|
மணவாள
மாமுனிகள் அருளிச் செய்த

உபதேச
ரத்தின மாலை
தனியன்
கோயில் கந்தாடையண்னன் அருளிச் செய்தது.
கட்டளைக் கலித்துறை
முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த* நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி *
தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னை *
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே.
நேரிசை வெண்பா
எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால்*
வந்த உபதேச மார்க்கத்தைச் - சிந்தை செய்து*
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்*
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து. (1)
கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசையுள்ளோர் *
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் * - மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்தது என் நெஞ்சே! * இகழ்கை
ஆச்சரியமோ தான் அவர்க்கு. (2)
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி *
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி * - ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி *
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து. (3)
பொய்கையார் பூதத்தார் பேயார் * புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் * - துய்ய பட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நன் கலியன் *
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு. (4)
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் *
இந்த உலகில் இருள் நீங்க * - வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய *
ஈதென்று சொல்லுவோம் யாம். (5)
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை *
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! * - எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் *
தேசுடனே தோன்று சிறப்பால். (6)
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *
நின்றது உலகத்தே நிகழ்ந்து. (7)
பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ *
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் * - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த *
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண். (8)
மாறன் பணித்த தமிழ் மறைக்கு * மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த * - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று காதலிப்பார் *
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து. (9)
கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்! *
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் * - ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்*
நன்குடனே கொண்டாடும் நாள். (10)
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர் *
என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் * - துன்னு புகழ்
மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால் *
நான்மறையோர் கொண்டாடும் நாள். (11)
தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்ய மதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள். (12)
மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர் *
தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில் * - பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் *
நல்லவர்கள் கொண்டாடும் நாள். (13)
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை *
பாரோர் அறியப் பகர்கின்றேன் * - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் * எழில் குருகை
நாதன் அவதரித்த நாள். (14)
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள் *
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்? * - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ?*
ஒருபார்தனில் ஒக்கும் ஊர் (15)
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !*
இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன் * - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த *
நல் ஆனியில் சோதி நாள். (16)
மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த *
ஆனிதன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் * - ஞானியர்க்கு
ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே *
எப்போதும் சிந்தித்து இரு. (17)
மங்களாசாசனத்தின் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் * ஆர்வத்தளவு தான் அன்றி * - பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் *
பெரியாழ்வார் என்னும் பெயர். (18)
கோது இலவாம் ஆழ்வார்கள் கூறுகலைக்கு எல்லாம் *
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் * - வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய் *
தான் மங்கலம் ஆதலால். (19)
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்?*
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பு ஒருவர்? - தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில் *
பைதல் நெஞ்சே ! நீ உணர்ந்து பார். (20)
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் * மதுரகவி
ஆழ்வார் எதிராசர் ஆம் இவர்கள் * - வாழ்வாக
வந்து உதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்*
இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம். (21)
இன்றோ திருவாடிப் பூரம் * எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் * - குன்றாத
வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து *
ஆழ்வார் திருமகளாராய் . (22)
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் * ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை * - ஒருநாளைக்கு
உண்டோ மனமே! உணர்ந்து பார் * ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு. (23)
