த்தது. இந்த வெறி அமெரிக்கர்களை நல்ல உழைப்பாளர்களாகவும், உற்பத்தியைப் பெருக்குபவர்களாகவும் விளங்கச் செய்தது. எல்லைப்புற வாழ்க்கை மாறி மறைந்து போய் பல்லாண்டு காலங்கள் கடந்த பொழுதிலும் அமெரிக்கர்களிடம் இந்தப் போக்கு நீடிப்பதால் அவர்களுக்கு நிறைந்த செல்வம் வெகுமதியாகக் கிடைக்கிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும் போரினால் சின்னாப் பின்னப்படுத்தப்பட்ட தங்கள் பொருளாதாரத்தை புனர்அமைப்பு செய்யும் சவாலை சமாளிக்க எழுச்சியுற்றார்கள். இதன் விளைவாக அந்த இரு நாடுகளும் முன்னைவிடப் பணக்கார நாடுகளாக விளங்குகின்றன.

 


அலட்டிக் கொள்ளாத, பாதுகாப்பான வாழ்க்கை, திறமையின்மையை வளர்க்கிறது என்பதைப் பல பணக்காரர்கள் தெரிந்து வைத்துள்ளனர். எனவேதான் பணக்கார பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள், கடுமையாக உழைத்து, வாழ்க்கையில் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் கடந்து வந்தால்தான், தங்களுடைய பெரும் செல்வத்திற்கு அவர்கள் வாரிசாகும் பொழுது, அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பாக நம்பலாம் என்று கருதுகிறார்கள். பில்கேட்ஸ் பல்லாயிரம் கோடி சம்பாதித்துள்ளார். ஆனால் தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் சேர்த்து 30 கோடி டாலர் மட்டும் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டால், அது அவர்களைக் கெடுத்துவிடும் என்று அவர் அஞ்சுகிறார்.

 


மக்களை இடுக்கண்கள் தொந்தரவு செய்யும் பொழுதுதான், அவர்கள் அந்த இடுக்கண்களிலிருந்து விடுபட்டு, முன்னேற வாய்ப்புக்களின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள், மேலும் முன்னேற ஏதுவாக வரும் வாய்ப்புக்களை கவனிக்கக்கூட மாட்டார்கள். கஷ்டப்படுபவர்களுக்கு தற்பொழுது அவர்களை பாதித்திருக்கும் கஷ்டத்தின் கடுமை காரணமாகத்தான், வரும் வாய்ப்புக்கள், அசாதாரணமான மதிப்புடையவைகளாகத் தெரிகின்றன.

 

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியை தங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும் ஒரு வாய்ப்பாக மதிக்கிறார்கள். ஆனால் செல்வந்தர்களின் குழந்தைகள் கல்வியை அப்படிக் கருதுவதில்லை. ஏனென்றால், செல்வந்தர்களின் குழந்தைகளைத் தாங்கும் பக்க பலமாக அவர்களின் பெற்றோர்களுடைய செல்வம் இருக்கிறது.

 


இந்தியாவில் சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருந்த ஒரு சமூகம் பாரம்பரியமாகவே ஏழைகளாக இருந்தனர். இந்த சமூகத்தினர் ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்யத் தொடங்கிய காலத்தில், ஆங்கில அரசின் நிர்வாகத்துறையில் சேர மிகவும் ஆர்வம் காட்டினர். வறுமையின் தாக்கம், அவர்களை கல்வி கற்பதையும் அரசுப் பணிகளில் சேர்வதையும் வாழ்க்கையில் முன்னேற தங்களுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்புக்களாகக் கருத வைத்தது.


பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஆட்சியாளர்கள் இடஒதுக்கீடு செய்ததினால் இந்த சமூகத்திற்கு அரசு வேலைவாய்ப்பு தடைப்பட்ட பொழுது, இந்த சமூகத்தினர்தான், மென்பொருள் துறையில் மேலை நாடுகளில் வேலை வாய்ப்பை முதன் முதலில் பயன்படுத்திக் கொண்டனர்.


சமுதாயத்தில் தேக்க நிலை இருந்தால், வாய்ப்புக்கள் தோன்றாது. ஆனால் நாகரிகம் பீடு நடைபோட்டு, சமுதாயம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும்பொழுது ஏற்படும் மாற்றங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப செயலாற்ற ஆர்வமாக இருக்கும் மக்களுக்கு தொடர்ந்து, புதுப்புது வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கின்றன.


வாய்ப்புக்களை உபயோகப்படுத்திக் கொள்வதற்கு விழிப்புடன் இருத்தல், தைரியம், ஆபத்துக்களை எதிர்நோர்க்கும் சக்தி இவை தேவை. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து சென்று படிக்கும் வாய்ப்பு கிட்டிய பொழுது, "கடல் கடக்கக் கூடாது' என்ற பாரம்பரியக் கட்டுப்பாட்டை மீறும் தைரியமுடையவர்களால்தான் அந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

 

அப்படிப்பட்ட சிலரில் இங்கிலாந்து சென்று வழக்கறிஞர்களாகப் பயிற்சி பெற்று வந்தவர்கள்தான் காந்தியும் நேருவும்.

