|
|
ஊருக்கு
உழைத்திடல் யோகம்!
அதிகாலை ஆறு மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலடி வைத்தபோது
என் மனதுக்குள்ளே ஒரு குறுகுறுப்பு. அதிலும் திருப்பதி ஸப்தகிரி விரைவு
வண்டியில் ஏறி அமர்ந்தபிறகு, என் மனம் எங்கெல்லாமோ சிறகடித்துப் பறந்தது.
வழக்கமாக தரிசிக்கச் செல்வோர்தான் பெரும்பாலும் இருப்பர்; ஆனால் நானோ
நாராயணனின் அந்த ஜீவாத்மாக்களைக் காணும் பொருட்டு பயணப்பட்டிருந்தேன்.
திருப்பதியில்
இறங்கி திருச்சானூர் சென்றேன். அங்கு நவஜீவன் பார்வையற்றோர்க்கான
மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் கே. ஸ்ரீதர் ஆச்சார்யாவை சந்திக்க எண்ணம்.
மையத்தின் வரவேற்பறையில் என் வருகையைத் தெரிவித்து அமர்ந்தேன்.
வெய்யிலுக்கு இதமாக "ஜில்' என மோர் தந்து உபசரித்தனர். பஞ்சகச்ச வெள்ளை
வேஷ்டி சட்டை சகிதமாக சிறிது நேரத்தில் ஸ்ரீதர் ஆச்சார்யா முகமலர
வரவேற்றார். "இந்த மையத்திற்கான உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?'
என்ற கேள்விக்கணையோடு அவருடன் உரையாடினேன்.
கே.எஸ். ஆச்சார்யா என்று அழைக்கப்படும்
ஸ்ரீதர் ஆசார்யாவின் பூர்வீகம் தமிழகம்தான். காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக்
கொண்ட இவர் குடும்பம் கடந்த மூன்று தலைமுறையாக திருப்பதியில்தான் வாசம்.
எனவே வீட்டில் எல்லோருமே நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள். பெரும்பாலான
தொடர்புகள் தமிழகத்தில்தான் என்பதால் அந்த மையத்தில் பலரும் தமிழில்
நன்றாகப் பேசுகிறார்கள். இந்த மையத்திற்கு உதவிகளைச் செய்வதும், நிதியுதவி
அளிப்பதும் பெரும்பாலும் தமிழர்கள்தான் என்று பெருமையாகச் சொல்கிறார்
ஆசார்யா.
கே.எஸ். ஆச்சார்யா, இராணுவத்தில் பணியாற்றியவர். காந்தியடிகளின்
கொள்கைகளில் வெகுவாகக் கவரப்பட்டு, மக்கள் தொண்டை மனத்தில் தாங்கிய
தேசியவாதி! ஒருமுறை காஞ்சி பரமாச்சார்யரை இவர் சந்தித்துப் பேசியபோது,
""நீ நாட்டுக்காக சேவை செய்துவிட்டாய்; உன் பார்வையை சமூகத்தின் பக்கமும்
திருப்பு. சமூக சேவைக்கு நீ வரவேண்டும்'' என்று சொன்னாராம். காஞ்சி
பரமாச்சார்யரின் இந்த வார்த்தைகள் கே.எஸ். ஆசார்யாரை வெகுவாகப் பாதிக்க,
அவர் மனத்துள்ளே ஓர் போராட்டம். உடனே முடிவெடுத்தார். இராணுவத்திலிருந்து
விருப்ப ஓய்வு பெற்று, 1979 இல் திருச்சானூரில் "நவஜீவன்' தொடங்கினார்.
துவக்கத்தில் ஆதரவற்ற இரண்டு வயது முதிர்ந்த பாட்டிகள் இங்கே அடைக்கலம்
புக, பார்வையற்ற அவர்களுக்கு மருத்துவத்துக்காக தனி அமைப்பையும்
ஏற்படுத்தினார். தற்போது ஆதரவற்ற வயதானவர்களைப் பராமரிக்கும் விடுதியும்,
பார்வையற்றோர் நிவாரண மையமும், தங்கும் விடுதியோடுகூடிய ஒரு பார்வை
யற்றோர் பள்ளியும் பிரம்மாண்டமாக உருப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டோடு இந்த
அமைப்பு வெள்ளி விழாவும் கொண்டாடியது.