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் * ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் * - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும் *
வழுத்தாய் மனமே மகிழ்ந்து. (24)
ஏரார் மதுரகவி இவ்வுலக்ல் வந்து உதித்த *
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் * - பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும் *
உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர். (25)
வாய்த்த திருமந்திரத்தின் மத்திம்மாம் பதம் போல் *
சீர்த்த மதுரகவி செய்கலையை * - ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே *
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து. (26)
இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் *
என்றையினும் இன்றிதனுக்கு ஏற்றம் எந்தான் * - என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால் *
நால் திசையும் கொண்டாடும் நாள். (27)
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் *
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் * - ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் * சித்திரையில்
செய்ய திருவாதிரை . (28)
எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா *
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் * - இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்சே !*
ஒருவாமல் எப்பொழுதும் ஓர். (29)
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர் *
வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை * - மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர் *
ஓங்குமுறையூர் பாணனூர். (30)
தொண்டரடிப் பொடியார் தோன்றிய ஊர் * தொல்புகழ் சேர்
மண்டங்குடி என்பர் மண்ணுலகில் * - எண் திசையும்
ஏத்தும் குலசேகரன் ஊர் என உரைப்பர் *
வாய்த்த திருவஞ்சிக் களம். (31)
மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர் *
மின்னு புகழ் வில்லிபுத்தூர் மேதினியில் * - நன்னெறியோர்
ஏய்ந்த பத்திசாரர் எழில் மாறன் பட்டர்பிரான் *
வாய்ந்துதித்த ஊர்கள் வகை. (32)
சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர் *
ஏரார் பெரும்பூதூர் என்னும் இவை * - பாரில்
மதியாரும் ஆண்டாள் மதுரகவியாழ்வார் *
எதிராசர் தோன்ரிய ஊர் இங்கு. (33)
ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் *
தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர் *- ஏழ்பாரும்
உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளது எல்லாம் *
வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து. (34)
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும் *
தாழ்வா நினைப்பவர்கள் தாம் * நரகில் - வீழ்வார்கள்
என்று நினைந்து நெஞ்சே ! எப்பொழுதும் நீ அவர்பால் *
சென்று அணுகக் கூசித் திரி. (35)
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்? *
அருளிச் செயலை அறிவார் ஆர் ? - அருள் பெற்ற
நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால் *
பேதை மனமே ! உண்டோ பேசு. (36)
ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் *
ஏரார் எதிராசர் இன்னருளால் * - பாருலகில்
ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று*
பேசி வரம்பு அறுத்தார் பின். (37)
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு *
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் * -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த *
அந்தச் செயல் அறிகைக்கா. (38)
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை *
தெள்ளார் வடக்குத் திருவீதிப் - பிள்ளை *
மணவாள யோகி திருவாய் மொழியைக் காத்த*
குணவாளர் என்று நெஞ்சே ! கூறு. (39)
முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் *
அந்த வியாக்கியைகள் அன்றாகில் * - அந்தோ
திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல *
குரு ஆர்?* இக்காலம் நெஞ்சே கூறு. (40)
தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்
பிள்ளான் * எதிராசர் பேரருளால் * - உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்று உரைத்தது *
இன்பமிகும் ஆறாயிரம் . (41)
தஞ்சீரை ஞானியர் தாம் புகழும் வேதாந்தி *
நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் * - எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை ஆய்ந்துரைத்தது *
ஏர் ஒன்பதினாயிரம். (42)
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட *
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் * - இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது *
இருபத்து நாலாயிரம். (43)
தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை *
வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை* - இந்த
நாடறிய மாறன் மறைப் பொருளை நன்கு உரைத்தது *
ஈடு முப்பத்து ஆறாயிரம் . (44)
அன்போடு அழகிய மணவாளச் சீயர் *
பின்போரும் கற்று அறிந்து பேசுகைக்கா * - தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது *
ஏதமில் பன்னீராயிரம். (45)
பெரிய வாச்சான் பிள்ளை பின்புள்ள வைக்கும்
தெரிய * வியாக்கியைகள் செய்வால் * - அரிய
அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது *
அருளிச்செயலாய்த் தறிந்து. (46)
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு *
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே ! * - தம்சீரால்
வையகுருவின் தம்பி மன்னு மணவாள முனி *
செய்யும் இவை தாமும் சில. (47)
சீரார் வடக்குத் திருவீதிப்பிள்ளை * எழு
தேரார் தமிழ் வேதத்து ஈடுதனை * - தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணிமாதவர்க்குத்
தாம் கொடுத்தார்* பின்னதனைத் தான். (48)
ஆங்கவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை *
தாம் கொடுத்தார் தம்மகனார் தம் கையில் * - பாங்குடனே
நாலூர்ப் பிள்ளைக்கு அவர்தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம் *
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு. (49)
நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் * அவரவர் தம் ஏற்றத்தால் * - அன்புடையோர்
சாத்து திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே! *
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று. (50)
துன்னுபுகழ்க் கந்தாடைத் தோழப்பர் தம் உகப்பால் *
என்ன உலகாரியனோ என்று உரைக்க * - பின்னை
உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி *
விலகாமல் நின்றது என்றும் மேல். (51)
பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை * அன்பால்
அன்ன திருநாமத்தை ஆதரித்து * - மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது * எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு. (52)
அன்ன புகழ் முடும்பை அண்ணல் உல்காசிரியன் *
இன்னருளால் செய்த கலை யாவையிலும் * உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை *
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் இப்போது. (53)
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை * மிகக் கொண்டு கற்றோர் தம்முயிர்க்கு * - மின்னணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணம் எனும்
பேர் * இக்கலைக்கு இட்டார் பின். (54)
ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்? *
ஆரது சொல் நேரில் அநுட்டிப்பார்? - ஓர் ஒருவர்
உண்டாகில் அத்தனை காண் உள்ளமே! * எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது? (55)
உய்ய நினைவுடையீர்! உங்களுக்குச் சொல்லுகின்றேன் *
வைய குரு முன்னம் வாய் மொழிந்த * - செய்ய கலை
யாம் வசனபூடணத்தின் ஆழ் பொருளைக் கற்று * அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து. (56)
தேசிகர்பால் கேட்ட செழும் பொருளை * சிந்தை தன்னில்
மாசறவே ஊன்ற மனனம் செய்து * - ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூடணத்தின் வான் பொருளை*
கல்லாதது என்னோ கவர்ந்து. (57)
சச் சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால் *
மெச்சும் வியாக்கியை தான் உண்டாகில் * - நச்சி
அதிகரியும் நீர் வசன பூடணத்துக்கற்ற
மதியுடையீர்!* மத்தியத்தராய். (58)
சீர் வசன பூடணத்தின் செம்பொருளை * சிந்தை தன்னால்
தேரிலுமாம் வாய்கொண்டு செப்பிலுமாம் * - ஆரியர்காள்!
என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ *
உந்தமக்கு எவ்வின்பம் உளதாம்? (59)
தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்று இல்லாதார் *
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன் * - இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் * ஆதலால்
நண்ணார் அவர்கள் திருநாடு. (60)
ஞானம் அநுட்டானம் இவை நன்றாகவே உடைய
னான* குருவை அடைந்தக்கால் * - மாநிலத்தீர்!
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் *
தானே வைகுந்தம் தரும். (61)
உய்ய நினைவு உண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் * அன்பு தன்னை இந்த மாநிலத்தீர் !* - மெய் உரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம் *
கையிலங்கு நெல்லிக் கனி. (62)
ஆசாரியன் செய்த உபகாரமானவது *
தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் * - தேசாந்
தரத்தில் இருக்க மனம்தான் பொருந்த மாட்டாது *
இருத்தல் இனி ஏது அறியோம் யாம். (63)
தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது * அவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் * - அந்நேர்
அறிந்தும் அதில் ஆசையின்றி ஆசாரியனைப்
பிரிந்திருப்பார் ஆர்?* மனமே! பேசு. (64)
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன் *
தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை * - ஆசையுடன்
நோக்கும் அவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும் *
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம். (65)
பின்பழகராம் பெருமாள் சீயர் * பெருந்திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க ஆசையினால் * - நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே !
ஊனம் அற எப்பொழுதும் ஓர். (66)
ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த *
ஆசாரம் தன்னை அறியாதார் * - பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே * பூருவர்கள்
சீர்த்த நிலை தன்னை நெஞ்சே ! சேர். (67)
நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும் *
ஆத்திக நாத்திகருமாம் இவரை * - ஓர்த்து நெஞ்சே !
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு * நடுச்
சொன்னவரை நாளும் தொடர். (68)
நல்ல மணம் உள்ளது ஒன்றை நண்ணியிருப்பதற்கு*
நல்ல மணம் உண்டாம் நயம் அதுபோல்* - நல்ல
குணம் உடையோர் தங்களுடன் கூடியிருப்பார்க்கு *
குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு. (69)
தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்திருப்பது ஒன்றுக்கு *
தீய கந்தம் ஏறும் திறமது போல் * - தீய
குணம் உடையோர் தங்களுடன் கூடியிருப்பார்க்கு *
குணம் அதுவேயாம் செறிவு கொண்டு. (70)
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு *
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே * - தம் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர
வாற்றது என்பர் * மூர்க்கர் ஆவார். (71)
பூருவாசாரியர்கள் போதம் அநுட்டானங்கள் *
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் - தேறி *
இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் *
தெருள் தரு மா தேசிகனைச் சேர்ந்து. (72)
இந்த உபதேச ரத்தின மாலை தன்னை *
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் * - எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவர் தாம். (73)
எறும்பியப்பா அருளிச்செய்தது
மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன் *
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை * - உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை *
கரத்தாலே தீண்டல் கடன்.
மணவாளமாமுனிகள் திருவடிகளே சரணம்
|