ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 

பக்த கவி நரசி மேத்தா



தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு மிகவும் பிரியமான பாடல் ஒன்று உண்டு. அவர் வாய் அதை முணுமுணுக்காத நாளே இல்லை. 'போலோ ராம் கரோ காம்' என்று, ராமன் பெயரைச் சொல்லி வேலையைச் செய்து கொண்டே இருங்கள் என்று சொன்ன காந்திஜி, தன்னை ஒரு முழு வைணவராக உணர்ந்தார். அதன்படியே வாழவும் செய்தார். பஜனைப் பாடல்கள், நாம சங்கீர்த்தனம் மூலமே மக்களை ஒன்றுபடுத்த முடியும் என்பதை உணர்ந்து, அவற்றின் மூலமே ஹிந்துக்களை ஒன்றிணைத்தார். ஒரு குஜராத்தியரான அவர், இந்த ஹிந்து ஒற்றுமைப்பணிக்காக எடுத்துக் கொண்ட பாடல்கள் ஒரு குஜராத்திக் கவிஞருடையது.

 

அவற்றில் ஒரு பாடல்தான், மிகப் புகழ் பெற்ற 'வைஷ்ணவ ஜனதோ தேநே கஹியே...'


உண்மையான வைஷ்ணவன் எப்படி இருக்க வேண்டும் என்று கவிஞர் பாடிய பாடல் இது. 'பிறர் படும் துயர்தனை தனதெனக் கருதி, உடனே உபகாரம் செய்பவன் எவனோ அவனே வைஷ்ணவன்' என்ற இந்தப் பாடல்வரிகள் மகாத்மாவின் உள்ளத்தைத் தொட்டு விட்டது. மகாத்மா மட்டுமில்லை; குஜராத், சௌராஷ்டிரப் பகுதிகளில் உள்ள மக்கள் அந்தக் கவியினுடைய தேனினும் இனிய பாடல்களால் நாள்தோறும் பக்திச் சுவையை அனுபவித்து வருகிறார்கள். அந்தக் கவிஞர்தான் நரசிம்ம மேத்தா என்ற கிருஷ்ண பக்தர்.
 

புராதனகடம் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்த பலராம் மேத்தா என்பவர் வசித்து வந்தார். கல்விகேள்விகளில் சிறந்த அவருக்குப் பிறந்தவரே நரசிம்ம மேத்தா. பலராம் மேத்தா மிகச் சிறந்த நரசிம்ம பக்தர் என்பதால், அவருடைய இஷ்ட தெய்வமான நரசிம்மர் பெயரையே தம் புத்திரனுக்கும் சூட்டினார் அவர்.

 

பலராம் மேத்தாவின் வயது முதிர்ந்த காலத்தில் பிறந்த பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்ததால், சிறு வயதில் துடுக்குத்தனமும் படிக்காமல் ஊர் சுற்றுவதும் நரசிம்ம மேத்தாவிடம் அதிகரித்தது. இவருடைய பெற்றோர்களும் ஒருவர் பின் ஒருவராக இறையடி சேரவே, இவரின் சிறிய தந்தையான யமுனாதாஸ் பராமரிப்பில் வளரவேண்டியதாயிற்று.


யமுனாதாஸாலும் நரசிம்ம மேத்தாவின் செயல்களைத் தடுக்க முடியவில்லை. கடவுள்தான் இவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்று நினைத்து அவர் இருந்து விட்டார். யமுனாதாஸின் மகன் நரசிம்ம மேத்தாவிலும் வயதில் பெரியவர். அவரும் நரசிம்ம மேத்தாவிடம் அன்பு பாராட்டி வந்தார். அவர் மனைவிதான் குடும்பத்தை நிர்வகித்து வந்தாள்.

