|
வேதத்தைப் போற்றும் தொல்காப்பியம்:
பண்டைய தமிழ் இலக்கியங்களும், அவற்றை அடுத்து எழுந்த தமிழ் நூல்களும்
வேதங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின்றன என்ற பெரும் உண்மையை
நிலைநிறுத்த மிக ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. சங்க கால இலக்கியம்,
அதற்கு முந்தைய தொல்காப்பியம், சங்கம் மருவிய கால இலக்கியம், பக்திக் கால
இலக்கியம் ஆகியவற்றை ஆய்வுக்காக எடுத்துக் கொள்வோம்.
முதலாவதாகத் தொல்காப்பியம். ""இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களில் மிகப்
பழைமையான நூல் தொல்காப்பியம் ஆகும்'' என்று பேராசிரியர் டாக்டர் சி.
பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டிருக்கிறார்! தொல்காப்பியம் தமிழில் இன்று
கிடைக்கின்ற நூல்களுள் முதல் நூல் என்பதை எல்லா அறிஞர்களும் ஒப்புக்
கொள்கிறார்கள். இது, எழுத்து, சொல், பொருள் என்று மூன்று இலக்கணங்களையும்
கூறுகின்ற நூல். இது தமிழர்களின் வாழ்வும், நாகரிகமும் பற்றிய நூல்.
""தொல்காப்பியத்தைத் தமிழரின் உயிர் நூல் எனக் கூறுவார் மூதறிஞர் வ.சுப.
மாணிக்கனார்'' என்று டாக்டர் ச.வே. சுப்பிரமணியன் குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தகைய பெரும் சிறப்பு வாய்ந்த தொல்காப்பியததின் சிறப்புப் பாயிரம் முழு
வடிவில் கீழே தரப்படுகிறது.
""வடவேங்கடம் தென்குமரி ஆஇடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆ இருமுதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்
நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான் மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத்தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே.
சிறப்புப் பாயிரம்
""வடக்கே வேங்கடமலையும், தெற்கே குமரிமலை, பின்பு ஆறு, பின்பு கடலாக
அமைந்த எல்லைக்குள் தமிழ்மொழி வழங்கிய, தமிழ் உலகத்திலுள்ள மக்கள்
வழக்கையும், செய்யுள் வழக்கையும், நன்கு உணர்ந்து எழுத்து, சொல், பொருள்
என்ற மூன்று பொருள்களையும் தெளிவாகத் தெரிந்து, செந்தமிழ் இயற்கையாக
வழங்கும் பகுதியில், இதற்கு முன்பு வந்த நூல்களை எல்லாம் கற்று, முறையாக
எண்ணித் தம் அறிவால் தொகுத்தோன்; என்றும் நிலைபெறுகின்ற நூலாக அமைத்து,
நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில், அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினை
யுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில், புலவர்
கூடிய பேரவையில், மயக்கமின்றித் தெளிவாகத் தான் உணர்ந்து, பிறர்க்கு
எழுத்து முறையைக் காட்டிக் கடல் சூழ்ந்த உலகத்து ஐந்திரம் என்னும் வடமொழி
இலக்கண நூல் செய்திகளையும் கற்று, தொல்காப்பியன் எனத் தன் பெயரை அமைத்துக்
கொண்டு, இந்நூலால் பல சிறப்புக்களைப் பெற்ற தூயோன்'' - இது இந்தச்
சிறப்புப் பாயிரத்திற்குப் பொருள்.''
ஒரு நூலுக்கு முன்னுரை போல அமைவது பாயிரம். இங்கே இது சிறப்பாகக்
கூறப்படுவதால் சிறப்புப் பாயிரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
""இதற்கு முன்பு வந்த நூல்களை எல்லாம் கற்று'' என்று சிறப்புப்
பாயிரத்தில் கூறப்படுவதால், தொல்காப்பியத்திற்கு முன்பாகப் பல நூல்கள்
எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அவற்றில் தமிழ் நூல்களும்
இருந்திருக்கக் கூடும். ஆனால் அவை நமக்குக் கிடைக்கவில்லை.
