|
|
கவிமாமணி
இளையவன் கவிதைகள்
அணிலும்
எலியும் -
ரமணர் காட்டும்
நீதி!
பகவான் ரமணர் உரைகேட்கப்
பக்தர் இருந்தார் அமர்ந்தபடி
அகமும் முகமும் மலர்ந்தபடி
அருளுரை சொன்னார் கனிந்தபடி
அணில்போல் இருங்கள்; தவறில்லை!
ஆனால் எலிபோல் கூடாது!
மணிமொழி இதனை உதிர்த்தபடி
மவுனமானார் நம் ரமணர்!
காரணம் வேண்டிப் பக்தர்கள்
காத்துக் கொண்டே இருந்தார்கள்
பூரண ஞானி விடைசொன்னார்
புன்னகை ஒன்றைத் தந்தபடி!
உண்ணும் அணிலைப் பாருங்கள்;
உண்டது போதும் என உணர்ந்தால்
கொண்ட கனியை அதன்பின்னர்க்
கொறிப்பதில்லை; ஓடிவிடும்;
ஆனால் எலியோ பதுக்குவதில்
ஆசை கொள்ளும்; மறுபடியும்
தானாய் வந்து பொருள்தேடும்
தனக்கு மீறிச் சேர்த்துவிடும்
போதும் என்ற மனம் இன்றிப்
பொருளைச் சேர்க்கக் கூடாது
நீதி இதுதான், எனச்சொல்லி
நிறுத்தி அருளினார் ரமணமுனி!
-
1. பாடங்கள்
உலகின் புதிய அரும்புகளே - தினம்
ஓடிக்குதிக்கும் கரும்புகளே
நிலவின் பேரக் குழந்தைகளே - ஓ
நின்றென் படல் கேளுங்கள்!
காற்றும் ஒளியும் கடல்நீரும் - ஊர்க்
கரையும் வானும் நம்வாழ்வும்
ஆற்றல் மிகுந்த இறைவன்தான் - பேர்
அருளே என்று நம்புங்கள்!
அன்னை தந்தை வணங்குவதும் - நல்
ஆசான் நிழலில் ஒதுங்குவதும்
தன்னம்பிக்கை நிரம்புவதும் - ஒரு
தருமம் என்று எண்ணுங்கள்
ஆடல் பாடல் திண்பண்டம் - பல
ஆடை மட்டும் வேண்டியவோ?
மாடம் மட்டும் அரண்மனையோ - நம்
மனமும் வளர வேண்டாமோ?
ஆதிசங்கரர் நடக்காமல்- ஒரு
அரிய மதத்தின் வேர் ஏது?
போதி ஞானி பேசாமல் - ஒரு
புத்த மதத்தின் பேர் ஏது?
ஆன்றோர் வழிகள் இல்லாமல் - நம்
அண்டம் ஏது, நாம் ஏது?
சான்றும் சுவடும் இல்லாமல் - ஓர்
சரித்திரம் தோன்ற வழி ஏது?
தேடும் பெருமை ஒழுக்கம் எனப் - புகழ்த்
தெய்வ வள்ளுவன் கருதியதும்,
வாடும் பயிர்க்கு வாடுவதாய் - உயர்
வள்ளல் பெருமான் உருகியதும்,
வாழும் நாட்டை வணங்கியவே - நம்
வரகவி பாரதி வேண்டியதும்
ஆழப் பதிய வேண்டாவோ - நாம்
அன்பில் சிறக்க வேண்டாமோ?
ஆயிரமாயிரம் தாமரையே - பல
அர்த்தம் நிறைந்த கவிதைகளே
வாயிற் கதவைத் தட்டுகிறேன் - இன்
வாழ்க்கைப் பாடம் படியுங்கள்.
2. அருள்
பெற்ற அணில்
கடலின் மேலே ஒரு பாலம்
கட்டச் சொன்னான் ரகுராமன்!
உடனே வானர வீரர்கள்
ஓ! ஓ! என்று எழுந்தார்கள்!
வரிசையாக வந்தார்கள்!
வலிமை காட்டி நின்றார்கள்!
