|
|
பலியர் இன மக்களின்
மருத்துவ வாழ்க்கை
"சிறுமலைத் தொடர்',
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் நகரிலிருந்து 23
கி.மீ. தொலைவில், இம் மலைத் தொடர் தென்படுகின்றது. மதுரையின் வடமேற்குப்
பகுதியிலிருந்து பார்த்தாலும், இம்மலைத் தொடர் தெரியவரும். இம்மலைத் தொடர்
செவ்வக வடிவத்தில், 19.3 கி.மீ. நீளத்திலும், வடக்கு மேற்காக 12.8 கி.மீ.
பரந்தும், 317 கி.மீ பரப்பளவில் படர்ந்துள்ளது. பல இயற்கை சீற்றங்களுக்கு
ஆளாகி, பல வெள்ளப் பெருக்கால் அரிக்கப்பட்டு, இன்று மலைத் தொடரின் பல
இடங்கள் வறண்ட பூமியாகத் தான் காட்சியளிக்கிறது.
"பலியர்' என்ற மக்கள், இம்மலைக் காடுகளில், பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து
வரும் பழங்குடியினர். பல்லாண்டுகளாக, இன்றைய நாகரீகத்தின் போலி சுவடுகள்
பதியாமல், அவர்களது காடுகளோடு தோன்றிய கலாச்சார பண்பாடுகளோடு, இயற்கை
அன்னை அழித்த பெருங் கொடைகளான காய்கறி, கனி வகைகள், செடி & கொடி & தாவர
வகைகள், குறிப்பாக மருத்துவ குணங்கொண்ட தாவர வகைகளோடு இயற்கையோடு வாழ்ந்து
வரும் ஒரு சிறிய மக்கள் தொகை கொண்ட கூட்டமே, பலியர் என்ற பெயரோடு வாழ்ந்து
வருகின்றனர்.
அண்ணல் காந்திஜி சொன்னது போல, ""மனிதன் வாழ இயற்கையிடம் எல்லா வளங்களும்
இருக்கின்றன. ஆனால் பேராசை மனிதனுக்கு இம் பூமியில் ஏதுமில்லை'' என்ற
அர்த்தமுள்ள வரிகளோடு "பலியர்' மக்கள் இன்பமாக அம்மலைக் காடுகளில்
வாழ்ந்து வருகின்றனர். இன்றைய நவநாகரீகப் பேராசை மனிதர்கள் அங்கில்லை.
போட்டி & பொறாமைகள் அங்கில்லை. எதையும் காசாக்கும் வித்தை தெரிந்தவர்கள்
எவருமில்லை.
இம்மலை மேற்பரப்பில் செம்மண் தென்பட்டாலும், அதன் மடியில், தாவரங்கள்
செழிப்புடன் வளர, எல்லா வளங்களையும் பெற்றுள்ளது. வருடத்தின் அக்டோபர் &
டிசம்பர் மாதங்களில் மழையும், ஏப்ரல் & மே மாதங்களில் 40% இ வெப்பத்தையும்
இங்குக் காணலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் வருவதற்கு முன்புள்ள
ஜாமீன்தார்களின் ஆவணங்களைப் பார்த்தால், இம்மலைக் காடுகள் அம்மாயா
நாயக்கனார் ஜமீன்தார்களின் சொத்துக்களாகத் தெரிய வருகின்றது.
1877&78ல் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டு வெள்ளத்தில், இம்மலைத் தொடரின்
மேற்பகுதியும், ஏராளமான மரங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. 1871&இல் தான், இம்மலைத் தொடர், பயிர் செய்ய
சீராக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. சிறுமலைத் தொடரின் 250
கி.மீட்டரிலிருந்து, 1000 மீட்டர் வரை புதர் குண்டுகளும், சாவன்ன
வகைக்காட்டு மரங்களும் படர்ந்துள்ளது. மற்ற 1000 மீட்டரில் நடுத்தரமான
மரங்களும், பச்சை பசேலென தாவர வகைகள், மூலிகை வகைகள் மருத்துவ குணம்
கொண்ட தாவர வகைகள், கிழங்கு, கீரை, காட்டு கனிவகை மரங்கள் படர்ந்துள்ளன.