கே.எஸ். ஆசார்யாவுக்கு ஒருமகன்; ஒரு மகள். மகன் பெங்களூரில் கணினி
மென்பொருள் வல்லுநராகப் பணியாற்று கிறார். மகள் கணவருடன் ஆஸ்திரேலியாவில்
வசிக்கிறார். இவரோடு இவரது தாயாரும் இந்த விடுதியின் ஓர் பகுதியிலேயே
வசித்து வருகிறார். ஆசார்யாவுக்கு ஓய்வூதியம் வருகிறது. அதையும் சமூகப்
பணிகளுக்கே அர்ப்பணித்து விடுகிறார்.

சமூகசேவை என்று பலரும் வெளியில் பேசிக் கொண்டிருக்க இவர் கருத்தோ சற்றே
வித்தியாசப்படுகிறது. "சேவை செய்வதற்கு இன்னும் அதிகஅளவில் நமது
சமூகத்தில் உள்ளவர்கள் முன்வரவேண்டும்; சாதாரணமாக தனிநபராக இருந்து ஏதாவது
செய்யவேண்டும் என்று நினைத்து, தனிமைப்பட்டு ஏதும் செய்ய முடியாமல்
இருப்பவர்கள் பலருண்டு! அப்படிப்பட்ட வர்கள் தங்கள் உதவிகளை ஆதரவை, இதே
எண்ணம் கொண்ட இன்னும் சிலரோடு சேர்ந்து செய்யும்போது அது உண்மையிலேயே
சமூகத்திற்குப் பலனளிக்கும் விதத்தில் அமைந்துவிடுகிறது. பெரும்பாலும் மத
மற்றும் சமய அமைப்புகளுக்கு சேவை செய்ய, அந்த அமைப்புகளின்பால் தீவிர
விசுவாசம் கொண்டவர்கள் முன்வருவார்கள். ஆனால் இதுபோன்ற மத, சமயம் அல்லாத
சமூக அமைப்புகளுக்கு சேவை செய்ய பெரும்பாலும் முன்வருவதில்லை. அப்படி
அவர்கள் வந்தார்களானால் இன்னும் எவ்வளவோ சாதிக்கமுடியும். எவ்வளவோ
பணிகளைச் செய்யமுடியும்.

ஒரிஸா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் இன்றும் எத்தனையோ கிராமங்களில்
மின்வசதியில்லை; நல்ல சாலைகள் இல்லை! பக்கத்து நகரங்களிலிருந்து
முற்றிலும் வித்தியாசப்பட்டு, அன்னியப்பட்டு இன்னும் எத்தனையோ கிராமங்கள்
அங்குள்ளன. அரிசிச் சோறு எப்போதாவதுதான் அவர்கள் கண்களில் பட்டு வயிற்றில்
சேரும்! உடல்நலக் குறைவு என்றால் மிகவும் சிரமம்தான்! தலைவலி வந்தால் கூட
மருந்து கிடைக்காது அந்தக் கிராமங்களில்! அதுபோன்ற கிராமங்களில் எல்லாம்
அண்மையில் சென்று மருத்துவ முகாம்களை, குறிப்பாக கண்நோய் தொடர்பான
மருத்துவ முகாம்களை நடத்தி வந்தோம். அவ்வளவு தொலைவு சென்று பணியாற்ற
இளைஞர்கள் அதிகமாக முன்வரவில்லை; ஆயினும் எங்களால் முடிந்த அளவு
செய்துவந்தோம். அதுபோன்ற கிராமங்களில் கிறிஸ்துவ மிஷனரிகள் தங்கள் பணிகளை
வெகுவாகச் செய்கிறார்கள்; கூடவே மதமாற்ற வேலைகளும் உண்டு! அரசு
இயந்திரங்கள் சென்றடையாத அந்தக் கிராமங்களில் மிஷனரிகள் தங்கள் சேவைகளைச்
செய்கிறார்கள். எங்களுக்கு மட்டும் ஒரு இளைஞர் படை கிடைத்தால் போதும்;
அந்தக் கிராமங்களில் எங்கள் சேவைப் பணிகள் நிச்சயமாகச் சென்றடையும்;
அதுவும் பெரிய அளவில்! என்கிறார் ஸ்ரீதர் ஆச்சார்யா.
