|
தமிழ்
வணக்கம்
(வெண்பா)
நெஞ்சில் உரம்வேண்டும் நேர்மைத் திறம்வேண்டும்
கொஞ்சு தமிழ்மொழிக் காரிகையே - வஞ்சகரை
வீழ்த்தும் வரம்வேண்டும் எந்நாளும் உன்னடியில்
ஆழ்ந்திருக்க நல்மனமும் தா.
கிராமியக் காதை
கற்பனையில் ஒரு கதை
கவிதை ஆக்கம் :
செங்கோட்டை ஸ்ரீராம்
நெல்லைச் சீமையிலே வயல்பரந்த கிராமத்தில்
வேலம்மாள் வேலப்பன் என்றவிரு காதலர்கள்
பலகாலம் காதலிக்கும் அவ்விருவர் கனவினையே
நெல்லைத்தமிழ் மொழியினில் நீங்களுமே கேட்டிடுவீர்.
வேலப்பன் :-
கருக்கலு நேரத்துல கம்மாகர ஓரத்துல
கன்னத்துல கையவெச்சி கவலயோட காத்திருக்க !
கன்னிப்புள்ள ஒன்னோட கவலயத்தான் களஞ்சிடவே
கண்ணாளன் உன்னோட காதலன்நான் ஓடியாரேன்!
வேலம்மாள் :-
கட்டம்போட்ட கைலிகட்டி பட்டம்போலப் பறக்கும்மச்சான்
பொட்டப்புள்ள என்னப்பாத்து பொசுக்குனுதான் நின்னுப்புட்ட
சுண்டிப்போன எம்முகத்த சோத்துக்கையால் தூக்கிநீயும்
என்னப்பாக்க நேரமான காரணத்த சொல்லிப்புடு!
வேலப்பன் :-
வானம்மழை பொய்த்ததால வயக்காட்டில் தண்ணியில்ல
வருமான்னு இதுவரைக்கும் வானத்தயே பாத்துநின்னேன்
பாத்துநின்னே நேரமாச்சு பகல்பொழுதும் முடிஞ்சிபோச்சு
பாத்திவெட்டி பதமாக்கி இருட்டயிலே ஓடியாரேன்
வேலம்மாள் :-
பாக்கவந்த வேகத்துல மூச்சிறைச்சி விழுந்துடாமே
பக்கத்துல இப்படியே பாந்தமாத்தான் இருந்துவிடு
கக்கத்துல இடுக்கிவச்ச முண்டாசுத் துணியத்தான்
ஏக்கத்தோட காத்திருக்கும் எங்கிட்ட கொடுத்துப்புடு!
வேலப்பன் :-
வட்டமான ஒம்முகத்த வாஞ்சையோட பாக்கயிலே
வாட்டமான எம்முகமும் வானம்போலத் தெளிவாச்சு!
மாடாட்ட வேலசெஞ்சி மாஞ்சிமாஞ்சிப் பாத்தாலும்
கிட்டாத செல்வமெல்லாம் உன்னப்பாத்தா கெடச்சிடுதே!
வேலம்மாள் :-
கண்ணுக்கழகு காளயுன்ன கண்டவளும் கண்ணுவச்சா
கண்ணயுந்தான் நோண்டிருவேன் காலயுந்தான் முறிச்சிடுவேன்.
மண்ணுமேல என்னுசிரு மாய்ஞ்சிடாம இருக்கும்வரை
கண்ணகியாப் பின்வருவேன் காதலையும் சொல்லிப்புட்டேன்!
வேலப்பன் :-
காதலிச்சே காலம்போச்சி கண்ணாலத்த நெனக்கயிலே
பேதலிச்சே போகுதம்மா என்னோட பூமனசு!
கதகதயாக் காரணத்த சொல்லிச்சொல்லி நாள்கடத்தும்
பாதகத்த இன்னியோட தலயசுத்தி எறிஞ்சுப்புடு
வேலம்மாள் :-
தைபொறந்தா வழிபிறக்கும் தரிசுநிலம் பயிராகும்
பைநெறயப் பணம்சேரும் பஞ்சமெல்லாம் பறந்தோடும்
பையப்பைய நம்மகதய பக்குவமா எடுத்துச்சொல்லி
ஐயனையும் ஆத்தாளயும் ஆசிகூற வைக்கோணும்!
வேலப்பன் :-
கன்னிப்புள்ள ஒன்னோட கழுத்துலதான் முடிச்சுமூணு
எண்ணிப்போட எம்மனசும் ஏக்கத்தோட துடிக்குதம்மா!
வண்ணவண்ணச் சேலகள வண்டிநெறய வாங்கிப்போட்டு
என்கையால் கட்டிவிட ஏங்கித்தான் தவிக்குதம்மா!