பலியர் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தாலும், தனித்தனி
குடும்பமாகவே, கூரை வேய்ந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 5 அடி உயரம்,
தட்டையான மூக்கு, தடித்த உதடுகள் கொண்ட மனிதர்களாகத் தெரிகின்றனர்.
இம்மலைத் தொடர், பூமியின் மட்டத்திலிருந்து 6000&8000 அடி உயரத்தில்
இருக்கின்றது.
பலியர் மக்கள் இம்மலைக் காடுகளில் கிடைக்கும் கிழங்கு, கீரை, பழங்கள்,
தண்டுகள், இறைச்சி இவைகளை உணவாக உண்டு வருகின்றனர். தேன் இவர்கள்
வருமானத்திற்குக் கிடைக்கின்ற முக்கியமான பொருள். தேன் எடுப்பதே இவர்களது
முக்கியத் தொழில். வாரத்தில் இரண்டு நாட்களே தேன் எடுக்க ஆண்கள் வெளியே
செல்கின்றனர். மற்ற நாட்களில் காடுகளில் அலைந்து திரிந்து அங்குக்
கிடைக்கின்ற மற்ற உணவு வகைகளை சேகரிக்கின்றனர்.
பலியர் மக்களின் தெய்வங்கள் "பலிச்சயம்மா' என்ற பெண் தெய்வமும், "கருப்பண்ண
சாமி' என்ற ஆண் தெய்வமும். இவர்களது வழிபாட்டு தெய்வங்களையும் மரத்தடியில்
எழுப்பியுள்ளனர். பலிச்சயம்மா சைவக் கடவுள்; கருப்பண்ண சாமி அசைவம்.
கருப்பண்ண சாமிக்கு, கடா வெட்டும் போது, ஒரு திரைச்சீலையை இரண்டு
சாமிகளுக்கிடையே போட்டு விடுவர். ஆனி மாதத்தில் இத் தெய்வங்களுக்கு பூசை
போடுகின்றனர். ஆட்டு இறைச்சியை பெரும்பாலான மக்கள் சாப்பிடுகின்றனர்.
மாட்டிறைச்சி வெகு சிலரே சாப்பிடுகின்றனர். மாட்டிறைச்சி சாப்பிடும்
மக்கள் "புலியன்கள்' என்று அழைக்கப்படும் தாழ்ந்த குலம் என்றே இவர்கள்
கூறுகின்றனர்.
இரண்டு பெரிய மரத்துண்டுகளை நட்டு வைத்து & இடையே கூரைகளை வேய்ந்து,
வீடுகளைக் கட்டி விடுகின்றனர். சிலர் இரண்டு மரங்களுக்கிடையேயும் கூரைகளை
வேய்ந்து விடுகின்றனர்.
"குறிஞ்சி மலர்கள்' பூக்கின்ற காலமே, வசந்த காலமாக இவர்கள்
கொண்டாடுகின்றனர். இதற்கென தனிவகை பூசை செய்கின்றனர். குறிஞ்சி மலர்களை,
முறத்தில் வைத்து பலிச்சியம்மாவுக்குப் பூசை போட்டு, பாட்டுப் பாடி நடனம்
ஆடுகின்றனர். இக்காலங்களில், இவர்கள் தேனீக்களை வரவேற்றும் பாடல்களைப்
பாடுகின்றனர். இத் தேனீக்கள், அதிக தேனை கொண்டு வர வேண்டும். அதன் மூலம்
இவர்கள் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
பலியர் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற மலைவாழ்
மக்கள். பலியர் தேனெடுக்கும் நாட்களில் சுத்தமாக இருந்து, பலிச்சியம்மாவை
காலையில் வேண்டிக் கொண்டு வெளியே செல்வர். இந்நாட்களில், மனைவியுடன் உடல்
தொடர்பற்று மிகுந்த பயபக்தியுடன் தான் செல்வர். பலிச்சியம்மா, தங்களை
விஷக்கடிகளிடமிருந்து காப்பாற்றி விடுவார் என்ற தெய்வ நம்பிக்கையில்
தேனெடுக்கக் கிளம்புகின்றனர்.