அதங்கோட்டு ஆசான் என்ற பேரறிஞர் தலைமையில் கூடிய புலவர் பேரவையில்,
தொல்காப்பியத்தைத் தொல்காப்பியன் படைத்தான் என்று சிறப்புப் பாயிரம்
தெரிவிக்கிறது. அதங்கோட்டு ஆசான் தர்மத்தை உணர்ந்தவன் என்றும்,
பிறருக்குத் தர்மத்தை உணர்த்தும் திறமை வாய்ந்தவன் என்றும், ரிக், யஜுர்,
சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் தெரிந்தவன் என்றும்
சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
அதாவது, வேதங்களை அறிந்த ஒரு பெரும் புலவர் தலைமையில் தொல்காப்பியம்
அரங்கேறி இருக்கிறது என்ற செய்தியைச் சிறப்புப் பாயிரம் மிகவும் தெளிவாகவே
தெரிவிக்கிறது.
எழுத்துக்களின் பிறப்புக்குப்
புறனடை
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து ஏழு வளி இசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே;
அஃது, இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுலின்றிசினே.
இந்த வரிகள், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் பகுதியில் உள்ளன.
இதற்குப் பதப்பொருள் வருமாறு:
எல்லா எழுத்தும் - (உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துகளும் (பிறக்கும்
முறையினை).
வெளிப்படக்கிளந்து - (முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கி இருப்பதனால்,
சொல்லிய பள்ளி - மேற்கூறிய (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நாக்கு,
மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்களிலும்,
எழுதரு வளியில் - உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால்,
பிறப்பொடு - பிறக்கின்றன (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின்
பிறப்புடன்.
விடுவழி - எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து.
உறழ்ச்சி வாரத்து - (மேற்கூறிய எட்டு உறுப்புக்களும் உதானன் என்னும்
காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையினால்,
அகத்தெழு வளியிசை - மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையினை,
அரில்தப நாடி - குற்றமற ஆராய்ந்து,
அளவிற்கோடல் - எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் (உதாத்தம்,
அனுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம்) என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை,
அந்தணர் மறைத்தே - அந்தணர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை
உடையதேயாகும்.
அஃது இவண் நுவலாது - (அவ்வேதங்களில் கூறிய பரை, பைசந்தி, மத்திமை என்னும்
நிலையில் உள்ள ஓசைகளும், எழுத்துகளும் யோகிகளின் உணர்வுக்கே
புலப்படுமாதலின்)அவ்வியல்பினை இங்குக் கூறாமல்,
எழுந்து புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை - நெஞ்சத் தானத்தில் இருந்து
எழுந்து, வெளியே நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை
உணர்த்துகின்ற வைகரி ஓசையினது (எழுத்தினது),
அளவு நுவன்றிசினே - தன்னை அல்லது மாத்திரையினை மட்டுமே (இவ்விலக்கண
நூலுக்கு வேண்டிய அளவு) கூறுகின்றேன்.
