|
கர்மானுட்டானமும் பக்தி யோகமும்
இன்றைய சூழலில் ஞானத் தேடலில் ஈடுபடும்
ஒருவர்க்கு ஏற்படக்கூடிய சில சந்தேகங்களுக்கு, காஞ்சி பரமாசார்யர்
அளித்துள்ள விளக்கங்கள் (ஒரு வழிகாட்டியாக)...
?அவ்வப்போதைய மனக்குழப்பத்துக்கு
மருந்தாக பகவத்கீதையைத்தான் எடுக்கிறோம். பல தெளிவான பதில்கள் அதில்
கிடைக்கின்றன. ஆனாலும் சிலசமயம் குழப்புகின்றன. கர்மயோகப்படி,
செயல்புரிந்தே மேன்மையடையலாம் என்று தெளிவாகிறது மனம். "ஜனக மகாராஜர்',
கர்மங்கள் செய்தே சித்தியடைந்தவர் என்கிறது கீதை. ஆனால் பிறகு வேறிடத்தில்
"ஞானமே' உயர்ந்தது என்கிறார் கிருஷ்ணர். "கருமத்தைக் காட்டிலும் ஞானமே
மேலானது என்று நீ சொல்லும்போது, எதற்காக என்னைக் கொடிய கர்மத்தையே செய்ய
ஏவுகின்றாய்?'' என்று அர்ஜுனனே கண்ணனிடம் கேட்கிறானே! இப்படி,
செயல்புரியக் கட்டளையிடும் கர்மயோகமும், செயலற்ற தன்மையான தியானமும்
ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே?
* கர்மமும் தியானமும் ஒன்றுக்கொன்று
முரணா என்றால், இல்லவே இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை
வருகின்றன. நேராக மனஸை அடக்கி ஆத்மாவை அனுஸந்தானம் செய்யமுடியாத
ஆரம்பநிலையில் கர்மானுஷ்டானம்; அதனால் சித்தசுத்தி வந்தபின் கர்மம்
தொலைந்த தியானம், யோகம் இத்யாதி. இதில் சித்தியானபின் எதுவுமே தன்னை
பாதிக்காது என்ற நிலையில், லோக க்ஷேமத்திற்காக கர்மா & உள்ளே அடங்கி
வெளியே கூத்தடிக்கிற நிலை.முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து
பிரம்மம்தான்.
நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு
ஒன்றிப்போய், ஒரு காரியமும் எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க
வேண்டும் என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக்
கொண்டிருக்கிற
நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள், வேத கர்மங்கள், பூஜை,
ஜபம், பரோபகாரம் இதுகளையே சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற
ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி
ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும்.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், சாக்ஷாத் நம் பகவத்பாத ஆச்சார்யாளும் வகுத்துத்
தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் உபாஸனை & பக்தி, முடிவில்
ஞானம்.
?கர்மத்திலிருந்து பிறகு ஞானம் என்று
தெரிந்தது. ஆனால் கர்மானுஷ்டானத்தைக் கடைப்பிடிப்பதில் முழுசாய் மனம்
ஈடுபடுவதில்லையே! இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில் இவற்றில் ஈடுபட
மனப்பிடிப்பு ஏற்படுவதில்லையே!
* "கர்மானுஷ்டானமாவது? அதிலென்ன ஸார் இருக்கிறது? வெறும் ஸுபர்ஸ்டிஷன்'
என்று சொல்லாமல் ரிச்சுவல் எல்லாம் மீனிங்லெஸ் என்று சொல்லாமல், நிறைய
அனுஷ்டானங்களைச் செய்து கொண்டேயிருப்போம். இதனால் நம் சித்தமலம்
போகப்போகத்தான் உள்ளேயிருக்கிற ஸ்வயஞ்ஜோதி அனுபவத்தில் தெரிய
ஆரம்பிக்கும்.
? ஒரு செயலைச் செய்யும்போது, "நாம்தான்
செய்கிறோம்' என்ற எண்ணம் எப்படியும் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் கடமையைச்
செய்; பலனை எதிர்பார்க்காதே! என்ற கீதை வாக்கியத்தை எல்லோரும்
சொல்கிறார்களே ...
* சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது
எவனுக்கும் எந்தக் காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது. ஆசையும் துவேஷமும்
போய்விட்டால் எந்தக் காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக
இருக்கமுடியும். ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம்
தொலைந்தால் எந்தக் காரியங்களிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம்
பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து
கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். "நான் செய்கிறேன்' எனக்காகச்
செய்து
கொள்கிறேன் என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய
பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம்.
