|
அழகியல் கொஞ்சம்
ஆன புருவம் அழகுள்ள வில்லென்று
வானளவில் பெண்ணின் வருணனையாம் & மோனமிகு
ஆண்சினந்தால் கூடத்தான் அங்கே புருவத்தில்
நாண்விரியும் என்கின்றேன் நான்.
கண்ணம்பு பாயும், காளை நிலைகுலையப்
பெண்ணம்பு பாயுமே பின்.
விரியாதத் தாமரை மொக்கென்பார் கண்ணை;
புரியாத பெண்மை(ப்) புதிர்.
ஆவலுறப் பெண்ணின் அழகு விழியதனை
மாவடுப்போல் என்பார் மதித்து.
மடலவிழும் நல்ல மலர்க்குவளை போலப்
படர்விழியும் ஈர்க்குமே பார்.
வண்டென்பார் இல்லை விழியென்பார், யோசிப்பார்
உண்டான காதல் உற.
காக்கணப்பூ நீலம்தான் கண்ணுக்கு வந்ததெனத்
தாக்குறுவார் மிக்கத் தவித்து.
(காக்கணப்பூ & நீலமலர்)
நீளும், நெளியும் கயல்போலப் பெண்விழியும்
ஆளுமென்றார் ஒப்புமை ஆய்ந்து.
மயக்குமாம் மானின் மருள்கண்; மகளிர்
இயக்கமும் இப்படித் தான்.
கவிதைப் படைப்பு: கவிமாமணி இளையவன் |