|
|
சாளக்கிராம
மகிமை
சாளக்கிராமம் என்பது மகாவிஷ்ணுவின் உருவங்களில் ஒன்று. இமயமலைக்கு அருகே
கண்டகி மலையில் உற்பத்தியாகிறது இந்தச் சாளக்கிராமம். கண்டகி நதிதீரத்தில்
உண்டாகக் கூடிய தெய்வாம்சம் பொருந்திய இயற்கைச் சிலா ரூபம் சாளக்கிராமம்.
இதில் விஷ்ணு முத்திரை இருக்கும். இதனை அறிவியல் ரீதியாக அணுகுபவர்கள்
Fossil Stone என்ற அமோனைட் படிவங்களுடன் கூடி உருவாக்கப்பட்டது என்பர்.
இந்த சாளக்கிராமத்தை வைணவ சம்பிரதாயப்படி பல வகைகளாகப் பிரிப்பர்.
நரசிங்கம், தாமோதரம், வாமனன், நாராயணி, லக்ஷ்மி... இப்படிப் பல வகையாகப்
பிரிப்பர். இவை கருப்பாகவும் உருண்டையாகவும் வெளிர் கருப்பாகவும், சில
இடங்களில் புழு அரித்த துளைகளுடனும் காணப்படும். உள்ளே உள்ள கோடுகளையும்
துளைகளையும் வைத்து வடபாரத சாதுக்கள், விஷ்ணுவின் ரூபத்தை நிர்ணயம்
செய்வர். நிலத்தில் உண்டாவது-ஸ்தல ஜன்யம். நீரில் உண்டாவது - ஜலஜன்யம்.
நீரிலுள்ள உயிரினங்களால் உண்டாவது - கிருமிஜன்யம்.
சாளக்கிராமத்தை வெள்ளிக்கம்பிகளில் கட்டி மாலையாக்கி, திருக்கோயில்களில்
பெருமாள் திருமேனியில் சாத்துவர். விஷ்ணு ஆலயங்களில் தினசரி வழிபாட்டிற்கு
பிராண சாதனமாக சாளக்கிராமத்தைக் கொள்வார்கள்.
ராமர் தன் முடிசூட்டு விழாவின் போது விபீஷணனுக்கு ஒரு சாளக்கிராமத்தைப்
பரிசாகக் கொடுத்தார். அவர் அதை வாங்கிக்கொண்டு இலங்கைக்குச் செல்லும்
வழியில், காவிரிக்கரையில் வைத்தபோது அங்கேயே ஸ்தாபிதமாகிவிட, திருவரங்கத்
தலமான சாளக்கிராமத் தலம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
பெரும்பாலானவர்களுக்கு எத்தனைசாளக்கிராமங்கள் வைத்துக் கொள்வது என்பதில்
குழப்பம் உண்டு. சிலருக்கு கருத்து வேறுபாடுகளும் உண்டு - இந்த விஷயத்தில்!
இல்லங்களில் திருவாராதனத்திற்கு 2,4,6 என்ற இரட்டைப் படை வரிசையில் வைத்து
வழிபடுவார்கள். ஆறு இருந்தால் அரை மண்டலம், 12 உள்ளதை ஒரு மண்டலம் என்பர்.
சாளக்கிராம ஆராதனையின் ஓர் பகுதி....
தினமும் ஆசாரம் அனுஷ்டித்து, சாளக்கிராமத்திற்கு பாலால் திருமஞ்சனம்
செய்வித்து, துளசியுடன் அதனை தீர்த்தப் பிரசாதமாகக் கொள்ள வேண்டும். பூஜை
செய்து முடித்த பின் பட்டுத் துணியில் சுற்றி வைத்து விட வேண்டும்.
சிறுவர்களூம் பெண்களும் அதனைத் தொடக்கூடாது. பூஜை செய்யாமல் இருக்கும்
நிலை நிரந்தரமாக ஏற்பட்டால், அதனை ஏதேனும் ஓர் பெருமாள் கோவிலில் சேர்த்து
விடவேண்டும். சிலர் தங்கள் வீட்டில் தானியங்களில் வைத்திருப்பர்.
வட பாரதத்தில் வைதீகத்திற்கும், தென்பாரதத்தில் பெரும்பாலும் பூஜைக்குமே
சாளக்கிராமங்கள் பயன்படுத்தப் படுகின்றன. சாளக்கிராமங்கள் - விலை
மதிப்பற்றவை. தெய்வாம்சம் பொருந்தியவை. இவற்றை வழிபட தனித்தனி பூஜை
அறைகளும் மூல மந்திரங்களும் உள்ளன.
சாளக்கிராமங்கள் போன்ற வடிவில் மஞ்சள் அல்லது பொன்னிறமான அண்ட வடிவக்
கல்லும் உண்டு. அவற்றில் சில பூஜைக்குரியவை. விக்னேஷ்வர பூஜைக்கு உரிய
கணநாதம் என்ற பெயருள்ள கற்கள் நேபாளத்தில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
|