? ஆனால் பலனை நினைத்துக் கொண்டுதானே
இன்று எந்தச் செயலையும் செய்கிறோம். இது ஒருபுறம் இருக்கட்டும்... எந்த
ஒரு செயலுக்கும், நல்லது / கெட்டது என இரு பலன்கள் உண்டல்லவா? இப்படி
பலன்களை எண்ணிச் செயல்படும்போது, நம் எதைச் செய்வது? எதைச் செய்யக் கூடாது?
என்றெல்லாம், எதை வைத்து தீர்மானிப்பது?
* சாஸ்திரங்கள் நம்மையெல்லாம்
இப்படித்தான், "இது இதைச் செய்' என்கிற விதிகளாலும், "இது இதைச் செய்யாதே'
என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே;
லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய
வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார்.
"தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம்
ஸ்ரீகார்யா கார்ய வ்யவஸ்திதௌ' என்கிறார். "எது செய்யத் தக்கது. எது
செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்குப் பிரமாணம்' என்று
அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல்,
சாஸ்திரப்படியே கருமம் செய்யவேண்டும் என்கிறார்.
? கீதையின் காலத்தில் சாஸ்திரப்
பிரமாணம் என்பது சரி; ஆனால் இப்போது சாஸ்திரப் பிரகாரம் தேடினால் பலதும்
பகுத்தறிவுக்கு ஒட்டமாட்டேன் என்கிறது. சாஸ்திரம் என்பது வழக்கத்தால்
ஏற்படுத்தப்பட்ட நியதி என்று கொண்டாலும், அதில் காலமாற்றத்தால் ஏற்பட்ட
கசடுகளும் சேர்ந்திருக்குமே! அதனால் பழமையான வேதங்களையே கர்மத்திற்கு
பிரதானமாகக் கொள்ளவேணும் என்கிறார்கள். அக்காலத்தில் கர்மா இருந்தது;
ஆனால் இன்றைக்கு பெருகிவிட்டிருக்கிற பஜனை சம்ப்ரதாயம் இல்லை; "பஜனை
செய்தே உய்யலாம்' என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால், கர்மாவின் மீதான
பிடிப்பு தளர்ந்து விடுகிறதே! தேவை கர்மாவா? பக்தியா? பகவான் யாரிடம்
முதலில் தன் பார்வையைப் பதிப்பான்?
* வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக
அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை,
உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்கள்
கர்ம அநுஷ்டானம்
செய்வோரைப் பார்த்து, ""இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது
மனசு உருகி பக்தி
செய்யாவிட்டால் என்ன பயன்?'' என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். கர்ம
மார்க்கக்காரர்களோ இவர்களைப்
பார்த்து, "செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை; ஆடம்பரமாக மணி
அடித்துக் கொண்டும், தாளம்
போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா?' என்று நினைக்கிறார்கள்.
ஆசாரியாள் ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால், கர்மத்தையே
ஈசுவர பூஜையாகச்
செய்யவேண்டும் என்று தெரிகிறது. கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும்
மறக்காமல் இருக்க
வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும்
உயர்ந்த நிலை. கர்மங்களைச்
செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து
அவனுக்குக் கர்மபலனை
அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை.
சாமானிய
ஜீவர்கள் ஒரு கர்மம்
என்று இறங்கிவிட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே
தனித்தனியாகக்
கர்மாவும் வேண்டும்; பக்தியும் வேண்டும். நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச்
செய்கிற உத்தமநிலை
சித்திக்கும்; அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும்
ஆகலாம்; அல்லது பூஜை,
கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம் என்கிற சமாதிநிலை ஏற்படலாம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால் கர்மம்
செய்கிறவனிடம் பகவான் பிரீதி
அடைவானா? பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா?
ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை
எதுவும் செய்யாமல் அந்தப்
பிரபுவை ஸ்தோத்திரம் செய்து கொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு
நேர்த்தியாக வேலை
செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் அன்போ பாசமோ காட்டாமல், வேலையை
மட்டும் கவனிக்கிறான்.
சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம்
பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப்
பாத்திரமாக முடியும் என்று தோன்றும்.
பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக
இருந்தால் கண்ணில் படாமல்
வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். ஈசுவரன் அசட்டுப்
பிரபு இல்லை. தன்னை
ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன்
அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.
தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான்.
ஆனாலும் அந்தக் கர்ம
மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாமல், "வெட்டு வெட்டு' என்று வேலை
மட்டும் செய்தால் அவன் பகவத்
பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது.
? பகவதானுபவத்தை அனுபவிக்க, கர்மமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி இரண்டு...
சரி! சேவை என்ற
பரோபகார மார்க்கமும் உண்டு என்கிறார்களே... இது பற்றிய பண்டைய வழக்கம்
ஏதும் உண்டோ ?
* அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூக சேவை, ஸோஷியல்
சர்வீஸ் என்று இந்த
நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப்
பகட்டுமில்லாமல் சுபாவமாகவே
மக்கள் செய்து வந்தனர். இதற்குப் "பூர்த்த தர்மம்' என்று ஒரு பெயர்.
ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம், ஆத்ம க்ஷேமத்துக்காகக்
கோயில் கட்டுவது, அதன்
அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம் "பூர்த்த தர்மத்தில்' சேர்ந்தவை. இதில்
கிணறு, குளம் வெட்டுவது
முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சுவழக்கில்கூட "அவன் என்ன
செய்து கொண்டிருக்கிறான்?
வெட்டிக் கொண்டு இருக்கிறானா?' என்கிறோம். "வெட்டுவது அவ்வளவு பெரிய
தர்மம். தாகமெடுத்த
பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகக் கிராமத்துக்கு வெளியே
மேய்ச்சல் பூமியில் ஒரு குளம்
வெட்டினால் எவ்வளவோ புண்ணியம்.
ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில்
இருக்கிற சகலரும் &
பணக்காரர், ஏழை என்கிற வித்யாசமில்லாமல் & ஒன்றுசேர்ந்து மண்வெட்டியைக்
கையில் எடுத்துக் கொண்டு
இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபடவேண்டும். இதனால்
சமூக ஒற்றுமையும்
அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக
தியானம், வாக்குசுத்தமாக
சுலோகம் & இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த
சரீரத்தால் சேவை செய்ய
வேண்டும்.
உழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன்,
தாழ்ந்தவன் என்றில்லாமல்
எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி
எடுத்ததாகும்.
குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம்.
வெளிவேஷம்,
டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது
ஒற்றையடிப் பாதைக்குப்
போய், அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப்
போதும் & அதுவே பரோபகாரம்;
சித்த சுத்தி என்கிற ஆத்மலாபமும் ஆகும்.
? இந்த வர்த்தக உலகில் தமக்குத்தாமே நல்லது செய்து கொள்ளத்தானே இந்த
அளவுக்கு உழைத்து
சம்பாதிக்கிறார்கள். அதற்கே நேரம் போதாமல் பரபரப்பாகச் சுற்ற
வேண்டியிருக்கிறதே.
* மற்றவர்களுக்குச் சேவை புரிவதற்காக நாம் எத்தனையோ கஷ்டங்களை, தியாகங்களை,
உடல் சிரமத்தை
எல்லாம் அடைந்தாலும் இதற்கெல்லாம் மேலாக அதிலேயே ஒரு நிறைவை சந்துஷ்டியை
நமக்குள் ஏதோ
ஒன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
நமக்கு எத்தனையோ கஷ்டங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு
அவஸ்தை, வீட்டுக் கவலை &
இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூகசேவை வேறா
என்று எண்ணக் கூடாது.
உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும்.
அதோடுகூட "அசலார்
குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்' என்றபடி, நம்முடைய
பரோபகாரத்தின் பலனாக
பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான்...
ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத்
தீர்க்க நம்மாலானதைச்
செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும், அதனால்
பிறத்தியான் பெறுகிற பலன் ஒருபக்கம்
இருக்கட்டும்; நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும்
ஏற்பட்டு அந்த வழியில் மேலும்
மேலும் செல்வோம்.
?"பத்தினியிடமும் பிள்ளையிடமும் மற்றவற்றிடமும் நாம் வைக்கிற
பிரியத்துக்கெல்லாம் உண்மையில் நம்மிடமே
உள்ள பிரியம்தான் காரணம். நம் உள்ள நிறைவுக்காகத்தான் மற்றவரிடம் பிரியம்
காட்டுகிறோம்' என்று
யாக்ஞவல்கிய உபநிஷத் உபதேசம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால், பர உபகாரம்
என்பதை சுயநலம் என்றே
எடுத்துக் கொள்ளலாமா?