பெரிய பெரிய பாறைகளின்
பெயர்த்துக் கடலில் போட்டார்கள்
அண்ணல் ராமன் பணியினிலே
ஆசை கொண்டு உதவிடவே
எண்ணம் கொண்ட அணில் ஒன்று
எடுத்துப் போட்டது கல் ஒன்று!
குறுக்கே வந்தது அணில் என்று
குரங்குகள் எல்லாம் விரட்டினவே!
சிறுபயல் சிறுபயல் என எண்ணிச்
சினந்து தூக்கி எறிந்ததுவே!
உயரப் பறந்த அணிற்பிள்ளை
உத்தம ராமன் மடியினிலே
அயர்ந்து களைத்து விழுந்ததுவே!
அண்ணல் கவனம் கலைந்ததுவே!
அன்பினாலே பணி செய்தாய்
அணிலே என்று புகழ்ந்தாரே!
சின்ன அணிலின் முதுகின்மேல்
சிறிதே தடவிக் கொடுத்தாரே!
உதவி என்பதே பிறர்க்காக!
உயர்வும் தாழ்வும் எதற்காக?
அதனால் யார்க்கும் உதவிடுவோம்!
அன்பால் உலகை வென்றிடுவோம்!
3. எம்பெருமான் கருணை
ஆற்றோரம் அடுப்பெரிய
அடுப்பின் மேல் நீர் இருக்க,
ஆகட்டும் என்று பீமன் காத்திருக்கிறான்!
அன்புக் கண்ணன் அருகினிலே
நின்றிருக்கிறான்!
கோட்டை போல அடுப்புக் கட்டி
குடம் குடமாய் தண்ணீர் வைத்து
காட்டு விறகைக் கொளுத்தி பீமன் காத்திருக்கிறான்!
கண்ணனுக்குத் தண்ணீர் சுடக் காத்திருக்கிறான்!
நீண்ட நேரம் ஆனபின்னும்
நீர் இன்னும் சுடவில்லை!
ஆண்டவனே! என்று பீமன் வருத்தம் கொள்கிறான்!
ஆசைக் கண்ணன் பானை நீரைக் கொட்டச் சொல்கிறான்!
பானையினைக் கவிழ்க்கையிலே
பாய்ந்து இரண்டு தவளை வர
ஏன் தண்ணீர் சுடவில்லை? தெரிந்து கொள்கிறான்!
எம்பெருமான் கருணை என்று புரிந்து கொள்கிறான்!
4. நன்மை
உண்டு நிச்சயம்
நந்தனார் நல்லவர்;
நாளும் கடமை செய்பவர்!
எந்த நாளும் வேலையை
எடுத்து முடிக்க வல்லவர்!
சிதம்பரத்துக் கோயிலில்
சிவபெருமான் தரிசனம்!
அதற்கு போக எண்ணுவார்!
ஆனால் தள்ளிப் போடுவார்!
நந்தனாரின் பண்ணையார்
நன்கு வேலை வாங்குவார்!
தந்த வேலை முடிந்த பின்
எங்கும் போகச் சொல்லுவார்!
நாளும் வேலை சேர்வதால்
நாளைப் போவேன் என்பவர்,
மேலும் வேலை சேர்வதால்
மேலும் தள்ளிப் போடுவார்!
கொடுத்த வேலை முடிப்பதே
கொள்கை என்ற நந்தனார்
எடுத்துக் காட்டாய் விளங்கினார்
இறைவன் அருள விரும்பினார்!
அன்பன் வேலை அனைத்தையும்
அவரே செய்து முடித்தனர்!
தனது தொண்டன் மகிழவே
தரிசனமும் தந்தனர்!
கடமை ஒன்றே முக்கியம்;
கடவுள் கூட அப்புறம்!
நந்தனாரின் லட்சியம்
நன்மை உண்டு நிச்சயம்!
5. வள்ளலார்
வயலில் வாடிய பயிர் கண்டே
வருத்தம் கொண்டார் ஒரு ஞானி!
அவரே வடலூர் வள்ளல் எனும்
அதிசய ஞானி! அறிவாய் நீ!
கருங்குழி என்னும் ஊரினிலே
கருணை வள்ளல் தங்கிய நாள்!
இரவில் தினமும் விளக்கொன்று
இருக்கும், படிக்க அவர்க்கென்று!
