ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 

மேலாண்மைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள


பகிர்ந்தளிப்பது, "வழிநடத்தும் ஆற்றல்'களில் ஒன்று. ஆனால் அது மிகச்சிக்கலானது. நீங்கள் கூடுதல் பொறுப்புக்களை ஏற்கவும், எப்பொழுதுமே மாறிக் கொண்டிருக்கும் இலக்கை அடையவும் முயற்சி செய்யும் பொழுது, துடிப்பான சந்தை நிலவரம், கால அவகாச நெருக்கடி, விலைவாசியின் நிலையற்ற தன்மை, உற்பத்தியில் தடங்கல் இவை சவாலாக அமையும். இவற்றை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டிய கட்டாயம் அப்பொழுது ஏற்படும். இதன் காரணமாக, நீண்ட பணிநேரம். நிலுவையில் பல பணிகள், களைப்பு, குடும்பத்துடனோ நண்பர்களுடனோ உறவாடவும், விரும்பும் காரியங்களைச் செய்யவும் நேரமின்மை, இவை தோன்றும் இப்பொழுது நீங்கள், உங்கள் பணிகளில் எதை, யாருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள்.


பகிர்ந்தளிப்பதா? வேண்டாமா?


"நான் செய்வது போன்று சிறப்பாக யாரும் செய்ய முடியாது' "மிகக் கடினமான பணி, மிக அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும் எனவே எல்லோராலும் சமாளிக்க முடியுமா என்று பயப்படுகிறேன். அல்லது ""எங்கே காரியம் என் கையை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்'' என்பன பணியைப் பகிர்ந்தளிக்காமல் இருப்பதற்கு நம்மில் ஒவ்வொருவரும் கூறிக் கொள்ளும் "நல்ல' காரணங்கள். பகிர்ந்தளிக்க வேண்டாம் என்று எடுக்கும் முடிவு அநேகமாக உணர்ச்சி பூர்வமான முடிவாகவே அமைகிறது. தர்க்க ரீதியில் எடுக்கப்படுவதில்லை. மேலும் தனிப்பட்ட ஒருவரால் எல்லாத் துறைகளையும் கவனிப்பது என்பது இயலாத காரியம். எனவே பகிர்ந்தளிப்பது அவசியம்.


அனைவருக்கும் வெற்றி


நல்ல முறையில் பகிர்ந்தளிப்பது, தனிப்பட்டவருக்கும் நல்லது. நிறுவனத்திற்கும் நல்லது. முன்னிலைப்படுத்த வேண்டிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தொழில்நுட்பம் தேவைப்படும் பணிகளையும் மற்றவர் எளிதாகச் செய்யக் கூடிய பணிகளையும் பகிர்ந்தளிக்க வேண்டும். பகிர்ந்தளிக்கப்பட்ட குழுவினர் தங்கள் தொழில்நுட்பத்தையும் ஆதாரங்களையும் செவ்வனே பயன்படுத்தும் பொழுது, அவர்களிடையே இருந்து, தலைவர்கள் & வழிநடத்துபவர்கள் & தோன்றுவார்கள். மேலும் ஒரு குழுவினர் புதுச் செயல்பாடுகளில் பங்கேற்கும் பொழுது, குழு உறுப்பினர்களுக்கு அந்தப் பணியிலும் நிறுவனத்தின் மீதும் ஈடுபாடு அதிகரிக்கிறது.


குழுக்களை உருவாக்குவது


நிர்வாகி, தனது பணிகளில் ஒன்றைப் பகிர்ந்தளிப்பதற்கு, அந்தப் பணி, ஒரு குழுவினரால் செய்யப்பட வேண்டிய, வேலைப்பளு அதிகமான பணியாக இருப்பது மற்றொரு காரணம். குழுவினரின் திறமை நிலைக்கு சற்று கூடுதலான, சவாலான பணிகளை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பொழுது, அவர்களின் அறிவும், அனுபவமும் வளர்கின்றன. மேலும் நிர்வாகிக்கு மிக முக்கியமான பணிகளைக் கவனிக்க அவகாசமும் கிடைக்கிறது.


மேம்படுத்த வேண்டிய ஆற்றல்


ஒட்டு மொத்த வெற்றிக்கு பகிர்ந்தளித்தல் மிக முக்கியமானது. மேலும் மேலும் பகிர்ந்தளிக்கப்படும் பொழுது, அது சுலபமாகிறது. பயனுள்ள வகையில் பகிர்ந்தளிப்பது ஒரு ஆற்றல். எல்லா ஆற்றல்களையும் போல, பகிர்ந்தளித்தலையும் நன்கு கற்றுப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இதில் உதவ உங்களுக்கு சில குறிப்புகள்.