மலைக்காடுகளில் மருத்துவ குணம் நிறைந்த காய்&கனிகளை விற்று, வாழ்க்கையை
ஓட்டுகின்றனர். இக்காய் கனிகளை, திண்டுக்கல் சந்தையில் குறைந்த விலைக்கே
விற்பர்.
இயற்கை அன்னை அள்ளிக் கொடுக்கும் ""நெல்லிக்காய், கடுக்காய், சுண்டைக்காய்,
நெய்கொண்டைக்காய், மாவிளங்கு கிழங்கு, நன்னாரி, நாவல், பேய் எச்சங்கிழங்கு,
வேம்பு, கண்வல்லிக் கிழங்கு, கருனா காத்தாடு. ஈச்சம்மார்'' போன்றவை
இவர்கள் மூலம் சந்தைக்கு வருகிறது.
தேன் சேகரித்தல் & தேன் சேகரிப்புத் தொழிலை, மிகுந்த பயபக்தியுடன்,
பலிச்சயம்மாவின் துணையோடு, அதிகாலையில் குளித்து, தேன் சேகரிக்கும்
மரத்திற்கு விளக்கேற்றி அம்மரத்தை வணங்கிவிட்டு, ஒரு வித பச்சிலைக்
கொடிகளை தூபம் போட்டு, அதிலிருந்து வரும் புகையிளை தேன் கூட்டின் மேல்
செலுத்துவர். இப்புகையின் கொடூரத்தால் தேனீக்கள் வெளியே ஓடிவிடும். பிறகு,
தேன் கூடுகளை சேகரித்து, தேனைப் பிழிந்தெடுப்பர். ஆனி & ஆவடி மாதங்களில்
தேன் அதிக அளவில் கிடைக்கும். பிறந்த அவர்களது குழந்தைகளுக்கு முதலில்
தேனைத்தான் நாக்கில் தடுவுகின்றனர்.
பலியர்கள் மூலிகை & பச்சிலை மருத்துவத்தையும் அறிந்து, தம் அன்றாட
வாழ்க்கையிலும் இதனை பயன்படுத்துகின்றனர். அவர்கள் பயன் படுத்தும் மூலிகை,
பச்சிலை பட்டியல்.
பூத்தை புல் & தும்பை இலைகளை, தண்ணீரில் வேக வைத்து, அதன் ஆவி பிடித்தால்,
தலைவலி பறந்தோடிப் போகும்.
வெட்டு பச்சிலை & வெளி ரணங்களை ஆற்றும் குணம் கொண்டவை.
காய்ந்த மாங்கொட்டை துருவலுடன் தேன், எலுமிச்சை சாறும் சேர்த்துக்
கொடுத்தால் பேதி நின்றுவிடும்.
காட்டு கருவணைக் கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் மூலம், குடல் இறக்க நோய்
பறந்தோடுகிறது.
மலன் தங்கை வேரை, காய்ச்சி & பருகினால் "வயிற்று வலி' குறையும்.
மிலாகருணை வேரைக் காய்ச்சி, நீரைப் பருகினால் கடுமையான வயிற்று வலி
குறையும்.
மிகக் கொடிய விஷத்தன்மையுடைய கருணாகத்தாவின் வேரின் சாற்றை எடுத்து
சுண்ணாம்புடன் கலந்து & பாம்பு விஷக்கடி மேல் தடவினால், 5 நிமிடங்களில்
வலி பறந்து போகும்.