"நவஜீவன்' அமைப்புக்கும் சரி; அவர்கள் நடத்தும் "கண்நோய்' நிவாரண
முகாம்களுக்கும் சரி; திரிதண்டி ஸ்ரீமந் நாராயண ஜீயர் அடிக்கடி விஜயம்
செய்து, மக்களுக்கு ஆறுதல் மொழிகளை நல்கி, தமது ஆரதவைக் காட்டி
வருகிறாராம். மக்களுடன் நன்கு உத்வேகமாகப் பேசி அவர்களுக்கு ஆறுதலும்
தேறுதலும் வழங்குவது அவர் இயல்பு. அவர் ஆசார்யாவிடம் சொல்வாராம்... ""நாம்
ரெண்டு பேருமே ஸ்ரீமத் ராமானுஜரான எம்பெருமானின் மார்கத்திலேதான்
செல்கிறோம். முதல் பாதி வழியான சமூகப் பணிக்கு நீங்கள் வெள்ளை வஸ்திரம்
தரித்திருக்கிறீர்கள். இரண்டாம் பாதி வழியான ஆன்மீகப் பணிக்கு நான் காவி
வஸ்திரம் தரித்திருக்கிறேன்'' என்பாராம்.

திருப்பதி பெருமாள் சேவிக்க வரும் எளியோர் முதலிலேயே தகவல் தந்தால்
அவர்கள் இங்கே தங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம் என்கிறார்
ஆசார்யா.
பேசிக் கொண்டே "நவஜீவன்' வளாகத்தை எனக்குச் சுற்றிக் காண்பித்தார் ஆசார்யா.
அப்போது அவருள் ஒளிந்திருந்த பன்முக மனிதரை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.
"நவஜீவன்' மருத்துவமனையில் பார்வையற்ற பலர் இலவச சிகிச்சைக்காக
வந்திருந்தனர். அந்தப் பெரிய அறையில் 4 மின்விசிறிகள். அதில் ஒன்று
மட்டும் சுற்றாமல் இருந்தது. கீழே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் வியர்வையில்
நனைந்து சற்றே சிரமப்பட்டார். இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஆசார்யா
பணியாளர் ஒருவரிடம் இதைச் சுட்டிக்காட்ட, உடனே ஓடிச் சென்ற அவர் அதைச்
சுழலவிட்டார். பிறகு நோயாளிகளிடம் தெலுங்கில் ஏதோ பேசினார்.
எனக்கு புரியாவிட்டாலும் அவர் பேசிய
உடனே கையெடுத்துக் கும்பிட்ட அவர்களின் செய்கையிலிருந்து இவர் ஆறுதல்
வார்த்தைகள் பேசினார் என்று நான் புரிந்து கொண்டேன். சமூக அக்கறையுள்ள
ஒருகுடிமகனை ஆசார்யாவிடம் கண்டேன்.வெளியே பள்ளியில் ஒரு சிறு பெண்ணைக்
காட்டி, "இவள் இப்போ இண்டர்மீடியட் படித்து வருகிறாள். எட்டு
வருடங்களுக்கு முன் பத்மாவதித் தாயார் கோயிலில் இவளை விட்டுவிட்டு இவளது
பெற்றோர் சென்றுவிட்டனர். அப்போது கொஞ்சம் மனவளர்ச்சி குன்றிய நிலையில்
இருந்தாள். போலீஸார் அவளை இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டனர். அவள் இப்போது
நன்றாகப் புரிந்து கொள்கிறாள். நன்றாகப் படிக்கிறாள். ஆச்சு! இன்னும் சில
வருடங்களில் யாராவது வந்து கல்யாணம் பண்ணிக்கொள்ளணும் என்று கேட்டால்,
அவளுக்குக் கல்யாணம் செய்து அனுப்பி வைக்கணும்!'' என்று அவர் பெருமூச்சோடு
சொல்லி முடித்தபோது ஒரு தந்தையின் கவலையை அவருள் கண்டேன்.

மறுநாள் மாலை முதியோர் இல்லத்தில் உள்ள அந்தப் பெரியவர்களோடு காசிக்குச்
செல்வதாகக் கூறினார் ஆசார்யா. ""எத்துணையோ பெரியவர்களை, வயதானவர்களை
விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அதன் பிறகு யாரும் வந்து
பார்ப்பதேயில்லை. அவர்களுக்கு எல்லாமே இங்குதான்! இவர்கள் எல்லோரும்
பெருமாளிடம் சென்று சேர்கிறவரையில் இங்குதான் வாசம்'' - கடமையை மறந்து
தங்கள் பெற்றோரை நிர்கதியாக விட்டுவிட்ட மகன்களுக்காக இங்கே ஓர் மகன் தன்
கடமையைச் செய்துவருவது என் கண்ணில் பட்டது.