 


இந்தியர்களுக்கு பாதுகாப்புதான் எல்லாவற்றையும்விட முக்கியம். அரசு வேலை பாதுகாப்பானது என்ற காரணத்தால்தான் பல படித்த இந்தியர்கள் அரசுப்பணிகளை நாடிச் சென்றனர். தைரியமான வெகுசிலரே, பாதுகாப்பான வேலைகளை உதறித்தள்ளி, ஆபத்துக்கள் நிறைந்த சொந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தனர். மக்களிடையே சுயதொழில் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களை மாதச் சம்பளத்திற்கு வேலை செய்வதைவிட, சொந்தத் தொழில் செய்வது சிறந்தது என்று உணர வைப்பதற்கு என்ன பாடுபட வேண்டியுள்ளது என்பது, சொந்தத் தொழில் முனைவோர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தெரியும்.


சமுதாயத்தில் ஒரு புது வாய்ப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது என்பதை உணர விழிப்புடன் இருத்தல் அவசியம். வாய்ப்புக்கள் தானாக வரும்வரை காத்திருக்க சிறிதும் பொறுமை இல்லாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். இத்தகைய மனிதர்கள் முன்னேற வேண்டும் என்ற பேராவலை தங்கள் உள்ளத்தில் போதுமான அளவு எழுச்சியுறச் செய்வார்களேயானால், புது வாழ்வினைத் தாங்களே ஏற்படுத்திக் கொள்ள முடியும். உள்ளத்தில் எழும் உந்துதல், அதிகப்படியான சக்தியை உண்டாக்கும் பொழுது, புறவாழ்க்கையின் எதிர்விளைவு, சீரான வாய்ப்பாக பரிணமிக்கிறது. ஐரோப்பியர்கள், சுதந்திரமும், செல்வச் செழிப்பும் வேண்டுமென்று உளமார ஆசைப்பட ஆரம்பித்த பொழுது, செயல்களின் தொடர் சுழற்சி ஏற்பட்டு, புது உலகத்தைக் (அமெரிக்காவை) கண்டு பிடிப்பதில் நிறைவடைந்தது.

 


இடுக்கண்களுக்கும் வாய்ப்புக்களுக்கும் இடையே ஆச்சரியமான பிணைப்பு நிலவுகிறது. வெற்றிகரமாகக் கையாளப்பட்ட இடுக்கண் சிறந்த பெரிய வாய்ப்பாக மாறவும், முறையாகப் பயன்படுத்திக் கொள்ளப் படாத வாய்ப்பு, மிகப் பெரிய இடுக்கண்ணாக மாறவும் செய்யலாம். நிர்வாகத்திறமை குறைந்த நிறுவனம் ஒன்றுக்கு திடீரென்று ஒரு பெரிய போட்டியாளர் தோன்றினால் அதை மற்றுமொரு கஷ்டமாகக் கருத வேண்டியதில்லை. மாறாக, அதை நிர்வாகத்தின் திறமையை மேம்படுத்த, ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, நிறுவனத்தை வெற்றிகரமாக புனர் அமைப்பு செய்ய வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு, நிறுவனத்தை நன்றாகச் செயல்படும்படி மாற்றி அமைக்க முடியும்.

 


மாறாக தவறாகப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்பு, தொல்லையாக முடிவதும் உண்டு. ஒரு நிறுவனத்திற்கு, விரிவாக்கப் பணிகளுக்கும் சில புது முயற்சிகளுக்கும் செலவிட வங்கியிடம் கடனாகப் பெறப்பட்ட பெரும்தொகையை, விரிவாக்கப் பணியை சரியாகச் செய்யாமல் விரயம் செய்து விட்டால், எதிர்பார்த்த அதிக வருமானத்திற்குப் பதில் பெரும் கடன் சுமைதான் ஏற்படும். அதாவது நல்ல அதிகப்படியான வருமானம் ஈட்டித்தரும் வாய்ப்பு தவறாகக் கையாளப்பட்டதால் பெரும் கடன் தொல்லையாக மாறிவிட்டது.

 


வாய்ப்பு என்பது உதாசீனம் செய்யப்படவோ அல்லது நமது விருப்பப்படி உபயோகப்படுத்திக் கொள்ளவோ கூடிய நடு நிலைப்பொருள் அல்ல. ஒரு வாய்ப்பு நம் கைக்கு எட்டும் நிலையில் இருக்கிறது என்று நாம் அறியவோ, கேட்கவோ செய்யும் பொழுது, நம் உள்ளத்தில் நிச்சயமாக ஒரு கிளர்ச்சி எழும். நாம் தொடர்ந்து அந்த வாய்ப்பை நல்ல முறையில் உபயோகிக்க முற்பட்டால், அந்தக் கிளர்ச்சி நிலைபெற்று, நல்ல பலன் கிடைக்கும். மாறாக நமக்கு வரும் வாய்ப்பை நாம் உதாசீனம் செய்தால், அருகாமையில் உள்ள, நம்மை விட அதிகமாக அதை வரவேற்கும் ஒருவரை அது சென்றடைந்துவிடும்.