 

ஆனால் அவள் நரசிம்ம மேத்தா, வீட்டில் தங்களோடு இருப்பதை விரும்பவில்லை. ஒருநாள் பள்ளிப் பிள்ளைகளுடன் சண்டையிட்டு வந்த நரசியை அவள் கடுமையாகத் திட்டிவிட்டாள். ஒழுங்காகப் படிக்காமல் ஊர் சுற்றி வந்தால் இனி சோறு கிடைக்காது என்று திட்டியதால் மனம் நொந்த நரசி, தன்னுடைய செயல்களை மனத்தில் நினைத்துக் கொண்டே, அருகிலிருந்த காட்டுக்கு ஓடினார்.


அந்தக் காட்டில் இடிந்து பாழ்பட்ட ஒரு கோயில் இருந்தது. அதன் எதிரே அழகிய ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் இறங்கி, பசித்த வயிறுக்கு தண்ணீர் அருந்தி, அந்தக் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது தன் தந்தை சொன்ன துருவன் கதை நினைவுக்கு வந்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பதுபோல், சிறுவன் துருவன் தவம் செய்து இறையருள் பெற்றது நினைவுக்கு வர, புராதனமான அந்த சிவாலயத்தில் இருந்த அழகிய லிங்கத்தின் எதிரே அமர்ந்து தாம் முன்னர் கேட்ட நாமாவளிகளை சொல்லத் தொடங்கினார்.


நேரம் கடந்துகொண்டே இருந்தது. திடீரென்று ஒருவர் நரசியின் தோள் தொட்டு எழுப்புவதைப்போல் உணர்ந்தார் நரசி. பார்த்தால் ஜடாமகுடதாரியான சிவபெருமான் அங்கே நின்றார். "நரசி, நீ திருமாலுக்குப் பணி செய்யப் பிறந்தவன்; உன் உறுதி வியக்க வைக்கிறது. பத்து நாள்களாக நீ செய்த தவம் கண்டு அன்னை பார்வதி மகிழ்ந்தாள். எழுந்து என்னுடன் வா!" என்று அழைத்தார். நரசியால் எழக்கூட முடியவில்லை. கால்கள் துவண்டன. மெல்ல சோர்வகற்றி, சிவபிரானைப் பின் தொடர்ந்தார்.

 


கோயிலிலிருந்து வெளியே வந்த சிவபிரான், நர்சியை அழைத்துக் கொண்டு அருகிருந்த நீர்நிலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்த ஒரு அரச மரத்தில் ஏற்றி, நரசியை அருகே வைத்துக் கொண்டு, அந்த வெட்டவெளியைக்காட்டி, நரசி "அங்கே பார்" என்றார். சிவனார் காட்டிய திக்கில் பார்த்த நரசிக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

 

அங்கே கண்ணபிரான் கோபியருடன் கைகோர்த்து ஆடிய ராஸலீலைக் காட்சியைக் கண்டார். எத்தனை எத்தனை கிருஷ்ணர்கள், எத்தனை எத்தனை கோபியர்...? இவர்களில் உண்மையான கிருஷ்ணர் யார்? - கேள்விகள் நரசியின் உள்ளத்தில் பிறந்தது. சிவபெருமான் நரசியை, கிருஷ்ணன் அருள் வேண்டுமாறு பணித்தார்.


திடீரென்று இவர்கள் இருந்த அரசமரத்தடி அருகில் வந்தான் கண்ணன். நரசி அவர் பாதங்களில் பணிந்தார். "நீ கண்ட இந்த பிருந்தாவனக் காட்சியையே நீ பாடல்களாகப் பாடு. உன் வாக்கிலே அருட்கவி பிறக்கும்." என்று சொல்லி, தமது வனமாலையில் இருந்த துளசித் தளத்தை நரசியின் வாயில் இட்டார் கண்ணன். பின் இருவரும் மறைந்துவிட, தொடர்ந்து நரசி அந்தக் கோயிலிலேயே அமர்ந்து, சிவபிரானைத் துதிப்பதில் ஈடுபட்டார்.