வேலம்மாள் :-
சேலவாங்கி குமிச்சுவச்சா சேதாரம் அதிகம்மச்சான்
நெலபுலமா வாங்கிப்போட்டு நெலமயத்தான் ஒசத்திக்கணும்
அழகழகா ரெண்டுபுள்ள அடுத்தடுத்து பெத்துக்கிட்டு
வளமாக வாழ்ந்திடனும் பாசத்தோட வளத்திடனும்
வேலப்பன் :-
படிப்பறியா நம்மளுக்கு பொறக்கும்புள்ள ரெண்டையுமே
வயக்காட்டில் இறக்கிவிட எம்மனசுப் ஒத்துக்கலே
பயலுகள இங்கிலீசு பேசவச்சே பாக்கணுமே
கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு வெளிநாடு பறக்கணுமே!
வேலம்மாள் :-
வயசான நம்மகூட பயலுகளும் இருக்கணும்னா
கான்வென்டில் படிக்கவெக்கும் எண்ணத்தயே விட்டுப்புடு
நம்மநாட்டுப் படிப்பிருந்தா நம்மளத்தான் காப்பாத்தும்
பயல்களோட சேந்துநிதம் பாசத்தோட வாழ்ந்திடலாம்!
வேலப்பன் :-
உலகறியாப் புள்ளநீயும் நாட்டுநடப்ப தெரிஞ்சுக்க
பலகாலம் பாடுபட்டும் நானும்சேத்த பணமுமென்ன?
தெக்குத்தெரு பாண்டியோட சின்னமவன் செல்லப்பாண்டி
அமெரிக்கா போனபின்ன ரெண்டுவீடு கட்டிப்புட்டான்
வேலம்மாள் :-
வாழத்தான் பணம்வேனும் இல்லேன்னு சொல்லலியே
ரெண்டுவீடு கட்டிப்போட்ட பாண்டியோட நெலயப்பாரு!
பொண்டாட்டி இழந்தபாண்டி மூத்தமவன் கிட்டபோனான்
மூத்தமவன் தொரத்திவிட்டான் சின்னமவன் சிலுத்துக்கிட்டான்!
வேலப்பன் :-
அப்படியே இருந்தாலும் ரெண்டுவீட்டு வாடகைய
சொளசொளயா வாங்கியவன் சொகமாத்தான் இருக்கானே!
அதனால்தான் சொல்லிடுதேன் நம்மபுள்ள ரெண்டயுமே
கம்பூட்டர் படிக்கவெச்சி அமெரிக்கா அனுப்பிடனும்!
வேலம்மாள் :-
புரியாமப் பேசும்மச்சான் உலகநடப்ப தெரிஞ்சுக்க
போனகாலப் பேப்பரயே பொரட்டிநீயும் படிச்சுப்பாரு
ஏரொப்ளேன் நாலுவச்சி அமெரிக்கா ஊரத்தான்
பத்தியெரிய வச்சபின்னே பசங்களுமே பயப்படுதே!
வேலப்பன் :-
அமெரிக்கா அதுந்துபோன அந்தகத நமக்கெதுக்கு
கம்பூட்டர் படிச்சுமவன் வெளிநாடு போகோனும்
அந்தநாடு எந்தநாடா இருந்தாத்தான் நமக்கென்ன
புள்ளகள வெளிநாடு போகவச்ச பெருமபோதும்!
வேலம்மாள் :-
பாசத்தோட வளத்தபுள்ள பத்திரமா இருக்கணுமே
பாரதத்தின் மண்வளமும் மறஞ்சிடாம காக்கணுமே
வீரத்தோட எம்மவனும் சாதனைகள் செய்யணுமே
வேலுமவன் இவன்தான்னு பாரதமே பேசணுமே!
வேலப்பன் :-
ஒன்வழிக்கே நானும்வாரேன் அறியாமப் பேசிப்புட்டேன்
எல்லாரும் வெளிநாடு போயிட்டா நம்மகதி?
நெனச்சால கொலநடுங்கு சோத்துக்கு என்னசெய்ய?
நம்மளப்போல் வயல்வேல செஞ்சாதான் சோறுபுள்ள!
வேலம்மாள் :-
உலகுக்கே சோறளிக்கும் உழவனுமே இல்லேன்னா
ஊரெல்லாம் பட்டினிதான் மனிதஇனம் அவ்ளோதான்
பக்குவமா என்வழிக்கு பாதமாறி வந்துப்புட்ட
பல்லாண்டு ஒன்னோட வாழ்ந்துவிட்ட திருப்திமச்சான்! |