கருத்துரை
இந்த வாசகங்களுக்கான கருத்துரையைப் பேராசிரியர் தமிழ்ப் பெரும் புலவர்
ந.ரா. முருகவேள் அவர்கள் தந்துள்ளார். அது வருமாறு:
""இந்நூற்பாவின் அமைப்பினால் மூலாதாரத்தினின்றும், உந்திக்
கமலத்தினின்றும் ஓசை எழுகிறது என்றும், அவ்வோசையை எழுப்பும் காற்று உதானன்
என்று பெயர் கூறும் என்பதும், அங்ஙனம் தோன்றும் ஓசையானது பரை, பைசந்தி,
மத்திமை,வைகரி என்று நால்வகைப்படும் என்பதும், முதல் மூன்றும் யோகிகளின்
உணர்வுக்கே புலனாகும் என்பதும், வைகரி என்பது ஒன்று மட்டுமே நம்
செவிகளுக்குப் புலனாகின்ற எழுத்தொலியாக வெளிப்படும் என்பதும், அங்ஙனம்
வெளிப்படுங்கால் அவ்வோசையானது உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம்
என்னும் (எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்னும்) நிலைகளில்
அமையும் என்பதும், இவ்விவரங்கள் எல்லாம் வேதங்களில் விரிவாகக்
கூறப்பட்டுள்ளன என்பதும், அவற்றையெல்லாம் இங்கு எழுத்ததிகாரத்தில் கூற
முற்படாமல், தாம் தொடங்குகின்ற எழுத்ததிகாரத்திற்கு இன்றியமையாமல்
வேண்டப்படுகின்ற சில குறிப்புக்களை மட்டுமே தொல்காப்பியர் கூறியுள்ளார்
என்பதும் அறியக் கிடக்கின்றன. இதனால் வேதங்களின் தொன்மையும், அவற்றுள்
விளக்கப்பட்ட ஓசைகளின் நுட்பங்களும், பண்டைக் காலத்திலேயே தமிழகத்துச்
சான்றோர்களால் அறியப் பெற்றிருந்தன, அறிந்து தழுவிக் கொள்ளப்பெற்றன என்று
தெரிகின்றது.''
இந்த வரிகளுக்கு மேலே தந்துள்ள பதப் பொருளும் பேராசிரியர் முருகவேள்
அவர்களே எழுதியது ஆகும்.
ஓதலும், ஓதுவித்தலும்
தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் பகுதியில் கீழ்க்காணும் வரிகள்
உள்ளன. புறத்திணையியல், நாட்டு வாழ்க்கை பற்றிப் பேசும் பகுதி.
அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறுவில் செய்தி மூவகைக் காலமும்,
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்,
பாலறி மரபின் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையின்
தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.
இந்த வரிகளில் பிராமணர்கள் வேதங்களை ஓதுபவர்கள் என்றும், பிறருக்கு
ஓதுவிப்பவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் பல
இடங்களில் ""அறு தொழில் அந்தணர்'' என்ற சொற்றொடர் உள்ளது. இது
அந்தணர்களின் ஆறு வகையான தொழில்களைச் சுட்டுவது.
ஓதல் - ரிக் முதலிய நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் கற்றல்.
ஓதுவித்தல் - மாணவன் உணர்வு வகையை அறிந்து அவன் கொள்வரக் கொடுக்கும் ஈவோன்
தன்மையும், ஈதல் இயற்கையும் ஆகும்.
வேட்டல் - ஐந்து தீயேனும், மூன்று தீயேனும், உலகியல் தீயேனும் ஒன்று பற்றி,
மங்கல மரபால் கொடைச் சிறப்புத் தோன்ற மந்திர விதியால் கொடுக்கும் செய்தி.
வேட்பித்தல்-வேள்வி ஆசானுக்கு உரிய இலக்கணம் யாவும் உடையவனாய்
மாணாக்கனுக்கு அவன் செய்த வேள்விகளால் பெரும் பயனை அடையும் படி செய்தல்.
ஈதல்- வேள்வி ஆசானும், அவனுக்குத் துணைவரும் அங்கு வந்தவர்க்கும் இன்பம்
அடையும் படி கொடுத்தல்.
ஏற்றல்-கொள்ளத் தகும் பொருள்களை அறிந்து ஏற்றுக் கொள்ளுதல்.
எனவே, அறுவகைப்பட்ட என்று தொடங்கும் இந்த வரியில் வேதம் ஓதுகின்ற, யாகம்
செய்கின்ற, யாகம் செய்விக்கின்ற பணிகள் அனைத்தும் கூறப்படுவதைக்
காண்கின்றோம்.
வேதங்களை ஏற்றுப்
போற்றும் தமிழ் இலக்கியங்கள் - நூலிலிருந்து
|