 

அவர் மனமுருக ஒலித்த "ஓம் நமச்சிவாய" மந்திரங்கள் அந்தப் பகுதியில் எதிரொலித்தது.
நரசி மேத்தாவைக் காணாமல் அங்கே வீட்டில் மிகுந்த கவலையோடு இருந்தார் யமுனாதாஸ். தேடாத இடமெல்லாம் தேடித்திரிந்தார். மருமகளை அழைத்துக் கேட்டபோது, அவர் தாம் நரசியைத் திட்டியதையும் அவன் அழுது கொண்டே சென்றதையும் சொல்லி மன்னிக்குமாறு வேண்டினாள்.


திடீரென ஒருநாள் மாடுமேய்க்கும் சிறுவன் ஒருவன், யமுனாதாஸிடம் வந்து, தாம் காட்டில் அந்தப் பாழடைந்த கோயிலில் மந்திர ஒலி கேட்டதைச் சொல்லிச் சென்றான். யமுனாதாஸுக்கு கிலி பிடித்தது. காரணம் அந்தக் காலத்தில் சாக்தர்கள் நரபலி இடுவதுண்டு. அப்படி நரசி மேத்தாவை அவர்கள் பிடித்துக் கொண்டு போய் நரபலி இடப்போகிறார்களோ என்ற பயத்தால் அவர் அந்தக் கோயிலுக்கு ஓடினார்.

 

ஆனால் அந்தக் கோயிலில் எலும்பும் தோலுமாக நரசி தியானத்தில் இருந்ததைப் பார்த்து அழுது அரற்றி கட்டியணைத்தார். கண்விழித்த நரசி, கண்ணன் மீது அருமையான பாடல் ஒன்றைப்பாடினார். படிக்காத பையனான நரசியின் திருவாக்கிலிருந்து எழுந்த கவிச்சுவையைக் கேட்ட யமுனாதாஸ், ஆச்சர்யத்தால் அகல விழித்தார். நரசி அங்கு நடந்தவைகளைச் சொல்லி, தாம் இந்தக் கோயிலிலேயே இருந்துவிடுவதாகச் சொல்ல, யமுனாதாஸோ திரும்பவும் வீட்டுக்கு வந்து அங்கிருந்துகொண்டே பக்தியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

 

இறை சம்மதத்தோடு வீட்டுக்குத் திரும்பினார் நரசி மேத்தா.

 


நாட்கள் கடந்தன. நரசியும் இல்லறத்தில் இறங்கினார். அவருக்குத் திருமணம் ஆயிற்று. ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரு குழந்தைகள் பிறந்தனர். நரசி தந்தைப் பொறுப்பைத் தாங்கினார். அவருடைய இறைக் கவிதைப் பணியும் நடந்து வந்தது.
அவருடைய உள்ளத்தை உருக்கும் கவிதைகள் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. இந்நிலையில் தம் பக்தரின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தும் இரண்டுசந்தர்ப்பத்தை அமைத்துத் தந்தான் கண்ணன்.

புராதனகடம் ஊருக்கு கொஞ்ச தூரத்தில் சியாமளா நகரம் இருந்தது. அங்கே திரிபுராதகர் என்ற பெருந்தனக்கார அந்தணர் இருந்தார். அவருக்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அவளை செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் கொடுக்க எண்ணினார் அவர்.
அந்த ஊரிலே இருந்த கிருஷ்ணபட்டர் என்பவர், அந்தப் பெண்ணை நரசியின் பையனுக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார். அந்த எண்ணத்தை நரசியிடமும் தெரிவித்தார். ஆனால் நர்சிக்கு அதில் விருப்பமில்லை.ஏழையான தாம் எங்கே, பெருந்தனக்காரரான திரிபுராந்தகர் எங்கே என்று சொல்லி அதைமறுத்துவிட்டார்.

 

ஆனால் கிருஷ்ண பட்டரோ திரிபுராந்தகரிடம் சென்று நரசியின் பையனைப் பற்றிச் சொல்லி, அவரின் பையனையே இந்த மகளுக்கு மணமுடிக்கவேண்டும் என்றார். ஊருக்குப் பெரியவரான கிருஷ்ணபட்டரின் சொல்லைத் தட்டமுடியாமல் தவித்த திரிபுராந்தகர், தம் கவுரவத்துக்கு ஏற்ப நரசியால் சீர் செய்யமுடிந்தால் ஒப்புக் கொள்வதாகச் சொல்ல, கிருஷ்ண பட்டர் ஒரு நாளும் குறித்து திருமணத்துக்குத் தயாராக ஏற்பாடுகள் செய்து வைக்குமாறு சொன்னார்.