* நேரடியாக நமக்கே நல்லது செய்து கொள்ளவேண்டும் என்று, பணத்தையும்,
இந்திரிய சுகங்களையும் தேடிப்
போனால், இந்த உள் நிறைவு உண்டாக மாட்டேன் என்கிறது. மாறாக சுயகாரியங்கள்
நிம்மதியின்மையிலும்
துக்கத்திலுமே கொண்டு விடுகின்றன.
கண்ணாடியில் நமது முகத்தைப் பார்க்கிறோம். அதன் நெற்றியில் பொட்டில்லை
என்று தெரிகிறது. உடனே
கண்ணாடிக்குச் சாந்து இட்டால் என்ன ஆகும்? கண்ணாடி கறுப்பாகும்.
பிம்பத்துக்குப் பொட்டு வைப்பது
என்றால், பிம்பத்தின் மூலமான மனிதனுக்குத்தான் பொட்டு வைத்துக்
கொள்ளவேண்டும்.
"எனக்கு' என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் உண்மையில் நம் மனசுக்குக்
கரிப்பொட்டு வைப்பதாகவே &
நமக்கு நாமே கரியைப் பூசிக் கொள்வதாகவே & முடிகிறது. மனசு என்கிற மாயக்
கண்ணாடியில் பிரதிபலிக்கிற
பரமாத்ம பிம்பத்தையே "நான்' என்று நினைக்கிறோம். அந்தப் பிம்பத்துக்கு
அழகு செய்வது என்றால்
உண்மையில் பரமாத்மாவுக்கு அழகு செய்ய வேண்டும்.
பரமாத்ம ஸ்வரூபமான லோகத்துக்கெல்லாம் செய்கிற சேவை இதனால்தான் நிறைவைத்
தருகிறது. இதே
மாதிரிதான் அந்தப் பரமாத்வையே பூஜிப்பதும், தனக்கு என்று வைத்துக்
கொள்கிற கரிப்பொட்டு,
இப்போதுதான் அலங்கார திலகமாகிறது.
? மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்பதும் சரிதானே!
* ஜீவராசிகளுக்குச் செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா
பிதாவாக இருக்கப்பட்ட
பரமேஸ்வரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர்
திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.
நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின்
படமாடக் கோயில் பகவர்க் கீதாமே...
இதற்கு அர்த்தம், "மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச்
செய்கிற பூஜையே ஆகும்'' என்பது.
? பரோபகார சிந்தை உள்ளவன், தன்னுடைய கர்ம மார்க்கமான பரோபகார
மார்க்கத்தில் வெற்றியடைய வழி
என்ன?
* நம்மைப் போலவே சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக்
கொண்டு, எல்லோரும்
ஒரே சங்கமாக, ஒரே அபிப்ராயமாக இருந்துகொண்டு சேவை செய்வது சிலாக்கியம்.
அப்படிப் பலர் கூடிச்
செய்யும்போது, நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும்
இப்படிப்பட்ட சங்கங்கள்
உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும்
அத்தியாவசியம். மான
அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும்
உள்ளே அத்தனையும்
பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை
விளையாட்டாகவே
போக்கடித்தான்? குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும்.
ஆனால் கோபர்களைக்
காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை
விஷம் கக்கும்
காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது, வெளியிலே பார்த்தால் விளையாட்டு;
உண்மையில் அதுவும்
ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக செய்த
சேவைதான். இப்படித்தான்
எத்தனையோ விளையாட்டுக்கள் செய்தான். அத்தனையும் சேவை.
லௌகீக சேவை மட்டும் இல்லை; ஞான சேவையும் நிறையச் செய்தான். அர்ஜுனன்,
உத்தவர்
போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு
எல்லாம் அவனிடம் ஒன்றாக
இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். சிரித்துக்
கொண்டே சாந்தமாக
இவ்வளவையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும்
சேவை
செய்கிறவர்களுக்கெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும்
இருக்கவேண்டும்& தைரியம், ஊக்கம்
இவற்றோடு!
கருத்தாக்கம் :
செங்கோட்டை
ஸ்ரீ.ஸ்ரீராம் (மஞ்சரி
தீபாவளி மலர் 2006)
படங்கள் உதவி: மஞ்சரி
மாத இதழ்
|