அரிக்காய் கொட்டிக்காய் வேரை தண்ணீரில் வேக வைத்து, அதன் நீரைப் பருகினால்
சுலபமாக பிரசவமாகும். (இம்மலைவாழ்மக்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள, இதுவரை
ஆங்கில மருத்துவமனைகளுக்கு சென்றதே இல்லை)
கடுக்காயும், தேனையும் சேர்த்து கலந்து கொடு.த்தால் அடிக்கடி கருச்சிதைவு
ஏற்படாது.
நிலப்பனைக் கிழங்கை சுட்டு, பல்லின் ஈறு வலிக்கின்ற பகுதியின் மேல்
வைத்தால், ஈறு வலி ஓடிவிடும்.
ஆலம் பாலை, பற்களின் மேல் தடவினால் பல் வலி குறையும்.
கான்பலா மரப்பாலை, எலும்பு முறிந்த இடத்தில் தடவி, கட்டு கட்டி வைத்தால்,
சிறிது நாட்களில் எலும்பு சேர்ந்து விடும்.
உடும்பு எண்ணையை, எலும்பு முறிந்த இடத்தில் தடவி கட்டுக் கட்டி வைத்தால்,
எலும்பு முறிவு குண மாகும்.
இவ்வாறு, பலியர்கள் தங்கள் காட்டில் கிடைக்கும் இயற்கைத் தாவரங்களைக்
கொண்டே, எல்லாவித நோய்களிலிருந்தும், தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர்.
ஆனால், இன்று பல மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், இவ்வகைத் தாவர வகைகளை,
காட்டுத்தனமாக வெட்டி எடுத்துச் செல்வதாக, இம்மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
வணிக ரீதியான அணுகுமுறையால், இயற்கை அழிவும், மலைவாழ் காட்டுவாழ் மக்களின்
வாழ்க்கை முறையும் அபாயத்தில் இருக்கின்றன.
இன்று, உலகெங்கும் இயற்கை மூலிகை மருந்து, மக்களால்
பயன்படுத்தப்படுகின்றன. பன்னாட்டு மருந்து கம்பெனிகள், தங்களின் பண
பலத்தால், இயற்கையின் மடியில் கை வைக்க ஆரம்பித்து விட்டனர். உலக
சந்தையின் விற்பனை கொடூரத்தின் தீவிரத் தன்மைக்கு, இயற்கை வளங்கள் ஈடு
கொடுக்க முடியாமல் திண்டாடுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும், அப்பகுதி அரசியல்
தலைவர்கள், சிறு முதலீட்டார்கள் சேர்ந்து கொண்டு செய்யும் வணிக ரீதியான
அணுகுமுறையால், மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளதாக உலக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகின்றது.
மலைவாழ் மக்களும், எதிர்காலமும்:
சுமார் 350 லட்சம் மக்கள், மலைவாழ் மக்களாக உலகெங்கும் பரவி, வாழ்ந்து
வருகின்றனர். இவர்கள் 70 நாடுகளில், 5000 வகையான மொழிகள் பேசி, அவர்களின்
கலாச்சாரத்தோடு, எதிலும் கலக்காமல், இயற்கையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
யுனஸ்கோ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், இம்மக்களின் துயரங்களையும்,
வேண்டுதல்கள், தேவைகள் குறித்து ஆராய்ந்து, அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர்.
இவர்களது அறிக்கையில் முக்கியமாக மலைவாழ் மக்களின் கல்வி மேம்பாடு,
அவர்களது மொழி தொடர்பியல், கலாச்சார பாதுகாப்புகுறித்து நிறைய
கூறப்படுகிறது.
அவர்களது கல்விக் கண்களைத் திறந்து விட்டால், பரபரப்பான விஞ்ஞான உலகோடு
அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள். அதன் மூலம், அவர்கள் உலக
மக்களோடு தொடர்புகொண்டு, அவர்களது வாழ்க்கை அமைப்பினை மாற்றிக் கொண்டு
சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என நினைக்கின்றனர். செய்தால், அதுவே
இவர்களுக்குச் செய்யும் தொண்டாக அமையும்.
- ஜெயானந்தன் |