இனம் காணுதல்


எந்த எந்தப் பணிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் அல்லது எந்தப் பணிகளைப் பகிர்ந்தளிப்பது தேவை என்பதையும், அவற்றைப் பகிர்ந்தளிக்கப்படத் தகுதியானவர்களையும் இனம் காண வேண்டும். இது வழக்கமாக பணியாளர்களுக்கு வேலைகளை ஒதுக்குவது போன்றதல்ல. பணிகளையும், அதைச் செய்யத் தகுதியானவர்களையும் சரியாக இனம் காணுதல் முக்கியம்.


அட்டவணை


நீங்கள் யாருக்குப் பணியை பகிர்ந்தளித்து அதைச் செய்யும் பொறுப்பை ஒப்படைக்கிறீர்களோ, அவர்களுக்கு அந்தப் பணி பற்றித் தேவையான முழு விவரங்களையும் தெரிவிப்பதே சிறந்த முறையாகும். காலக்கெடு குறிப்பிட்டு, எதிர்பார்க்கும் பயன்களைத் தெரிவித்து அட்டவணை தயாரியுங்கள். இதுபற்றி விவாதித்து, மீண்டும் பரிசீலனை செய்யுங்கள். பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள பணி சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை அறிய விளக்கங்களைக் கேட்டுப் பெறுங்கள். வருங்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். தெளிவான, விவரமான வரைபடத்தைத் தயாரியுங்கள். அப்பொழுதுதான், நிலவும் சூழ்நிலையில் பகிர்ந்தளிக்கப்பட்ட பணியின் பரிமாணத்தைத் தெளிவாக அறிய முடியும்.


அமைப்பு


பகிர்ந்தளிக்கப்பட்டவருக்கு பணியைச் செய்யத் தேவையான அதிகாரத்தை வழங்குங்கள். பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும், ஆதாரங்களும் ஆதரவுகளும் கிடைக்கும் என்பதை உறுதியாகத் தெரியப்படுத்துங்கள். சீராகத் திட்டமிடல் வெற்றிக்கு மூலாதாரம்.


செயல்பட அனுமதியுங்கள்


பணிகள் தடங்கல் இல்லாமல் நடைபெறட்டும். சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் தலையிடாதீர்கள். நீங்கள் பின்னணியில் இருந்துகொண்டு, பகிர்ந்தளிக்கப்பட்டவரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதியுங்கள். இது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் மிகுந்த பலன் அளிக்கக் கூடியது.


ஆதரவும் மறுபரிசீலனையும்


எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய பணியாளர்களின் கூட்டத்தை நடத்துங்கள். பணி சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா, முறையான வழியில் நடைபெறுகிறதா, கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் அவ்வாறு கவனிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று முறைகளோ அல்லது எத்தனை கூட்டம் நடைபெற வேண்டும் என்ற கருத்து நிலவுகிறதோ அத்தனை முறைகள் இந்த மறுபரிசீலனைக் கூட்டங்களை நடத்துங்கள். பகிர்ந்தளிக்கப்பட்டவர்களே, பிரச்னைகளுக்கு தீர்வு காண ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் திசைமாறிப் போனாலோ அல்லது சரியான முறையைப் பின்பற்றாமல் இருந்தாலோ அப்பொழுது மட்டுமே தலையிட்டு நெறிப்படுத்துங்கள்.


அங்கீகாரம்


முன்னேற்றங்களையும் பணிநிறைவுகளையும் வெளிப்படையாகப் பாராட்டுங்கள். பணியை செவ்வனே செய்து முடித்த நபரையோ குழுவையோ பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஊழியர்கள் நன்றாக, நலமாக விளங்கும்படி செய்யத் தயங்காதீர்கள். ஏனென்றால் அவர்களும் அதையே உங்களுக்குத் திருப்பிச் செய்வார்கள். பகிர்ந்தளிப்பவர் என்ற முறையில் தோல்விகளுக்கான அத்தனை பெறுப்புகளையும் நீங்களே முழுமையாக ஏற்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாப் பொறுப்புக்களையும், ஏற்றுக் கொண்டு பெருமையை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு அவருடன் பணிசெய்பவர்கள் விசுவாசமாக இருப்பார்கள்.

 

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.