 

அப்படி வாய்ப்பு நம்மை விட்டு நழுவிப் போகும் பொழுது, நம் உள்ளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி சுருங்கிவிடும். இந்தச் சுருக்கம் நம்மை பாதிக்கும்.

 


ஜெராக்ஸ் எடுக்கும் முறையைக் கண்டு பிடித்தவர், ""3 M'' என்ற பிரபல அமெரிக்க நிறுவனத்தை அணுகினார். "3 M'' நிறுவனத்திற்கு அது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. ஆனால் இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மதிப்பை உணராத "3 M'' நிறுவனம், இந்த அரிய வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ள மறுத்துவிட்டது. ஜெராக்ஸை கண்டுபிடித்தவரோ உடனே "' (ஹலாய்டு) என்ற ஒரு சிறு நிறுவனத்தை அணுகினார். இந்த புதிய கண்டுபிடிப்பின் சந்தை மதிப்பைக் கண்டு கொண்ட ஏச்டூணிடிஞீ நிறுவனம், அதை ஆவலோடு உபயோகப்படுத்தியது.

 

 

இன்று அந்த நிறுவனம் மிகப் பெரிய ஜெராக்ஸ் நிறுவனமாகத் திகழ்கிறது. எவ்வளவு அரிய பெரிய கண்டுபிடிப்பை உதாசீனம் செய்துவிட்டோ ம் என்பதை உணர்ந்த "3 M'' , தங்கள் கவனத்திற்கு வரும் எந்த ஒரு புதுகண்டுபிடிப்பையும் உதாசீனம் செய்வதில்லை என்பதை தங்கள் நிறுவனத்தின் கொள்கையாகவே கொண்டுவிட்டது.

 


இரண்டாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அகில இந்திய காங்கிரஸ் உலகப் போரில் இங்கிலாந்திற்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள ""கிரிப்ஸ் கமிஷன்'' என்ற குழு இந்தியா வந்தது. அப்பொழுது ஸ்ரீ அரவிந்தர் இந்தியா ""டொமினியன்'' அந்தஸ்து பெற்றுக் கொண்டு, நேசதேசங்களுக்கு போரில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பரிந்துரை செய்தார்.

 

இந்தப் பரிந்துரையை மிக்க மரியாதையுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டிருந்தால் காங்கிரஸ் தலைவர்கள் கோரிய நேரடி சுதந்திரத்தைப் பெற்ற பொழுது ஏற்பட்ட வன்முறைகளும், ரத்தக் களரியும் தவிர்க்கப்பட்டு ""டொமினியன்'' நிலையிலிருந்து, பிரச்னையில்லாமல் பூர்ண சுதந்திரத்தை பெற்றிருக்கலாம். ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து வந்த இந்தப் பரிந்துரை இந்தியா பிளவுபடாமல் ஒரே நாடாக சுதந்திரம் பெறக் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பு.

 

ஆனால் காங்கிரஸ் தலைவர்களின் பார்வை மங்கலாகவும் தொலைநோக்கு இல்லாததாகவும் அமைந்த காரணத்தால் ஒரு மகத்தான இந்த வாய்ப்பு, இடஞ்சலாகக் கருதப்பட்டது. எனவே அது நிராகரிக்கப்பட்டது. அதனால் தெய்வீக எழுச்சி அன்றைய சூழ்நிலையிலிருந்து பின் வாங்கிக் கொண்டதால், தேசீய சிந்தனையில் மிக மோசமான குறைபாடு ஏற்பட்டு அதன் காரணமாக, இந்தியா இரண்டாகப் பிளந்த நிலையில் சுதந்திரம் பெற்றது.
ஸ்ரீ அரவிந்தர் ""கடவுளின் கருணை கோலோச்சிக் கொண்டிருக்கும் தருணம் இது. மனிதகுலம் அடுத்த மேல் நிலைக்கு எழுச்சிபெற இது ஒரு ஆச்சரியமான வாய்ப்பு'' என்று அறிவிக்கிறார்.

 

இதன் மூலம் ஸ்ரீஅரவிந்தர் அகில உலகிற்கும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பை அளித்துள்ளார். இந்த மகத்தான வாய்ப்பின் உண்மையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளும், தேசம், சமுதாயம், தனிப்பட்ட நபர்கள் இவர்கள் வியத்தகு முன்னேற்றத்தைக் காண்பர். இதைக் கண்டு கொள்ளாதவர்கள் காணாமலே போய்விடுவர். தேர்ந்தெடுப்பது நம் கையில். நாம் புத்திசாலித்தனமாகச் செயல்படுவோமே!

 

- பேராசிரியர் இல. ஜானகிராமன்
 

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.