தங்கியிருந்த வீட்டுத் தாய்
தனியே எண்ணெய் வைப்பார்கள்!
அங்கே விளக்கில் அதை வார்த்து
அடிகள் பாடம் படிப்பார்கள்!
மறந்தே ஒருநாள் தண்ணீரை
மாடியில் கொண்டு வைத்தார்கள்!
துறவியாரும் விளக்கேற்றித்
தொடர்ந்து பாடம் படித்தார்கள்!
தவறு தெரிந்த அம்மாவோ
தாமே ஓடி வந்தார்கள்!
கவனம் இன்றி முந்தைய நாள்
கலயம் வைத்தேன் என்றார்கள்!
விவரம் கேட்ட நம் வள்ளல்
விளக்கு எரிந்ததே என்றார்கள்!
கவலைப் பட்ட தாயாரோ
கண்கள் எரிய வியந்தார்கள்!
எல்லாம் தெரிந்த அடியார்க்கு
எண்ணெய் என்ன? நீரென்ன?
நல்ல மனது கொண்டோ ர்க்கு
நாடே உதவும் வேறென்ன?
6.
திருக்குறள்
நின்றே கதவைச் சாத்திடலாம்!
நீளத் தாழ்ப்பாள் போட்டிடலாம்!
அன்பைச் சாத்த முடியாதே!
அதற்குத் தாழ்ப்பாள் கிடையாதே!
கண்ணைப் போலும் கல்வியினைக்
கற்று நடக்க மறக்காதே!
எண்ணும் எழுத்தும் படித்தாலே
எந்த ஊரும் கசக்காதே!
அப்பாவுக்கு நல்ல பெயர்;
அதுவும் உன்னால் வரவேண்டும்!
தக்க அறிஞன் நீ என்றே
தாயார் மகிழ்ச்சி பெறவேண்டும்!
மேலே சொன்ன வழிஎல்லாம்
மேதை வள்ளுவர் குறளாகும்!
பாலப் பருவப் பிஞ்சுகளே!
படித்தால் நன்மை வரவாகும்!
7.சின்ன விஷயம்தான்!
சீப்பைக் காணோம்; தொலைந்து போனது
சின்ன விஷயம்தான்!
சில்லறை வாங்க மறந்து போனது
சின்ன விஷயம்தான்!
பாடப் புத்தகம் எங்கோ போனது
சின்ன விஷயம்தான்!
தேட வேண்டாம் என்றே விட்டது
சின்ன விஷயம்தான்!
சீப்பில்லாமல் வீட்டுக்குள்ளே
எத்தனை சண்டைகள்!
சில்லறைக்காக ஓடிவிழுந்து
சிறுசிறு தொல்லைகள்!
தொலைந்த புத்தகம் தேடாததனால்
குறைந்த மதிப்பெண்கள்
அலட்சியமாக இருப்பதனாலே
ஆயிரம் துன்பங்கள்!
ஒரு சிறு ஆணி விழுந்ததாலே
ஒரு போர் தோற்ற கதை,
அருமைச் சிறுவர் உங்களுக்கெல்லாம்
அவசியம் உதவிடுமே!
கவனக் குறைவால் நன்மை இல்லை
காரியம் வீணாகும்!
தவறில்லாமல் நடந்து கொள்வீர்
தம்பி தங்கையரே!
8. விழிப்பாய் இரு தம்பி
வீட்டைத் தேடி யார் வந்தாலும்
விழிப்பாய் இரு தம்பி & நீ
காட்டும் கவனம் குடும்பத்திற்கே
காவல்தான் தம்பி!
அறிமுகம் இல்லாப் புதியவர் வந்தால்
அதிகம் பேசாதே & ஒரு
குறிப்பில்லாமல் பொருள்கள் எதையும்
கொடுக்கப் பழகாதே!
வீட்டுக் கடிதம் கிழிக்க மறந்து
வெளியில் போடாதே & ஒரு
போட்டிகேனும் வீட்டு நடப்பைப்
பொதுவில் பேசாதே!
நல்லவர் எல்லாம் நாட்டில் உண்டு
நல்லது; ஏற்றுக் கொள் & சில
பொல்லாதவரும் இருப்பதனாலே
பொறுப்பைக் கற்றுக் கொள்! |