|
03/06/2007 - வைகாசி
20
மனித மனம்
என்ன சொல்கிறது?
காற்றைக்கூடப் பிடித்துவிடலாம். இந்த
மனதைப் பிடிக்க முடியவில்லையே கண்ணா'' என்று அர்ஜுனன்
புலம்புகிறான் - (பகவத் கீதை (அத்.4, சுலோகம் 34)
மனதின் ஒரு இயல்பு, ஒரே இயல்பு & தன்மை என்று கூடச் சொல்லலாம்;
அது நிலையின்மை தான். அதாவது சஞ்சலப்படுகிறது..
நம் மனதிற்கு ஏற்றவாறு தான் நம் உலகம் அமையும்.
உலகம் ஒன்று தானே? உன் உலகம், என் உலகம் என்றெல்லாம் உண்டா?
என்பதுதானே உங்கள் கேள்வி.
ஆம். உண்டு. வெளித்தோற்றத்தில் உலகம் ஒன்று தான். ஆனால் அவரவரது
மனதிற்கேற்ப அவருக்கு இவ்வுலகம் தோற்றமளிக்கும்.
ஒரே கதையைப் பலர் கேட்கச் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு
விதமாகப் புரிந்துகொள்வார்கள்.
பார்க்கும்போது காட்சி ஒன்றாக இருந்தாலும் பார்ப்பவர் அனைவர்
உள்ளங்களிலும் ஒரேவித சலனத்தை & தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
உதாரணமாக..
ஒருவர் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார்.
அவ்வழியே வந்த நான்கு பேர் அவரைப் பார்த்தார்கள்.
ஒருவர் நினைத்தார், குடிபோதையில் விழுந்துகிடக்கிறான்..
இரண்டாமவர், கடுமையாக உழைத்ததால் அயர்ந்து தூங்குகிறான்..
மூன்றாமவர், அடித்துப்போட்டது போல உறங்குகிறானே, இவன் இரவில்
கொள்ளையடித்துவிட்டு வந்து உறங்குகிறானோ? கில்லாடியாகத்
தெரிகிறான்..
நான்காமவர், இத்தனை பரபரப்பான உலகில் ஆழ்ந்த நித்திரையில்
இருக்கும் முகத்தில் அமைதி நிலவுகிறது. கவலைகளை விட்டொழித்தவன்
போலும்..
பார்த்த காட்சி ஒன்றுதான். அவரவர் மன இயல்புக்கு ஏற்ப அக்காட்சி
புலப்பட்டது.
பகவான் கண்ணன் கௌரவர்களில் மூத்தவனான துரியோதனனை அழைத்து நகரில்
உள்ள நல்லவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வருமாறு கூறினான்.
சிறிது நேரத்தில் பாண்டவர்களில் மூத்தவனான தர்மரையும் அழைத்து அதே
நகரில் உள்ள கெட்டவர்களை அடையாளம் கண்டு வருமாறு கேட்டுக்கொண்டான்.
இருவரும் நாள் முழுவதும் நகரில் சுற்றித் திரிந்தனர். பல நூறு
மனிதர்களைச் சந்தித்தனர்.
மாலையில் அரண்மனை திரும்பிய துரியோதனன் கண்ணனிடம், ""கண்ணா,
நகரில் ஒருத்தன் கூட நல்லவன் இல்லை. ஆளைப் பார்த்தவுடனே புரிந்து
விடுகிறது. சிறிது நேரம் பேசினாலோ சந்தேகம் இல்லாமல் தெரிந்து
விடுகிறது. எல்லோரும் அயோக்கியர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள்''
என்றான்.
தர்மரோ, ""மிகவும் கஷ்டமான வேலையைக் கொடுத்துவிட்டாய் கண்ணா!
எவ்வளவு சல்லடை போட்டுத் தேடியும் ஒரு கெட்டவனையும் கண்டுபிடிக்க
முடியவில்லை!'' என்றான்.
இருவரும் சுற்றிவந்தது ஒரே ஊரில். ஒரே தெருக்களில். தேடியதும் அதே
மக்கள் கூட்டத்தில் தான். ஒருவனுக்கு எவனும் நல்லவனாகத்
தோன்றவில்லை, மற்றவனுக்கோ நல்லவர்கள் தவிர கெட்டவர்களே
தென்படவில்லை.
நம் மனம் போல்தான் உலகம் அமையும்..
& ராம் கோபாலரத்னம் |