முதியோர் இல்லத்தில் உள்ள பெரியவர்களுடனும், ஆதரவற்றோர் பள்ளியில் பயிலும்
அந்தச் சிறுவர்களுடனும் அமர்ந்து நானும் சாப்பிட்டேன். முன்னதாக ஸ்லோகம்
ஒன்றைச் சொல்லிவிட்டு சாப்பிடத் தொடங்கினர். பார்வையற்ற சிறுவனான அந்த
நாராயணன் பக்கத்தில் நான் அமர்ந்திருப்பதை உறுதிசெய்து கொள்ள, தன் கையை
நீட்டி என்னைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். எளிமையான உணவு; ஆனால்
சுவையாயிருந்தது.
திருச்சானூரிலேயே ஓர் இடத்தில் "சரணாகதி' என்ற பெயரில் "வ்ருத்த ஆஸ்ரம்'
ஒன்று எழுந்து வருகிறது. மூத்த குடிமக்களுக்கான இந்த விடுதியில்,
திவ்யதேசத்தில் சிலகாலம் தங்கியிருந்து ""பெருமாள் சேவை'' விரும்புபவர்கள்
தங்கிக் கொள்ளலாமாம்! அவர்களிடமிருந்து நியாயமான அளவில் குறிப்பிட்ட ஒரு
தொகை பெற்றுக் கொண்டு இந்த விடுதியை சிறப்புற நடத்தவேண்டும் என்று
கண்களில் ஆர்வம் பொங்கக் கூறுகிறார்.

இந்த விடுதி இப்போது கட்டுமான நிலையில்
உள்ளது. நவஜீவனில் மூன்று "ஆலயங்கள்' - வைத்யாலயம், வித்யாலயம்,
வ்ருத்தாலயம். வித்யாலயத்தில் பார்வையற்றோர்க்கான இலசவ தங்கும்விடுதியுடன்
கூடிய பள்ளி. சுமார் நூறு பேர் உள்ளனர். வைத்யாலயத்தில் இலசவ கண்
மருத்துவமனை, நடமாடும் பஸ் ஒன்றும் உள்ளது. அது சுற்றுப்புறக்
கிராமங்களில் முகாம்களை நடத்துவதற்கு உதவியாக உள்ளது. வ்ருத்தாலயத்தில் -
இலவச முதியோர் இல்லம். சுமார் இருபத்தைந்து முதியோர் இங்கு உள்ளனர். இங்கு
ஐந்து வகை தானம் நடக்கிறதாம். அன்னதானம் தினமும்! நேத்ரதானம் என்ற
கண்தானம், வித்யாதானம், வஸ்த்ரதானம், கன்யாதானம்! இங்குள்ள பெண்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமண வயதை எட்டியதும், திருமணம்
செய்துகொள்ள விருப்பமுடன் அணுகும் உரிய நபர்களுக்கு சிறந்தமுறையில்
திருமணமும் செய்து அனுப்பி வைக்கிறார் ஆசார்யா.
இதுவரை பதினைந்தாயிரத்திற்கும் அதிகமாக கண் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
187 முகாம்கள் நடந்துள்ளன. 12,200 பள்ளிக் குழந்தைகளுக்கு சிகிச்சைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றிலுமுள்ள கிராமங்களின் ஏழைக் குழந்தைகளுக்கு
கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. 2,750 பேர் இதுவரை
பயனடைந்துள்ளனர். 925 மாணவர்கள் மாதந்தோறும் உதவித்தொகை பெற்ற
வெளிநபர்களாம்! இதுவரை 16,000 பார்வையற்ற முதியோர்க்கு இலவச துணிமணிகள்
வழங்கப்பட்டுள்ளதாம்! 120 கன்னியருக்குத் திருமணம் செய்விக்கப் பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை எல்லாம் கேட்ட
எனக்குப் பிரமிப்புதான் உண்டானது. திருப்பதிக்கு வந்து, நல்ல மனிதர்
ஒருவரையும், நாராயணனின் ஜீவர்களா கவுமுள்ள வயதான அந்தப் பெரியவர்களையும்
சந்தித்து ஆசிபெற்றுத் திரும்பினேன் ஏழுமலையானை இங்கேயே தரிசித்துவிட்ட
திருப்தியில்!
For More Details and contributions:
www.navajeevan.org
செங்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீராம். |