நர்சியிடம் வந்து திருமணம் குறித்து வற்புறுத்திச் சொல்லிச் சென்ற கிருஷ்ணபட்டர், திரிபுராந்தகரிடம் சென்று, "மேத்தா சீர்வரிசைகளுடன் குறித்த் நாளில் வருவார். தயாராக இருங்கள்" என்று சொல்லிவிட்டார்.


குறித்த நாளும் வந்தது. தமது வழக்கமான பஜனை கோஷ்டிகள் புடைசூழ நரசி திருமணத்திற்கு தம் மகனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அது திருமண கோஷ்டியாக இல்லாமல் பஜனை கோஷ்டியாகத்தான் தெரிந்தது. கோஷ்டியில், பாண்டுரங்க விட்டல, பண்டரிநாதவிட்டல என, விட்டல் விட்டல் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.


இந்த விவாக கோஷ்டியை பாண்டுரங்கனும் ருக்மிணிப் பிராட்டியும் எண்ணிப் பார்த்தனர். இப்படியே சென்றாரானால் தம்பக்தர் அவமானப் படுவார் என்று எண்ணினர். தம் பக்தரின் அவமானத்தைத் தாங்கவொண்ணாத பாண்டுரங்கனும் ருக்மிணித்தாயாருமாகச் சேர்ந்து வியாபாரியும் அவர் மனைவியுமாக வேடம் தாங்கி, பொன்னும் பொருளும் ஆடை ஆபரணங்களும் எடுத்துக் கொண்டு வியாபாரிகளான செல்வர்கள் கூட்டம் புடை சூழ, இந்த பஜனை கோஷ்டி வருவதற்கு முன்னால் சியாமளா நகர் சென்றனர்.

 
தாம், பண்டரிபுரத்தில் இருக்குன் நரசியின் கடையை நிர்வகிக்கும் சியாமள நாதன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார் அவர். இந்தக் கோஷ்டியைப் பார்த்து வாய் பிளந்தார் திரிபுராந்தகர். நரசி வெறும் ஏழைதானே, அவர் திருமணத்திற்கு வரமாட்டார் என்று ஒரு ஏற்பாடும் செய்யாதிருந்த அவர் உடனே மண ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி பணிகளை முடுக்கி விட்டார். பின்னர் வந்து சேர்ந்த நரசி கோஷ்டியினருக்குத் தக்க மரியாதைகள் தந்து மணம் கோலாகலமாக நடந்தேறியது.

இன்னொரு சமயம், நரசியின் நம்பகத்தன்மையையும் பக்தியையும் உணர்ந்த ஒருவர், தாம் பண்டரிபுரம் போவதாகவும், வழியில் திருடர் பயம் உள்ளதால் தாம் கையில் வைத்திருக்கும் பணத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு திருப்பித் தரவேணும் என்றும் சொன்னார். அதற்கு பண்டரிபுரத்தில் சியாமளநாதர் என்று தம் நண்பர் ஒருவர் இருப்பதாகச் சொல்லி, அவரிடம் பணம் பெற்றுக்கொள்ளுமாறு உண்டியற்சீட்டு எழுதிக் கொடுத்தார் நரசி. ஆனால் பண்டரிபுரத்தில் நரசிக்குத் தெரிந்தவர் யாரும் கிடையாது. இருப்பினும் நரசியின் வாக்கைக் காக்க பணடரிநாதனே சியாமளநாதனாக மீண்டும் வந்து, அந்த நபருக்கு குறிப்பிட்ட பணத்தைத் தந்து, பக்தரின் மானம் காத்தார்.
 

- செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம்

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.