|
26/05/2007 - வைகாசி
12
மனிதன் & மனம் என்ன சொல்கிறது..?
ஒருவருக்கு தேவ அமிர்தமாக இருப்பது & மற்றவருக்கு விஷமாக
இருக்கிறது..
ஏன்?
மனம் தான் இதற்குக் காரணம். மனம் தான் விரும்புகிறது, மனம்தான்
வெறுக்கிறது. பிடிப்பதும் மனதிற்கே, பிடிக்காததும் மனதிற்கே. மனம்
மனிதனின் பதினொன்றாவது கருவி என்கிறது யோகம்.
கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் (மெய்) இவ்வைந்தும்
ஞானேந்திரியங்கள்.
கை, கால், தொண்டை, மல மூத்திர உறுப்புகள் மற்றும்
ஜனனேந்த்ரியங்கள் (பிறப்பு உறுப்பு) இவை ஐந்தும்
கர்மேந்திரியங்கள்.
ஆக மொத்தம் பத்து, மனம் பதினொன்றாவது, மற்ற பத்தும் புறக்கருவிகள்,
மனது "அந்தஹ் கரணம்' & உட் கருவி!
ஆம். மனம் மனிதனின் ஒரு கருவி மட்டும்தான். அவன் செயல்பட உதவிடும்
ஒரு கருவி.
மனம் எங்கிருக்கிறது?
மனம் மூளையின் ஒரு பகுதியா? இதயத்தில் இருக்கிறதா?
மனம் ஒரு பொருளில்லை , அது இல்லாமல் இருப்பது, இருந்தும் இல்லாதது
மனதிற்கு உருவமோ, வடிவமோ கிடையாது. அதனால் மனதைக் கண்ணால் காண
முடியாது!
மேற்கத்திய விஞ்ஞானம் மனதை மூளையுடன் இணைத்துப் பேசுகிறது. பல்வகை
மின்னணுக் கருவிகளை வைத்து மனதையும் அதில் எழும் உணர்வுகளையும்
அறிந்து அளவிட அங்கு முயற்சிகள் நடக்கின்றன. மூளையில் ஏற்படும்
ரசாயன ஹார்மோன் மாற்றங்களே மன உணர்வுகளாக வெளிப்படுகின்றன
என்கிறது மேற்கத்திய விஞ்ஞானம்.
சிலர் மனதை இதயத்துடன் இணைக்கின்றனர். விருப்பு, வெறுப்பு, அன்பு,
இரக்கம், காமம், கோபம், ஆசை, பொறாமை போன்ற மன உணர்வுகள் அனைத்தும்
இதயத் துடிப்பு பாதித்தாலும் அதை நம்மால் உணர முடிவதாலும் மனம்
இதயத்தில் இருப்பதாகக் கருத இடம் உண்டு.
ஆன்மீகத்தில், மனம் மணீபுர சக்கரத்தில் இருப்பதாக ஒரு கருத்து
உண்டு.
மனம் உடலில்தான் இருக்கிறதா என்பது அடிப்படையான கேள்வி.
"நான் இங்கு இருக்கிறேன், என் மனம் எங்கோ சென்று விட்டது' என்ற
அனுபவம் நம் அனைவருக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கும்.
வகுப்பறையில் இருக்கும் மாணவனின் மனம் விளையாட்டு மைதானத்திற்குப்
பறந்து விடுவதும், ஆன்மீக உரை கேட்டுக் கொண்டிருக்கும் பக்தரின்
மனம் வீட்டிற்குப் பறந்து விடுவதும் சகஜம்.
மனம் வேகமாக பயணிக்கும். மனதின் வேகத்தை மனோவேகம் என்று
சொல்வார்கள். ஒளியைவிட வேகமாகப் பயணம் செய்யும் இந்த மனம்,
நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்று விடும்.
மனதின் இயல்பு என்ன?
மனதின் ஓர் இயல்பு. ஒரே இயல்பு என்றுகூடச் சொல்லலாம். அதுதான்
சஞ்சலத்தன்மை (அ) நிலையின்மை.
சஞ்சலம் ஹி மனஹ கிருஷ்ண பிரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்
காற்றைக்கூடப் பிடித்துவிடலாம். இந்த மனதைப் பிடிக்க
முடியவில்லையே கண்ணா'' பகவத் கீதை (அத்.4, சுலோகம் 34) என்று
அர்ஜுனன் புலம்புகிறான்.
""இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத்தங்கமே'' என்றும்..
""மனம் ஒரு குரங்கு''
என்றும் பாடினார் கவிஞர் கண்ணதாசன்.
மிக வேகமாக ஓர் இடத்திலிருந்து மறு இடத்திற்குத் தாவும் மனம்
அந்த இடத்தில் நிலைக்கிறதா? என்று கேட்டால் ""இல்லை''.
இக்கணம் ஓரிடத்தில் இருக்கும், அடுத்த கணம் வேறு இடத்தில்..
இப்பொழுது ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்கிறது என்றாலும் அடுத்த
நொடி வேறு விஷயத்திற்குத் தாவி விடும்.
மனதின் பாய்ச்சல்களில் ஒரு திட்டமோ, கோர்வையோ இருக்காது,
தாறுமாறாகப் பாய்ந்து பயணிக்கும்..
எதைத் தேடி இவ்வாறு அலைகிறது? இந்த அலைச்சலில் ஏதேனும் நோக்கம்
உண்டா? தேடல் இருக்கிறதா? இல்லை.. ஆமாம்.. பதிலை நீங்களே
தேடுங்கள்!
-
ராம் கோபாலரத்னம் |